துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள்
ஒரு பேட்டியில் கவிஞர் கண்ணதாசனுடனான
தன் நினைவுகளைப் பரிமாறிக்கொள்ளும்போது,
“பாரதியாருக்குப் பிறகு சிறந்த கவிஞர் கண்ணதாசன் தான்” என்று கூறுகிறார்.
மிகவும் சுவையான பேட்டி என்பதாலும், நிறைய பேர் இதைப்படித்திருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதாலும், நண்பர்கள் ரசிக்க – ஆசிரியர் சோவின் பேட்டியிலிருந்து
சில பகுதிகளை கீழே தந்திருக்கிறேன்.
கவிஞருடன் நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு
எனக்கு சினிமாவாலும், துக்ளக்கினாலும் கிடைத்தது. சினிமாவில் சீக்கிரமாகவே அவர் நெருக்கமாகி விட்டார்.
நான் சந்தித்த மனிதர்களில் கண்ணதாசன் ஒரு மேதாவி.
அவர் கடும் முயற்சி செய்து கவிதைகளை
எல்லாம் எழுதினார் என்று நான் சொல்ல மாட்டேன்.
எந்த முயற்சியும் எடுக்காமல் கவிதை அவருக்கு
மிக இயல்பாகவே வந்தது.
பாடல் எழுத வந்து உட்கார்ந்தாரென்றால்,
பாடல் வரிகள் அருவி மாதிரி கொட்டும்.
எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இன்றி,
மனதில் தோன்றியதை, அற்புதமான மொழி
நடையில் எழுதக்கூடிய கவிஞர் அவர்.
சில சமயம் எரிமலை மாதிரி இருக்கும்.
சில சமயம் புயல் மாதிரி இருக்கும்.
சில சமயம் தென்றலைப்போல இருக்கும்.
அத்தனை பல்லவிகளும் சரளமாக வந்து விழும்.
இது அவருக்கு கிடைத்த வரம் !
எதையும் மிகவும் ‘லைட்’டாக எடுத்துக்
கொள்ளும் இயல்பு அவருடையது.
இந்திரா காந்தி ஆட்சியின்போது, சுப்ரீம்கோர்ட்டில்
நீதிபதிகளை சீனியாரிட்டி எல்லாம் பார்க்காமல் தனக்கு வேண்டியவர் என்பதற்காக ஒருவரைத்
தலைமைப் பொறுப்பில் நியமித்தார்கள்.
அதைப்பற்றி விமர்சித்து நான் எழுதிக்கொண்டிருந்தேன்.
“நீங்க எழுதற கருத்துக்களை எல்லாம் படிச்சுக்கிட்டிருக்கேன். எனக்கு அதில் மாற்றுக் கருத்து இருக்கு. அதை உங்க பத்திரிகையிலேயே எழுதலாமா?”
என்று கேட்டார் கண்ணதாசன்.
“சார், இது சட்டம் சம்பந்தப்பட்ட விஷயமாச்சே?”
“அதைப்பற்றி உங்களுக்கென்ன? நான் எழுதறேன்.”
சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் நியமனத்தில்
தலையீடு இருப்பதை நியாயப்படுத்தி அவர்
எழுதினார் பாருங்கள்.
அவ்வளவு
அருமையான
கட்டுரை.சுப்ரீம் கோர்ட்டில் பிராக்டீஸ் பண்ணுகிற
வழக்கறிஞர்கள் கூட அந்த மாதிரி
திறமையாக தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு
அருமையாக
எழுதி இருந்தார் கவிஞர்.இன்னொரு சந்தர்ப்பத்தில் இந்திரா
காங்கிரஸிலிருந்து கவிஞர் விலகிய நேரம்.
“ஏன் சார் மாறினீங்க?” அவரிடம் கேட்டேன்.
“அதை விளக்கி உனக்கு ஒரு கட்டுரை அனுப்பறேன்”
என்றவர் உடனே எழுதி அனுப்பி வைத்தார்.
அந்த கட்டுரை இப்படித் துவங்கி இருக்கும் –
“காலி மைதானங்களிடம் பேசிப் பேசி
எனக்கு அலுத்து விட்டது”
காங்கிரஸ் கூட்டம் போட்டால், கூட்டமே வருவதில்லை.
இதில் போய்ப்பேசி என்ன பிரயோஜனம் ?
என்று நினைத்து அதை வெளிப்படையாகப்
பேசவும், எழுதவும் செய்தார். மற்றவர்களைப் போல்
‘கொள்கையில் வித்தியாசம்’ என்றெல்லாம்
போலித்தனமாகப் பேசத் தெரியாதவர்.
கவிஞர் நடத்தி வந்த பத்திரிகையில் ஒரு
முறை என்னைப்பற்றி ‘கன்னாபின்னா’வென்று ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்து
விட்டு அவருக்கு நான் போன் பண்ணினேன்.
“என்ன சார்.. இப்படி எழுதியிருக்கீங்க. என்னை ‘கிரிட்டிசைஸ்’ பண்ணுங்க. ஆனால் அதில் ஒரு
நாகரிகம் இருக்க வேண்டாமா?”
அவர் வேறு எதையும் பேசவில்லை.
“நாளைக்குப் பாருங்க..பத்திரிகையை.. “ என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.
மறுநாள் அதே பத்திரிகையில்’அந்தக் கட்டுரையை
எழுதியது ஒரு பைத்தியக்காரன்’என்று தன்னைத்தானே மட்டம் தட்டி ஒரு செய்தியையும் மறுநாளே அவரால்
வெளியிட முடிந்தது.
அதை எழுதிவிட்டு “பார்த்தீங்களா.. இப்போ என்ன சொல்றீங்க?” என்று அவரே போன் பண்ணினார்.
எதையும் லைட்டாக எடுத்துக் கொள்கிற
சுபாவம் அவருக்கு இருப்பதை திரும்பவும் அப்போது நான் உணர்ந்தேன்.
இவரும், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும்
சேர்ந்து தமிழ் சினிமாவுக்கு செய்திருக்கிற பணி அசாத்தியமானது. தன்னைத் தானே பாராட்டிப் பெருமை பேசுகிற வழக்கம் அவரிடம் இல்லை.
காலாகாலத்திற்கு நிலைத்து நிற்கிற மாதிரியான காவியம் ஒன்றைப் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
தான் சில கட்சிகளுக்குப் போய் வந்ததைப்பற்றி
ஒருசமயம் இப்படிச் சொன்னார்.
“நான் சில கட்சிகளுக்கு மாறியதைச் சிலர்
விமர்சனம் பண்ணி இருக்காங்க.
நான் மாறத்தான் செய்வேன்.
மாறாமல் இருக்க நான் என்ன மரமா ? மட்டையா ?”
ஒரு தடவை ஒரு பத்திரிக்கையில் என்னைப் புகழ்ந்து
பேசி இருந்தார். என்னைப்பற்றி அவர்
எழுதியதை ஒரு முறை படித்து விட்டு அவருக்கு ஒரு பேப்பரில்
எழுதி அனுப்பி இருந்தேன்.
“வீடு வரை விஸ்கி.
வீதி வரை பஞ்சு (அருணாசலம்)
காடு வரை கவிதை
கடைசி வரை ‘சோ'” –
என்று எழுதி அனுப்பியிருந்தேன்.
அப்போதைக்கு அதைப்படித்து விட்டு ”என்னைக் காப்பி
அடிச்சு நல்லா எழுதியிருக்கீங்க”என்று ஜாலியாகச் சொன்னார்.
ஆனால், அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு
ஆனந்த விகடனில் கவிஞருடைய வாரிசு
“கவிஞர் இதைப் பாதுகாத்து வைச்சிருந்தார்”
என்று சொல்லி நான் எழுதிய இந்த வரிகளை வெளியிட்டிருந்தார்கள்.
மனசில் வெகுளித்தனம் நிறைந்த கவிஞர் எழுதிய
“அர்த்தமுள்ள இந்துமதத்”தைப் படித்து
பிரமித்திருக்கிறேன்.
குழந்தைத்தனமான மனம், அற்புதமான படைப்பாற்றல் இரண்டும் இணைந்த அற்புதமான மனிதர் கண்ணதாசன். தன்னைப்பற்றியே வெளிப்படையாக எழுதிய மனிதர் அவர்.
இப்படி பல விஷயங்களில் மிகவும் வெளிப்படைத்
தன்மையுடன் இருந்ததால், அரசியலில்
அவர் முக்கியமான இடத்தைப்பெற முடியவில்லை.
தனிப்பட்ட முறையிலும் சரி,
பொதுக்கூட்டத்திலும் சரி, தான் நினைத்ததைப் பேசக்கூடியவராக இருந்ததால் எந்தக் கட்சியிலும்
அவரால் நிலைத்து இருக்க முடியவில்லை.
பாரதிக்குப் பிறகு சிறந்த கவிஞர் கண்ணதாசன் தான்.
கல்லூரிப் படிப்பு, புலவர் படிப்பு எதுவுமே
இல்லாமல் தமிழில் அவர் அளவுக்கு சொல்வளத்துடன்,
எளிமையாகவும், வேகத்துடனும் இயங்கிய
வேறு ஒரு கவிஞரைப் பார்க்க முடியாது...!
No comments:
Post a Comment