வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற இலக்கியங்கள்.அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால் உருவாக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை இங்கே விட்டார்.
சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம். கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில் மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது.
வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால், பிறவிக்கடலையே கடக்கலாமே என எண்ணினார். அதற்கேற்ப துர்வாச முனிவர் அருகே வர, இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்தது.
''ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ (தவளையாய் மாறு). வைகை நதியில் மூழ்கிக்கிட,” என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது.சுதபஸ் அன்று முதல் மண்டூகர் ஆனார். தவளையாக மாறி ஆற்றில் வசித்தார். மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார். அவ்வப்போது தரைக்கு வருவார்.
காரணம் என்ன!
எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம் கிடைக்கும் என்பது துர்வாசர் கொடுத்த சாப விமோசசனம். பெருமாளின் திருவடியைப் பார்த்தாலே சொர்க்கம்... ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம். பெருமாளின் திருவடியைத் தான் முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக அழகைத் தரிசிக்கிறோம். அந்தத் திருவடி நம்மை மோட்சத்திற்கே கொண்டு சென்று விடுமாம்.
பார்த்தாலே இப்படி என்றால்....திருவடி பட்டால் என்னாகும்!அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் குதிரையில் ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார்.ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே!“அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய். மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார்.நமக்கும் அதே நிலை தான்! ஆற்றில் இறங்கும் அழகரை தரிசித்தால் போதும். நல்வாழ்வு அமைவதோடு, மோட்ச கதியும் உண்டாகும்.
சர்க்கரை வழிபாடு
அழகர் தரிசனம் நம் வாழ்வில் இனிமையைக் கொடுக்கும். அதனால் தான் அவர் ஆற்றில் இறங்கும் போது, பக்தர்கள் செம்பில் சர்க்கரை நிரப்பி நிவேதனம் செய்து அனைவருக்கும் தானம் அளிப்பர். “இனிக்கும் சர்க்கரை போல், எங்கள் வாழ்வையும் இனிமையாக்கு அழகர் பெருமானே!” என்று அப்போது வேண்டுவர். தற்காலத்தில் சர்க்கரைக்கு பதிலாக சாக்லேட் வைப்பதும் வழக்கத்தில் உள்ளது.இவரே நிரந்தர நீதிபதிஅழகர்கோவிலில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிக சக்தி வாய்ந்தவர். 'பதினெட்டாம்படியான்' என பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை வணங்கினால் நினைத்தது கைகூடும். இவரது சன்னதி நீதிமன்றம் போல விளங்குகிறது. இவரை சாட்சியாக வைத்து முக்கிய விவகாரங்களை கிராமமக்கள் பேசித்
தீர்க்கின்றனர். இந்த வகையில் இவர் நிரந்தர நீதிபதியாக விளங்குகிறார்.
புராணம் சொல்றதை கேளுங்க!
அழகர் வீற்றிருக்கும் மலை என்பதால் 'அழகர்மலை' என்று சொன்னாலும் தலவரலாற்றில் வேறு பெயர்களும் உள்ளன. திருமாலிருஞ்சோலை, உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்ரி, இடபகிரி என்பனவாகும். நாலாபுறமும் மலை பரவிக் கிடந்தாலும் பெருமாள் மலையின் தெற்கில் கோயில்
கொண்டிருக்கிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றாலும் சிறப்பு மிக்கது. வராக, பிரம்மாண்ட, வாமன, ஆக்நேய புராணங்களில் இதன் சிறப்பு கூறப்பட்டுள்ளது.
அழகரை பூஜிக்கும் எமதர்மன்
ஒருமுறை நியாயஸ்தரான எமதர்மராஜனுக்கே சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலோகத்தில் தற்சமயம் கோயில் இருக்கும் அழகர்மலைக்கு வந்தார். விருஷபகிரி என்னும் பெயர் கொண்ட இம்மலையில் தவம் செய்தார். இந்த மலைத்தொடர்
திருப்பதியைப் போல ஏழு மலைகளை கொண்டது. தர்மராஜனின் தவத்தை மெச்சிய பெருமாள் காட்சி தந்தார். கடவுளின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம், ''தினமும் உன்னை ஒரு முறையாவது பூஜை செய்ய வரம் தர வேண்டும்''என்று கேட்டார். பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்தஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு வேண்டிய, தர்மராஜன் விருப்பத்தின் பேரில் இத்தலத்தில் திருமால் எழுந்தருளினார். விஸ்வகர்மாவால் இங்கு சோமச்சந்த விமானம் வட்ட வடிவில் அமைக்கப்பட்டது. சங்கு, சக்கரம், கதை, வில், வாள் தாங்கிய நிலையில் கருவறையில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
நான்கு தாயார் தரிசனம்
பங்குனி உத்திரநாளில் அழகர் கோவில் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அன்று காலையில் அழகர் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆண்டாள், கல்யாண சுந்தரவல்லி ஆகிய நான்கு தாயார்களுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு நான்கு தாயார்களுடன் திருமண வைபவம் நடந்தேறும். அதன் பின் சுவாமி, தாயார்களுடன் பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவார். அன்று ஒருநாள் மட்டுமே பெருமாளை நான்கு தாயார்களுடன் ஒன்றாக தரிசிக்க முடியும்.கல்வி தெய்வங்கள்ஹயக்ரீவரும், சரஸ்வதியும் கல்வி தரும் தெய்வங்கள். இவர்கள் இருவரும் அழகர்கோவிலில் காட்சி தருகின்றனர். கல்வி தேவதைகளான இவர்களை வணங்கினால் கல்வி வளர்ச்சி, ஞானம் உண்டாகும். ஒரே தலத்தில் இந்த இருவரையும்
தரிசிப்பது சிறப்பு.ஆறு ஆழ்வார்கள்ஆழ்வார்களில் பெரியவாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் ஆறு ஆழ்வார்கள் அழகர்கோவில் மலை, பெருமாளைப் பாடியுள்ளனர். இவர்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 128.
யாகம் செய்த புண்ணியம்
வால்மீகி ராமாயணம், வியாசரின் மகாபாரதம், சுகபிரம்மத்தின் பாகவதம் ஆகிய நுால்களிலும் அழகர்கோவிலின் பெருமை கூறப்பட்டுள்ளது. சித்ரகூட மலையில் ராமர், லட்சுமணர், சீதை தங்கியிருந்த பகுதி அழகர்மலையை ஒத்திருந்ததாக வால்மீகியின் குறிப்பு உள்ளது. பாண்டவர்களில்
தர்மர் அழகர்மலைக்கு தீர்த்தயாத்திரை வந்ததாக வியாசர் கூறியுள்ளார். பலராமர் பாண்டிய தேசத்தில் உள்ள விருஷபாத்ரி (அழகர்மலை) மலைக்கு தரிசித்து விட்டு சேதுக்கரைக்குப் புறப்பட்டதாக பாகவதம் கூறுகிறது. இந்த மலையைத் தரிசித்தவர்கள் வாஜபேய யாகம் செய்த புண்ணியம் அடைவர்
என நாரதர் கூறியதாக மகாபாரதம் கூறுகிறது.மல்லிகை மண்டபம்108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் தலம் மதுரை அழகர்கோவில். இங்கு மலை மீது நுாபுர கங்கை தீர்த்த மண்டபத்தின் காவல் தெய்வம் ராக்காயி அம்மன். ஆங்கிரஸ முனிவரின் மகளாக இவள் கருதப்படுகிறாள். அமாவாசையன்று நுாபுர கங்கையில் நீராடி, ராக்காயி அம்மனை வழிபட்டால் முன்னோர் சாபம் நீங்கும். மல்லிகை கொடிகள் அடர்ந்த பகுதியாக இருந்ததால் இந்த மண்டபத்தை 'மாதவி மண்டபம்' என அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment