தூய்மைப் பணியாளர் இந்திராணியாக அறிமுகமாகிறார் ரோகிணி. அவருடைய மகன் பார்த்திபன் இளங்கலை பட்டதாரி.
சில காட்சிகளிலேயே பார்த்திபன் மரணம் அடைவதாக செய்தி வருகிறது. அதுவும் சம்பந்தமே இன்றி ஒரு செப்டிங் டேங்க் சுத்தப்படுத்தும்போது உயிரிழந்ததாக சொல்கிறார்கள். இந்திராணிக்கு என்ன நடந்தது எனப் புரியவில்லை. நமக்கும் புரியவில்லை. உண்மை அறிய விரும்பி அவர் தொடங்கும் தேடலில் நாமும் பங்கெடுக்கிறோம்.
மறுபக்கத்தில் பெத்துராஜ் பாத்திரத்தில் தோழர் செல்வா தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரமாக்கக் கோரிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். பார்த்திபனின் மரணச் செய்தி வருகிறது. இந்திராணியை பெத்துராஜ் தோழர் சந்திக்கிறார். "பார்த்திபன் மாதிரி எத்தனை பிள்ளைங்கள சாவக் கொடுக்கறது" என இடதுசாரிக்கே உரிய கோபம் கொள்கிறார். இந்திராணி வழக்கு தொடுக்க ஆலோசனை வழங்குகிறார்.
பார்த்திபனை பலி கொண்ட மலக்குழி இருக்கும் குடியிருப்பில் ஒரு ப்ளாட்டில் வசிக்கும் பெண்தான் ஷ்ரதா. அவர் ஒரு தனிப்பெண்ணாக அங்கு வசிக்கிறார். செய்தியைக் கேட்டு இந்திராணிக்கு உதவுகிறார்.
இந்திராணி தொடுத்த வழக்கு என்னவானது, நியாயம் கிடைத்ததா இல்லையா என்பதை மிச்சக் கதை.
பொதுவாக மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவும் இடதுசாரிகளை சேவியர்கள் என லேபிள் ஒட்டும் பின் நவீனத்துவப் போக்கு உண்டு. இப்படத்தில் மக்களுக்காக போராடும் இடதுசாரிகள்தான் அரசு மற்றும் அமைப்பின் முதல் இலக்காக இருக்கும் யதார்த்தம் காண்பிக்கப்படுகிறது. இந்திராணிக்கு உதவும் தோழர் பெத்துராஜ் கைது செய்யப்படுகிறார். ஆனாலும் அவர் அறிமுகப்படுத்திய வழக்கறிஞர் ஒரு தோழர் என்பதால் வழக்கு நகர்கிறது.
இடதுசாரிகளை so called saviour-களாக குறிப்பிடுபவர்கள், அதே இடதுசாரிகள் தங்களின் குடும்பங்களையும் வாழ்க்கைகளையும் விட்டு மக்களுக்காக போராடி அடி வாங்கி சிறை செல்லவும் 'சிலுவை சுமக்கவும்' தயாராக இருக்கும் மக்கள் நேயத்தைக் குறிப்பிட மாட்டார்கள். அப்படி குறிப்பிட்டாலும் அதற்கும் ஒரு பின்நவீனத்துவ பிதற்றலை சூட்டுவார்கள்.
விட்னஸ் படத்தின் கதை முக்கியமான கதை, அரசியல் தெளிவு கொண்ட கதை என்பதையெல்லாம் தாண்டி என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் Deepak இப்படத்தை எடுத்திருக்கும் விதம்தான்.
மிக சுலபமாக கரைபுரண்டோடக் கூடிய உணர்வெழுச்சிக்கான சாத்தியம் கொண்ட கதையைக் மிக பக்குவமாகக் கையாண்டிருக்கிறார். சுலபமாக இடதுசாரிய பெருமை பேசியிருக்க முடியும். இக்கதை நடக்கும் களத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் இடதுசாரிகள் மட்டும்தான். ஆனால் பெருமை பேசவில்லை. ரோகிணியை உச்சபட்சமாக நடித்து உணர்வுகளை கசக்கிப் பிழிய வைத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. பல இடங்களில் தேவைப்படும் உணர்வு நிலைகளை எட்டாமலே கூட அடக்கி வாசித்திருக்கிறார். அங்கெல்லாம் கதாபாத்திரம் கொள்ள வேண்டிய விம்மலை நாம் வெளிப்படுத்துகிறோம்.
இந்திராணிக்கும் மகனுக்கும் இருக்கும் உறவின் ஆழத்தை ஒரே வசனக் காட்சியில் மட்டும் காண்பித்து முடிப்பது இயக்குநருக்கு போதுமாக இருக்கிறது. அந்த உறவின் ஆழம்தான் மொத்த படத்தையும் தாங்கிப் பிடிக்கப் போகிறது எனத் தெரிந்தும் மேலதிக ட்ராமாக்களை இயக்குநர் அந்த உறவில் வைக்க விரும்பவில்லை.
ஷ்ரதாவின் பாத்திர வார்ப்பு அற்புதமாக இருந்தது. நிறைய சுவாரஸ்யம் கொண்டிருந்தது. சிறைக்குள் பெத்துராஜ் தோழர் அடைபட்டதும் ஷ்ரதா தலையெடுத்து ரோகிணிக்காக போராடுவார் என தமிழ் சினிமாவால் பயிற்சி பெற்ற நம் மனம் நினைக்கிறது. ஆனால் அப்படி நடக்கவில்லை. அது யதார்த்தம் கிடையாது என சொல்லாமல் சொல்கிறது படம். அவருக்கான கதையாக ஒன்று நீளுகிறது.
இச்சமூகமும் அதன் அதிகாரமும் ஒரு gated community-யாக இருந்து கொண்டு செம்மஞ்சேரியை உருவாக்கி இந்திராணி போன்ற உழைக்கும் பெண்களை receiving end-ல் நிறுத்துவது போலவே மறுபக்கத்தில் சாதிய gated community குடியிருப்புகளை உருவாக்கி ஷ்ரதா போன்ற லிபரல் பெண் பாத்திரங்களையும் receiving end-ல் நிறுத்துகின்றன என தெளிவாக விளக்குகிறது படம்.
வசனங்கள் படத்துக்கு பெரும் பலம். பெத்துராஜின் இடதுசாரிய வசனங்கள் தொடங்கி இந்திராணியின் எளிய வார்த்தைகளில் அரசியல் மற்றும் லிபரல் வாழ்க்கையில் துயரத்தை வெளிப்படுத்தும் வசனங்கள் என எல்லா வசனங்களிலும் Muthuvel மிளிர்கிறார்.
படம், கதை, முடிவு ஆகியவற்றைக் காட்டிலும் இப்படத்தில் இயக்குநர் கையாண்டிருக்கும் subtlety-தான் எனக்கு அதிக ஈர்ப்பை கொடுத்தது. Subtlety-யுடன் சில விஷயங்களை உள்ளீடாக வளர்ந்து நம்மை தாக்கும் நுட்பத்தையும் செய்திருக்கிறார். உதாரணமாக இந்திராணியின் பணிச்சூழலும் அதன் தற்காலிகதன்மை கொண்டிருக்கும் அரசியலையும் சொல்லலாம்.
அரசியல் மற்றும் சமூக சிந்தனை கொண்டோருக்கு மட்டுமின்றி தேர்ந்த சினிமா ரசிகர்களுக்குமான படமாகவும் Witness உருவாகியிருப்பதே அப்படத்தின் வெற்றிகளில் முதன்மையானது. உள்ளதை உள்ளபடி சொல்லும் திரைக்கதை அமைப்புக்கு உளங்கனிந்த பாராட்டுகள்.
பிறகு தோழர் G Selva
போராட்டக் காட்சியில் அறிமுகமாகிறார். குறுக்கே புகுந்து கலையச் சொல்லும் காவலர்களை 'Left Hand'-ல் டீல் செய்து விட்டு போராட்டத்தைத் தொடருவதும் பார்த்திபனின் மரணத்தைக் கேள்வி கேட்கப்போய் காவலர்களை மறித்து நின்று நெஞ்சு புடைப்பதும் அச்சு அசல் எங்கள் செல்வாதான். உண்மையில் அவர் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். ஏனெனில் அவரின் வாழ்க்கையே மக்களுக்கான போராட்டங்களில்தான்.
தளும்பாத நிறைகுடமாக உண்மையைக் கடத்துகிறது Witness. ஒரு படத்துக்கான மெய்யான பிரம்மாண்டம் கதை கொண்டிருக்கும் உண்மைதான் என்பதை இப்படத்தி ஆக்கம் மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறது.
சோனி லைவில் படம் வெளியாகி இருக்கிறது. அனைவரும் பாருங்கள். எழுதுங்கள். இது நமக்கான படம். நாம்தான் கொண்டாட வேண்டும்.
No comments:
Post a Comment