Monday, December 12, 2022

என்னுடைய சொந்த அனுபவங்கள் சிலவற்றையும் இப்போது சொல்கிறேன்.

 1. கூட்டம் அதிகம் ஆனால், கொட்டகை விரைவில் நிரம்பி, 'Housefull' போர்டு வெளியே தொங்க விடுவார்கள்.

2. அதற்குப் பிறகு யாராவது ஊர் முக்கியஸ்தர்களோ, வணிகத் துறை, காவல் துறை ஊழியர்களோ வந்தால், அவரையும், அவர் குடும்பத்தாரையும் மட்டும் உள்ளே அனுமதிப்பார்கள். அவர்களுக்கு என்று கூடுதலாக மடக்கு நாற்காலிகள் போடப்படும். அவர்களிடம் 'காசு எதுவும் வாங்கக் கூடாது' என்று முதலாளி சொல்லி வைத்திருப்பார்.
3. அன்றைய காலகட்டத்தில், 'A' சான்றிதழ் பெற்ற படமே வெளிவந்ததில்லை. எல்லாமே 'U' சர்டிபிகேட் தான்.
4. படம் ஆரம்பிப்பதற்கு முன், 'மழை பெய்தாலோ, பாதியில் கரண்ட் போனாலோ, சிறிது நேரத்தில் வரத் தவறினாலோ, பணம் வாபஸ் தரப்படாது' என்று ஒரு ஸ்லைடு போடப்படும். ஏனென்றால், அந்தக் காலத்தில் பெரிய திரை அரங்குகளிலேயே 'ஜெனெரேட்டர்' வசதி கிடையாது.
5. ஓலைக் கொட்டகை என்பதால், மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும். பெரிய மழை பெய்தால், எழுந்து வெளியே ஓட வேண்டியது தான். அல்லது அங்கேயே ஒரு மூலையில், ப்ரொஜெக்டர் ரூம் சுவரை ஒட்டி எல்லோரும் ஒதுங்குவார்கள்.
6. படம் போடுவதற்கு முன்பு விளக்கை அணைத்தவுடன், கொஞ்ச நேரத்தில் பீடிப் புகையும், சுருட்டுப் புகையும் உள்ளே எங்கும் பரவி, சிறு குழந்தைகளும், முதியோரும், பெண்களும் 'லொக்கு, லொக்கு' என்று இருமிக் கொண்டே இருப்பார்கள்.
7. கைக்குழந்தையோடு பல தாய்மார்களும், பாட்டிமார்களும் படம் பார்க்க வருவதுண்டு. அந்தக் குழந்தைகள் ஓயாமல் அழுது கொண்டே இருக்கும். அது, அவர்கள் அருகே அமர்ந்திருப்பவருக்கு எரிச்சலைத் தரும். ஆனால், ஒன்றும் செய்ய முடியாது.
8. அன்றைய காலத்தில், 'Toilet' வசதி எல்லாம் கிடையாது. எல்லோரும், சினிமா கொட்டகைக்குள்ளேயே ஓரமாகப் போய், மூத்திரம் கழித்து விட்டு, அப்படியே (நீர் வசதி இல்லாததால், கை, கால்களைக் கழுவாமல்) உள்ளே வந்து மறுபடியும் படம் பார்ப்பார்கள்.
9. 'இடைவேளை' வந்தவுடன் மீண்டும் விளக்குகள் எரியும். அப்போது, யார் தன்னுடைய உண்மையான மனைவி அல்லது கணவன் இல்லாமல் வேறு யாரோடு வந்திருக்கிறார்கள் என்பது அம்பலமாகும். அது, அடிதடி, குத்து, வெட்டு, ரகளையில் முடியும்.
10. தரை டிக்கட் வாங்கியவர்கள், அங்கே பரப்பி வைத்திருக்கும் ஆற்று மணலைக் கைகளால் அளைந்தால், நிறையப் பேர் மூக்கைச் சிந்தி விட்டு, அதன் மேல் மணலைப் போட்டு மூடி வைத்திருப்பது தெரியும். என்ன செய்வது? அதை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது.
11. சில சமயம், குடிகாரர்கள் ஆங்காங்கே வாந்தி எடுத்து வைத்திருப்பார்கள். இருட்டில் அது நம் கண்ணுக்குப் புலப்படாது.
12. படம் பார்க்க வந்தவர்கள் பலர், இடைவேளைக்குப் பிறகு மணலின் மேல் துண்டை விரித்துத் தூங்கி விடுவார்கள். அதுவும் படம் போரடித்தால், ஆங்காங்கே குறட்டை ஒலி கேட்கும்.
13. இன்னொரு வேடிக்கையும் நடக்கும். படச்சுருளை (Reel) மாற்றும் போது, முன்பின்னாக மாற்றி விடுவார்கள். அதனால், பின்னால் வர வேண்டிய காட்சிகள் முன்னேயும், முன்னால் வர வேண்டிய பின்னேயும் திரையில் வந்து, எங்கும் கத்தலும், கூச்சலும் எழுந்து ஒரே அமர்க்களமாகி விடும்.
14. படம் ஓடும் போது, பாதியில் எழுந்து வெளியே போக இயலாது. வெளி கேட்டைப் பூட்டி விடுவார்கள். ஆகவே, யாருக்காவது உடல்நிலை மோசமானாலோ, துக்கச் செய்தி வந்தாலோ தான் ஆபரேட்டர் ரூமுக்குள் சென்று, அவர் அனுமதியுடன் கதவைத் திறந்து விடுவார்கள். அப்போது தான், வெளியே போக முடியும்.
15. ஏதாவது ஒரு 'emergency' என்கிற போது, ஆப்பரேட்டரிடம் சொன்னால், படத்தை நிறுத்தி விட்டு, அத்தகவலை ஒரு 'ஸ்லைடு' போட்டுக் காட்டுவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் அதைப் பார்த்து விட்டு, உடனே பதறி அடித்து வெளியே ஓடுவார்கள்.
16.அதே போல, ஏதேனும் திருட்டு நடந்தாலும், படத்தை அப்படியே நிறுத்தி விட்டு, போலீசுக்கு உடனே தகவல் தருவார்கள். டிக்கட் கொடுப்பவர்கள், டிக்கட்டைக் கிழித்து உள்ளே அனுமதிப்பவர்கள், பட்டாணிக் கடலை, முறுக்கு, டீ, சோடா, கலர் விற்பவர்கள் என்று பலரும் யாரும் வெளியேற முடியாதவாறு தடுப்பு அரண் அமைப்பார்கள். அதற்குள் திருடன், ஏதாவது ஓர் இடத்தில் ஓலைச் சுவரைப் பிய்த்துக் கொண்டு, தப்பி ஓடி விடுவதும் நடக்கும்.
17. சில சமயம் யாராவது பீடி குடித்து விட்டு, சரியாக அதை அணைக்காமல் வீசி விட்டால், கொட்டகையே நெருப்புப் பற்றிக் கொள்ளும். எல்லோரும் அலறிப் புடைத்துக் கொண்டு, வெளியே ஓட வேண்டியது தான்.
18. தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள நகரத்தில் தான் இருக்கும். அவர்களுக்கு ஆள் விட்டுத் தகவல் சொல்லி, வண்டி வந்து நெருப்பை அணைப்பதற்கு முன் கொட்டகை எரிந்து சாம்பல் ஆகி விடும். 'இன்சூரன்ஸ்' எல்லாம் அப்போது பிரபலம் ஆகவில்லை. ஆகவே, கொட்டகை முதலாளிக்கு முழு நஷ்டம் தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...