'வரும் லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, ஓட்டு சதவீத பலம் கணக்கை நிரூபிக்க பேரவை துவக்குவோம்' என, சசிகலாவிடம், அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என, சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடுக்கு செல்வோம் என, சசிகலா கூறியுள்ளார்.
தனியார், 'டிவி' சேனலுக்கு பேட்டி அளித்த சசிகலா, 'என் அரசியல் பயணத்திற்கான நேரம் வந்து விட்டது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். மத்திய அரசால் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த நெருக்கடியும் இல்லை. 'கடந்த 1996ம் ஆண்டு முதல் வழக்குகளை சந்தித்து வருகிறோம். வழக்குகள் எங்களுக்கு புதியதல்ல' என, ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பதில் அளித்துள்ளார்.
சசிகலாவின் தீவிர அரசியல் பயண முடிவுக்கு, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, தேனி கண்ணன் உள்ளிட்ட சில ஜாதி கட்சிகளின் தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ள சசிகலாவிடம், அவரது ஆதரவாளர்கள், 'இனி அ.தி.மு.க.,வை நம்பி இருக்க வேண்டாம். சசிகலா பேரவை துவக்கி நேரடி அரசியலில் ஈடுபடலாம்' என்ற ஆலோசனையை வழங்கி உள்ளனர்.
இது குறித்து, சசிகலா ஆதரவாளர்கள் கூறியதாவது:அ.தி.மு.க.,வில் இனி இடமில்லை என்பது நீதிமன்றம் உத்தரவின் வாயிலாக நிரூபணமாகி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அரசியலை விட்டு ஒதுங்கும் அறிவிப்பை வெளியிடாமல், அ.தி.மு.க.,வுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால், சசிகலாவின் ஓட்டு வங்கி கணக்கு பலத்தை நிரூபித்திருக்க முடியும்.
அதை செய்ய சசிகலா தவறியதால், தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய எம்.எல்.ஏ.,க்கள் எளிதாக வெற்றி பெற்றனர். அதனால் தான் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டாம் என்ற முடிவில், அ.தி.மு.க., வினர் உறுதியாக உள்ளனர்.
எனவே, தன் பலத்தை நிரூபித்து காட்டும் வகையில், வரும் 2024ம் ஆண்டின் லோக்சபா தேர்தலில், சசிகலா பேரவை சார்பில் 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். அவர்கள் வாங்குகிற ஓட்டு சதவீதம் கணக்கின் பலம் நிரூபிக்கும்பட்சத்தில், அ.தி.மு.க.,வில் சசிகலா இணைவதற்குரிய முக்கியத்துவம் தானாக தேடி வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment