Friday, December 9, 2022

எல்லோரும் அந்த சரியான தருணத்திற்காகதான் காத்துக் கொண்டிருக்கிறோம்.

 ஒரு ஊரில் ஒரு பெரிய ஞானி இருந்தார். அவர் படுக்கையில் இருந்தார். இன்னும் கொஞ்ச நேரம்தான் இந்த உலகத்தில் இருக்கப் போகிறார். அவரைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம். ஏற்கனவே அவருடைய உபதேசங்களை கேட்டவர்கள் பலபேர் வந்து அவரைச்சுற்றி நிற்கிறார்கள். அந்த ஞானி மெதுவாக கண்ணை திறந்து பார்க்கிறார். எல்லோரும் அவருடைய கடைசி வார்த்தையை கேட்பதற்கு ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஞானி மெதுவாக எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். நான் என்னுடைய வாழ்நாள் பூராகவும் உங்களுக்கு நிறைய போதனைகள் சொல்லிக்கொண்டு வந்தேன். பேரானந்தம் , மகிழ்ச்சி , தியானம், இதைப்பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறேன். இப்போது நான் வேறு ஒரு கரைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். இனிமேல் திரும்பி வரமாட்டேன்.
நீங்கள் நான் சொன்னதை எல்லாம் கேட்டீர்கள். ஆனால் எதையும் நடைமுறைப்படுத்தி பார்க்கவில்லை. எல்லாம் கேட்டது மட்டுமே பின்னர் அதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தீர்கள். மேலும் அதைத் தள்ளிப் போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை . இப்போது நான் போய்க் கொண்டிருக்கிறேன் உங்களில் யாராவது என்னோடு வருவதற்கு தயாரா ?என்று கேட்டார்.
அவ்வளவுதான் யாரும் வாய் திறக்கவில்லை. ஒரே மௌனம். சத்தமே இல்லை. ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டே நிற்கிறார்கள் . அந்தக் கூட்டத்தில் ஒரு ஆள் அந்த ஞானி உடன் 40 வருடத்துக்கு மேலாக இருக்கின்றவன் அவனும் வாய் திறக்காமல் இன்னொருத்தன் முகத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
இந்த சமயத்தில் பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவன் கையை தூக்கினான். ஞானி அவனைப் பார்த்தார் சரி ஒருவனாவது நம்மோடு வருவதற்கு தயாராக இருக்கிறான் என்று நினைத்தார். ஆனால் அந்த ஆள் என்ன சொன்னார் தெரியுமா?
ஐயா நீங்கள் கேட்கும்போது நான் உடனே எழுந்து இருக்க வில்லை. கையை மட்டும் தான் தூக்கினேன். என்ன காரணம் என்றால் நான் எப்படி அடுத்த கரைக்கு வந்து சேர்வது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அந்த விவரத்தை மட்டும் உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இப்போது நான் உங்களுடன் வருவதற்கு தயாராக இல்லை. எவ்வளவோ காரியங்கள் நான் இன்னும் இங்கே முடிக்க வேண்டியிருக்கிறது. வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கிறார். என்னுடைய மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டி இருக்கிறது. அதனால் இன்றைக்கு உங்களோடு வர முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் இப்போது உங்களுடன் அடுத்த கரைக்கு வந்தால் திரும்பி வர முடியாது என்று சொல்கிறீர்கள். அதனால் இப்போது நான் வரவில்லை. இன்னொரு நாள் நிச்சயமாக அங்கு வந்து உங்களை சந்திக்கிறேன்.
அதனால் நீங்கள் இன்னொரு தடவை அந்தக் கரையை அடைவது எப்படி என்பதை எங்களுக்கு விளக்கமாக சொல்லவேண்டும். ஏற்கனவே பல தடவைகள் சொல்லி இருக்கிறீர்கள். தயவுசெய்து இந்த ஒரு தடவை சொன்னீர்கள் என்றால் உதவியாக இருக்கும். அடுத்த கரையை அடைவது எப்படி என்பதை நான் ஞாபகப்படுத்தி கொள்வேன் என்றார்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? இந்த சரியான சமயம் வரவே இல்லையாம். இந்த கதை அந்த ஒரு ஆளுக்கு மட்டும் அல்ல. கிட்டத்தட்ட நம் எல்லோருக்கும் இது பொருந்தும்.
எல்லோரும் அந்த சரியான தருணத்திற்காகதான் காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக ஜோசியம் பார்க்கிறோம். கைரேகை பார்க்கிறோம். நாளைக்கு என்ன நடக்கும் என்ற ஆவலில் இருக்கிறோம்.
ஆனால் அந்த ஒரு நாள் ஒருபோதும் வரப்போவதில்லை. நாம்தான் தள்ளிப் போடுவதற்காக பல அர்த்தமில்லாத காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். காத்திருப்பதில் நமது வாழ்வு முடிகின்றது.
இன்றைய சிந்தனை நமக்கு இருப்பதில்லை. நாளைய சிந்தனையில் இன்றைய பொழுதை ஓட்டி விடுகிறோம். நாளைக்கு நாளை மறுநாள் பற்றிய சிந்தனை. இப்படியே போய்க் கொண்டிருக்கிறது நம் வாழ்க்கை.
நம்முள் மாற்றம் ஏற்படாமல் இப்படி இருக்கின்ற வாழ்க்கையில் அடுத்த கரையை அடைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
சந்தோஷம் கனவில் தான். நிஜத்தில் கஷ்டங்கள் மட்டுமே உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...