திருநெல்வேலியிலிருந்து ஏறத்தாழ 71கி.மீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து ஏறத்தாழ 178கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து ஏறத்தாழ 114கி.மீ தொலைவிலும் காரையார் அணையில் அமைந்துள்ள எழில்மிகு அருவிதான் பாணதீர்த்தம் அருவி.
சிறப்புகள் :
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய அருவிகளில் இதுவும் ஒன்று. பாணதீர்த்தம் அருவிக்கு செல்ல வேண்டுமென்றால் முதலில் காரையார் அணைக்கு செல்ல வேண்டும்.
பின் படகின் மூலம் பாணதீர்த்தம் அருவிக்கு செல்ல வேண்டும். காரையார் அணை மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது.
அணையும் மிக அழகாக கட்டப்பட்டுள்ளது. அணையின் அழகை ரசித்த பிறகு படகு மூலம் சிறிது தூரம் சென்ற பிறகு பாணதீர்த்தம் அருவியை காண முடியும்.
பரந்து விரிந்த ஏரி, இருபுறமும் அழகான மலைகள். பாணதீர்த்தம் அருவியை படகிலிருந்தே பார்ப்பது ஒரு சிறந்த அனுபவம். நுரைத்து உற்சாகமாகக் கொட்டிக் கொண்டிருக்கும் இவ்வருவியை பார்க்கவே மிக அழகாக இருக்கும்.
தாமிரபரணி இயற்கையாகவே அணையில் கலக்கின்ற முகப்புதான் பாணதீர்த்தம் அருவி. ஜீவ நதி என்பதால் எந்த கோடைக்கும் வற்றாத அருவி.
பசுமையும், கருமையும் போர்த்திய மலை முகடுகள், மனதை கொள்ளை கொண்டு போகும் அருவியின் அழகு மனதை கவரும் வகையில் உள்ளது. இது ஒரு முண்டந்துறை புலிகள் சரணலாயத்தின் ஒரு பகுதியாகும்.
ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடல், பாணதீர்த்தம் அருவியில்தான் படம்பிடிக்கப்பட்டது.
தாமிரபரணி ஊற்றெடுக்கும் இடத்தை காணும் வாய்ப்பு கிடைத்தால், அது உங்கள் வாழ்நாளில் பரவச அனுபவமாக இருக்கும்.
எப்படி செல்வது?
திருநெல்வேலிக்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
திருநெல்வேலியில் இருந்து காரையார் அணைக்கு சென்று பின் பாணதீர்த்தம் அருவிக்கு செல்லலாம்.
காரையார் அணைக்கு பேருந்து அல்லது வாடகை வாகனங்கள் மூலம் வரலாம். பின் படகின் மூலம் பயணம் செய்து அருவியை அடையலாம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
திருநெல்வேலியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
No comments:
Post a Comment