சித்திரை மாதப் பிறப்பான இன்று, பிலவ ஆண்டு முடிந்து, சுபகிருது எனும் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுதும் கோலாகலமாக, கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய முறைப்படி வீடுகளில் சித்திரை கனி கண்டு கொண்டாட்டத்துடன், மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
ஒரு தமிழ் ஆண்டு என்பது, வானியல், அறிவியல் ரீதியாக அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பதிப்பு. பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றி வர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 வினாடிகள் ஆகிறது. இதுவே தமிழ் ஆண்டின் கால அளவு.சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது துவங்கும் ஆண்டு, மீன ராசியில் இருந்து வெளியேறும்போது முடிகிறது.
எனவே, தமிழ் ஆண்டின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதன் அடிப்படையிலேயே ஆண்டு காலம் கணிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று பிலவ ஆண்டு முடிந்து, தமிழ்ப் புத்தாண்டான சுபகிருது பிறக்கிறது.கொரோனா தொற்றின் கோரத் தாண்டவம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள மக்கள், இனி வரும் நாட்கள் நிம்மதியான நாட்களாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், தமிழ்ப் புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்கின்றனர்.தமிழ்ப் புத்தாண்டு அன்று, புத்தாடை அணிந்து கோவிலுக்கு செல்வது, பொங்கல் வைத்து வழிபடுவது, உறவினர்களுக்கு இனிப்பு வழங்குவது, பெரியோரிடம் ஆசி பெறுவது வழக்கம்.சித்திரை மாதப் பிறப்பை, குமரி மாவட்ட மக்கள், 'சித்திரை கனி காணுதல்' எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். முன் தமிழர்கள் அனைவரும், சித்திரை கனி காணும் விழாவை கொண்டாடி வந்தனர். காலப்போக்கில் அது மறைந்தது.
சித்திரை கனி காணுதல்
தாம்பாளத் தட்டில், முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் பிற பழங்கள், ஒரு எலுமிச்சம் பழம், வெற்றிலை, பாக்கு, பூக்கள், மஞ்சள், குங்குமம், நகைகள், ரூபாய் நோட்டுக் கட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றை, கடவுள் படத்தின் முன் வைத்துக் கொள்ள வேண்டும். புத்தாண்டு அன்று காலை எழுந்தவுடன், தாம்பாளத் தட்டில் உள்ள கனிகளை பார்த்தபடி கண்விழிக்க வேண்டும்.உணவில், இனிப்பு, கசப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என, அறுசுவை சமையல் செய்து, இறைவனுக்கு படைத்து உண்ண வேண்டும். வாழ்க்கை என்பது பல்சுவை கொண்டது என்பதை, இந்த உணவு பதார்த்தங்கள் உணர்த்துகின்றன.
மேலும், வீட்டில் இருக்கும் முதியவர்கள், வயதில் சிறியவர்களுக்கு பணம் கொடுத்து வாழ்த்துவது வழக்கம். புத்தாண்டு அன்று, குறைந்தது இரண்டு நபர்களுக்காவது அன்னதானம் செய்யலாம்.தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, இன்று கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது.
பல இடங்களில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தவும் தயாராகி வருகின்றனர். பல கோவில்களில் பஞ்சாங்கம் வாசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்புகள் முற்றிலும் நீங்கி, பொருளாதார ரீதியான பாதிப்புகளும் நீங்கி, இந்தாண்டு மகிழ்ச்சியும், வளமும் அளிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே மக்களின் பிரார்த்தனை.தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் தமிழக மக்களுக்கு, கவர்னர் ரவி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment