Tuesday, April 5, 2022

சொத்து வரி உயர்வால் மக்கள் கண்ணீர்: ஆர்ப்பாட்டத்தில் பன்னீர்செல்வம் ஆவேசம்.

 ''சொத்து வரியை உயர்த்தி, தி.மு.க., அரசு மக்களை கண்ணீரில் மிதக்க விட்டுள்ளது. அவர்களின் கண்ணீருக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசினார்.

 சொத்து வரி உயர்வால் மக்கள் கண்ணீர்: ஆர்ப்பாட்டத்தில் பன்னீர்செல்வம் ஆவேசம்


சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க., சார்பில் மாவட்ட தலைநகரங்களில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மாவட்டம் சார்பில், வள்ளுவர் கோட்டம் அருகே, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது: நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி, மக்களை நம்ப வைத்து தி.மு.க., ஆட்சியில் அமர்ந்துள்ளது. 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம், மீண்டும் ஒரு நிலையான இடத்திற்கு வரும் வரை, சொத்து வரி உயர்த்தப்படாது' என, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர்.
அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு, நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரியை, 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். 'கொரோனா முழுமையாக ஓயவில்லை; ஜூன் மாதம் நான்காவது அலை வரும்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறுகிறார். இந்நிலையில், சொத்து வரியை உயர்த்தி, தி.மு.க., அரசு மக்களை கண்ணீரில் மிதக்க விட்டுள்ளது.
தேர்தலின் போது தி.மு.க., 505 வாக்குறுதிகளை அளித்தது; ஆனால், எதையும் நிறைவேற்ற வில்லை. ஆட்சியில் இருப்பவர்களின் சுயநலம், இரட்டை வேடம், மக்களுக்கு புரிந்துள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர்; கண்ணீர் வடிக்கின்றனர். இந்த கண்ணீர், தி.மு.க., அரசை படு பாதாளத்தில் தள்ளும். மக்களின் கண்ணீருக்கு, தி.மு.க., அரசு பதில் சொல்ல வேண்டிய காலம் வெகுதொலைவில் இல்லை.
'ஸ்டாலின் வரப் போறாரு... விடியல் தரப் போறாரு...' என்றனர்; எந்த விடியலும் தரவில்லை. மக்கள் மீது திணித்துள்ள சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். திரும்பப் பெறா விட்டால், மக்கள் போராட்டமாக, தமிழகம் முழுதும் இது வெடிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


ஓட்டுக்கு வேட்டு

திருச்சி, ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசியதாவது:கொரோனா தொற்று காரணமாக, இரண்டு ஆண்டுகளில் வேலை இழப்பு, வருமானம் இழப்பு போன்றவற்றால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 125 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2018ல், வீட்டு வரியை உயர்த்த முடிவு செய்தபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அ.தி.மு.க., அரசு அந்த முடிவை கைவிட்டு விட்டது. ஆனால், விடியா அரசு, வேண்டுமென்றே மக்கள் மீது வரி உயர்வை சுமத்தி உள்ளது.

மற்ற மாநிலங்களின் வரி உயர்வு பற்றி குறிப்பிடும் தி.மு.க., அரசு, டில்லியின் வரி விதிப்பு பற்றி கூறவில்லை. அங்குள்ள வரிவிலக்கு பற்றி கூறாமல் மறைத்து விட்டனர்.முதல்வர் விளம்பர பிரியராக இருக்கிறார். ஊடகங்கள், பத்திரிகை விளம்பரங்களால் தான், தி.மு.க., அரசு தாக்கு ப்பிடித்துக் கொண்டுள்ளது.

விளம்பரம் இல்லாவிட்டால், கண்ணுக்குத் தெரியாமல் காற்றில் கரைந்து போயிருக்கும். எதுவுமே செய்யாமல், எல்லாவற்றையும் செய்தது போன்ற தோற்றத்தை தி.மு.க., உருவாக்குகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒருவிதமாகவும், ஆட்சிக்கு வந்த பின் ஒருவிதமாகவும் பேசி, தி.மு.க., தலைவர் இரட்டை வேடம் போடுகிறார்.


சட்ட விரோதம்


துபாய்க்கு, குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா போனார் ஸ்டாலின். அதற்கான விமான செலவை, தி.மு.க., ஏற்றுக் கெண்டால், அந்த பணத்தில் அரசு அதிகாரிகள் சென்றிருப்பது சட்ட விரோதமானது. கடந்த 10 மாதத்தில் கொள்ளையடித்த பணத்தை, துபாயில் முதலீடு செய்யச் சென்றுள்ளார் ஸ்டாலின்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதன் பரிசாக வீட்டு வரியை உயர்த்தி, ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைத்துள்ளனர். பம்பர் பரிசாக, விரைவில் மின் கட்டணம், குடிநீர், போக்குவரத்து கட்டணம் போன்றவை உயர்த்தப்படும். 2024 லோக்சபா தேர்தலோடு சட்டசபை தேர்தலும் வரலாம். இன்னும் கொஞ்ச நாளுக்காவது மக்களுக்கு நல்லதை செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...