Monday, December 5, 2022

ஏன் தீபம்?

 இந்துக்களின் ஒவ்வொரு மாத பவுர்ணமியும் முக்கியமானது, அந்த பவுர்ணமியோடு வரும் நட்சத்திரங்கள் படி பெரும் நுணுக்கமான பண்டிகையினை அமைத்தார்கள்

நிறைந்த நிலவு கொண்ட அந்நாள் மாதம் மாதம் கொண்டாடபட வழிவகைகளையும் ஏற்படுத்தினார்கள், அதில் ஒரு தத்துவமும் ஆன்மீகமும், சுற்று சூழலும், மருத்துவமும்,நலமும் மானிட நலமும் அறிவும் தெய்வ நம்பிக்கையும் மேம்பட வழியும் சொன்னார்கள்.
தைபூசம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி பூரம், ஆவணி அவிட்டம் என்ற வரிசையில் கார்த்திகை தீபமும் மகா முக்கியமான ஒரு நாள்
இன்னொரு வகையில் சொல்லபோனால் இம்மாதிரி பவுர்ணமி பண்டிகையில் முக முதன்மையானதும், மிக பழமையானதும் அதுவேதான்
சங்க இலக்கியங்கள் இதை மிக அழகாக ஆணித்ரமாக சொல்கின்ற்ன‌
கார் நாற்பது எனும் இலக்கியம் இப்படி சொல்கின்றது
"நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி"
சீவக சிந்தாமனும் எனும் பெரும் காப்பியம் இன்னும் தெளிவாக இப்படி வரைகின்றது
"கார்த்திக விளக்கு இட்டு அன்ன வியர்த்துப் பொங்கி
கடி கமழ் குவளப் பந்தா" என்கின்றது
நற்றிணை பாடலும் அதை ஆழ சொல்கின்றது
"வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்த"
அதாவது வெண்சங்கு ஒலிக்க மாலை தீபம் ஏற்றபட்டது என்கின்றது பாடல்
மலைபடுகடாம் எனும் இலக்கியம் கார்த்திகை நட்சத்திரத்தை குறித்தே குறிப்பினை கொடுத்து இன்னும் ஆழமாக சொல்கின்றது
"பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து
அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை'
ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.
"மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேறும் அகல்இருள் நடு நாள்:
மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுஉடன் அயர, வருகதில் அம்ம"
எனும் அகநானூற்று பாடல் அறுமின் என கார்த்திகை மாதத்தை சொல்லி அதன் நடுநாளில் தீபம் ஏற்றபட்ட விஷயத்தை தெளிவாக சொல்கின்றது
கார்த்திகை தீபம் அவ்வளவு முக்கியமானதா என்றால் அறிவில் சிறந்த இந்துமதம் அதில் இறை நம்பிக்கை, ஆதாரம், வாழ்வியல் என எல்லாம் கலந்து சொன்னது
ஆம் இந்து தர்மபடி அது சிவனின் மிகபெரும் திருவிளையாடலை சொல்லும் விஷயம்.
மூன்று தேவர்களில் யார் பெரியவர் எனும் நிலை வந்தபொழுது நெருப்பு பிழம்பாக சிவன் நிற்க, அவரின் அடி முடி தேடி பிரம்மாவும் கிளம்பினார்கள், பிரம்மா அன்னபறவையாக முடி தேடியும் முடிதேடி பூமியினை துளைத்து வராகமாக விஷ்ணுவும் தேடினார்கள்
இதில் பிரம்மா பொய் சொல்லி மாட்டி கொண்டதும், விஷ்ணு தோல்வியினை ஒப்பு கொண்டதும் எல்லோரும் அறிந்த விஷயங்கள்
அப்படி சிவன் நெருப்பு மலையாய் நின்ற இடமே திருவண்ணாமலை என்பதும் அந்நிகழ்வின் நினைவாகவே தீபம் ஏற்றபடுவதும் எல்லோரும் அறிந்த விஷயங்கள்
இதுதான் கார்த்திகை தீபத்தின் தொடக்கம், அம்மலை மிக பழமையானது என்பதும் இன்றும் மலைமேல் யாரும் ஏறமாட்டார்கள், விரதம் இல்லாமல் ஏறமாட்டார்கள் என்பதும், அதை சுற்றி வணங்குவார்கள் என்பதும் எல்லாரும் அறிந்தது
அந்த ஞானமலை அடிவாரம் இன்றுவரை ஏகபட்ட ரிஷிகள்,ஞானிகள், சிவனடியார்களின் கைலாயமாக உள்ளது என்பதும் உண்மை
கார்த்திகை மாதம் முருகனுக்கு உகந்தது என்பதும் அம்மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாள் அவரின் அவதார நாள் என்பதாலும் அந்நாளிலே மிகபெரும் கொண்டாட்டமும் இருந்தது
சிவன் திரிபுரத்தை எரித்து போட்டதும் இந்நாளிலே, இதனாலே சொக்கபனை கொளுத்தும் நிகழ்வும் உண்டு
இது இந்துக்களின் மிகபெரிய பண்டிகை
இப்படியே வாழ்வியலை நோக்கினாலும் இன்னும் அதிசயமான தகவல்களெல்லாம் உண்டு
தென்னாடு என்பது தென்கிழக்கு வடகிழக்கு என இரு பருவகாற்றால் பலன்பெறும் மாநிலம் என்றாலும் தென்கிழக்கு பருவமழை ஆற்று பாசானம் மட்டுமே கைகொடுக்கும் அதுவும் குறைந்த அளவு பகுதிகளே
தென்னகம் முழுக்க முழுவதும் கைகொடுப்பது வடகிழக்கு பருவமழையே, இது ஐப்பசி கார்த்திகை மாதம் கனத்து பெய்யும்
அத்தோடு அவர்கள் விவசாயத்துக்கும் திரும்பியாக வேண்டும்
கார்த்திகை மாதம் கனமழை கொட்டி ஏரிகளும் குளங்களும் நிரம்பி, ஆறுகளும் ஓடைகளும் நிறைந்து ஓடும் காலம்
இக்காலத்தில் குளிர் அதிகம் அப்பபடியே நோய்களும் அதிகம்
இன்றும் கார்த்திகை மாதம் ஒருவிதமான சளி தொந்தரவுடன் கூடிய காய்ச்சல் பரவுவதை உணர முடியும், நீர் நிலைகளின் பாக்டீரியாக்கள் முதல் குறைந்த காற்றழுத்தம் வரை அதற்கான காரணம் ஏராளம்
காற்றழுத்தம் குறையும் பொழுது சுவாச கோளாறில் நுரையீரல் நோய்கள் எளிதில் தாக்கும். கார்த்திகையில் பலர் இருமல், சளி, காய்ச்சல் என நோய்படுவது இதனாலே
இதனாலே விளக்கும் நெருப்பும் வைத்து கண்ணுக்கு தெரியா கிருமிகளை கட்டுபடுத்தவும், அப்படியே விளக்கில் ஏற்படும் மாற்றத்தல காற்றழுத்த சூழலை சமபபடுத்தினார்கள்
இதனால் சுவாச சிக்கல் உட்பட பல வராது, காற்றில் ஒரு சமநிலை ஏற்படும்
இதனால் விளக்கு வைத்தல் சொக்கபனை கொளுத்துதல் போன்றவையும் நடந்தன, பாரத கண்டத்தின் ஒரு பகுதியான தென்னகத்தில் இவை எல்லாம் நடந்த காரணம் அதுவே
இந்த நெருப்பு கண்ணுக்கு தெரியா கிருமிகளை அழிக்கும், மழைகாலம் பெருகும் பூச்சிகளை கட்டுபடுத்தும் என பல காரணம் உண்டு
இந்த பண்டிகை முடிந்து சில நாட்களில் ஏரி, குளம் கரை உள்ள தெய்வமான அதாவது விவசாய நிலத்தின் காவலான சாஸ்தா போன்றவறுக்கு பொங்கல் எல்லாம் வைப்பார்கள்
அதன் அர்த்தம் குளம்பெருகி இனி நடக்க போகும் விவசாயம் நல்லபடியாக நடக்க செய்யபடும் வழிபாடு
ஆம் கார்த்திகையில் ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்றபடுவதல்ல, பல்வேறு காரணங்களை சொல்லி மாதம் முழுக்க ஏற்ற வைத்தார்கள் ஞானிகள், நாம் இந்நாளில் ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்து கொண்டாடுகின்றோம்
உண்மையில் அக்காலத்தில் மாதம் முழுக்க அது ஏற்றபட்டது. அதில் நோய்கள் கட்டுபட்டன, நோய்பரப்பும் வழிகள் தடைசெய்யபட்டன‌
ஆம் ஆன்மீகமும் அறிவியலும் கலந்த அந்த ஏற்பாடு அதை அழகாக செய்து கொண்டிருந்தது
இன்று கார்த்திகை தீபம் ஏற்றபடும் நாள், திருவண்ணாமலையில் மிகபெரும் திருவிழா நடக்கும் நேரமிது
அந்த மலை ஒரு ஞானமலை, தென்னகை கயிலாயம், எவ்வளவோ ஞானிகளுக்கு ஞானமும் நித்திய அமைதியும் கொடுத்து கொண்டிருக்கும் பெரும் மலை
அந்த மலையில் ஏற்றபடும் அந்த தீபம் பல விளக்கங்களை சொல்கின்றது, ஆழ கவனித்தால் அது தெரியும்
நெருப்பு என்பது பஞ்ச பூதங்களில் ஒன்று, இதனாலே நெருப்பு இன்றி இந்துக்கள் வழிபாடே இல்லை
கற்பூரம் முதல் விளக்கு ஏற்றுதல் வரை அதுதான் ஏற்பாடு
அதில் இறைவன் ஒளிவடிவானவர் எனும் உண்மை இருந்தது, மனதில் இறைதன்மை எக்காலமும் ஒளிவிட வேண்டும் எனும் ஏற்பாடு இருந்தது
நெருப்பு சுடர் என்பது சூட்சும தேவதைகளுக்கு வழிகாட்டும் அம்சம், அவர்களுக்கு தேவையான அம்சம் என்பதையும் சொல்லிற்று
இந்த உலகினை இயக்கும் மகா முக்கிய சக்திகளில் ஒன்று நெருப்பு, அது இன்றி உலகம் இயங்காது, இதனால் அதை இறைவனின் அம்சமாகவே கருதிற்று இந்துமதம்
அந்த நெருப்பில் அது இறைவனையே கண்டது
நெருப்பிடம் மாசு நெருங்காது, நெருப்பு எல்லாவற்றையும் எரிக்கும், அதனிடம் வீழ்ந்தால் சாம்பலே மிஞ்சும் என்பதால் இன்னும் பல ஆன்மீக தத்துவ குறியீடாயிற்று
இருளிலே எதையும் பார்க்கமுடியாது, வெளிச்சம் இருந்தாலே தேவையானதை தேடமுடியும் பார்த்து கண்டெடுக்கவும் முடியும்
அப்படி மானிடன் முக்தி பெற வேண்டியதை தேட ஞான ஒளி அவசியம்
புறவாழ்வில் வெளிச்சமும் அகவாழ்வில் ஞானமும் மகா முக்கியமான விஷயங்கள், அவை இன்றி எதையும் கண்டறிய முடியாது
ஆம் அந்த சிவபுராண கதையினையே பாருங்கள், ஆதிஅந்தம் காணமுடியா பிம்பமாய் நின்றார் சிவன், பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடி முடியினை காணவில்லை
ஆம் அவர்களின் அகங்காரம் அத்தோடு ஒழிந்தது
இன்னும் திரிபுரம் எரித்த கதையினையும் பாருங்கள், அந்த கூட்டத்தின் அகங்காரமும் ஒழிந்தது
ஆம் இறைவன் மிகபெரும் ஆற்றல் உள்ளவன் அவன் முன் அகங்காரம் என்பது கூடாது அது எரிந்து ஒழிய வேண்டியது என்பதே கார்த்திகை தீபம் சொல்லும் ஞான தத்துவம்
ஒவ்வொருவரின் அகங்காரமும் எரிய வேண்டும் என்பதற்கே திருவண்ணாமலை தீபத்தை பார்க்க வேண்டும் என்றார்கள்
திருவண்ணாமலையினை நினைத்தாலே முக்தி என்றார்கள், ஆம் திருவண்ணாமலை என்றால் அண்ணாமலையார் ஆலயமும் அந்த மலையும் நினைவுக்கு வரவேண்டும்
அப்படி வரும்பொழுது அந்த தீபமும் நினைவுக்கு வரவேண்டும், அது நினைவுக்கு வரும்பொழுது நாமெல்லாம் வெறும் சாம்பலாய் போகின்றவர்கள் இறைவன் எனும் பெரும் நெருப்பே உண்மையானவன் எனும் நினைப்பு நெஞ்சில் வர வேண்டும்
அப்படி சிந்திக்கும் மனம் அமைதி கொள்ளும், அதன் ஆசையும் ஆணவமும் அடங்கும், அப்படி அடங்கும் மனதில் சிவன் வருவார், அவனுக்கு மோட்சம் தூரமில்லை
இதைத்தான் சிந்திக்க சொன்னார்கள் இந்துக்கள். அந்த தீபத்தின் தத்துவம் அதுவே அந்நாளில் கொழுக்கட்டை பொரி முதலான விஷயங்களும் பிரசித்தம்
ஏன் பொரி என்ற பொருளை வைத்தார்கள்
சிவனி நெற்றிகண்ணில் இருந்து பொரிந்த நெருப்பு பொறிகளே கார்த்திகை பெண்களின் மடியில் விழுந்து குழந்தைகளாயின‌
இதனால் பொரி செய்தல் ஒரு அடையாளமாயிற்று, இனிப்பு கொழுக்கட்டை செய்தார்கள் அதுவும் பனை ஓலையில் செய்தார்களே ஏன்?
பனை ஓலை என்பது ஏடு எழுதும் பொருள் ஒரு காலத்தில் அறிவின் அடையாளமாக கருதபட்டவை
அந்நாளில் ஓலையில் இனிப்பு செய்து குழந்தைகளுக்கு அதுவும் ஆண்குழந்தைகளுக்கு தாய்மார்கள் ஊட்டுவது கார்த்திகை பெண்களின் நினைவான ஏற்பாடு
இதனாலே ஆண்குழந்தைகள் இருக்கும் வீட்டில் கட்டாயம் அந்த கொழுகட்டை அவிக்க வேண்டும் என்றார்கள்
அது வேடிக்கை விஷயமல்ல, அது ஒரு ஞான குறியீடு, கார்த்திகை பெண்கள் முருகனை அறிவோடும் ஞானத்தோடும் வளர்த்தது போல் ஒவ்வொரு தாயும் தன் பிள்ளையினை அப்படி வளர்க்க வேண்டும் என குறிப்பால் சொன்னது
அவன் கல்வி கேள்விகளிகளில் சிறக்க வேண்டும் என்பதை, ஓலையில் எழுதபடும் ஞான விஷயங்களை படிக்கவைக்கபட வேண்டும் என்பதை பிற்காலத்தில் ஒரு பண்டிகை கொண்டாட்டமாக இனிப்போடு மாற்றிற்று அச்சமூகம்
இந்து பண்டிகைகள் எல்லாவற்றிலும் ஒரு அர்த்தம் உண்டு, ஞான குறியீடும் உண்டு. ஓலை கொழுக்கட்டையும் அப்படியே
எப்படியாயினும் கார்த்திகை பெண்களுக்கான மரியாதை அது
ஒரு காலத்தில் இது மிகபெரும் பண்டிகையாய் இருந்தது, தீபம் ஏற்றி சிவனை வணங்கிவிட்டு, முருகனின் அவதார தினத்தை கொண்டாடிவிட்டு விவசாய பணிகளை தொடங்கினர் அக்கால மக்கள்
அதற்கு முன்னோட்டமாக வயல்காடுகள் தோட்டங்களில் இருக்கும் காவல் தெய்வங்களுக்கும் முன்னோர்களுக்கும் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்
அதில் ஒரு நுணுக்கமான விஷயமும் இருந்தது, ஆம் குளங்களும் ஏரிகளும் வயல்களும் ஒரே இரவில் வந்துவிடாதவை. ஆயிரகணக்கான தலைமுறையின் உழைப்பு அதில் இருக்கின்றது
இதனால்தான் குளம், கிணறு வெட்டியது முதல் நிலத்தை திருத்திய எல்லா முன்னோரையும் நினைத்து அந்த வழிபாடு செய்வார்கள்
கார்த்திகை தீபத்துக்கு அடுத்த நாள் அந்நாளாய் இருந்தது, பின்பு கார்திகை மாத கடைசி வெள்ளி என அந்த பொங்கல் வழிபாட்டை மாற்றினார்கள்
இந்த வழக்கம் இன்னும் சில பகுதிகளில் உண்டு
ஆம், கார்த்திகை தீபம் என்பது வெறும் தீபமேற்றி ஆடும் பண்டிகை அல்ல, சொக்கபனை எரித்து மகிழும் ஒரு நாள் விஷயம் அல்ல‌
அது சிந்தனையினை தூண்டும் விஷயம், சிவன் எனும் பெரும் சக்திமுன் மனிதனின் ஆசை, ஆணவம், அகங்காரமெல்லாம் எரிய வேண்டும் எனும் தத்துவத்தை சொல்லும் பண்டிகை
முருக தத்துவம் என்பது என்ன?
முருகன் என்றால் அழகன் என்பது மானிட கண்களுக்கானது, முருகன் என்றால் ஞானமிக்கோன் என்பதே ஆன்மீகம்
அந்த ஞானமே பிரம்மனையே ஆட்டிவைத்தது, சிவனுக்கே பாடம் சொன்னது, அதர்மங்களை அழித்தது
அந்த ஞானம் அவதரித்த நாள் இது என்றால் என்ன அர்த்தம்?
ஆம் எரியும் தீபத்தை கண்டு ஒவ்வொருவர் மனதிலும் ஆணவ அகங்காரம் அழிந்து ஞானம் பிறக்க வேண்டும் என்பதே பொருள்
எல்லா அக்கிரமத்துக்கும் ஒரு முடிவு உண்டு, அதர்மங்களை அழிக்கும் அவதாரம் இந்நாளில் உருவாயிற்று என்பதை நினைவு கூர்ந்து, வாழ்வில் நம்மை அச்சுறுத்தும் அல்லது ஆட்டிவைக்கும் எல்லா அக்கிரமக்காரனும் ஒரு நாள் அழிவான் , ஒரு சக்தி வந்து அழிக்கும் என நம்பிக்கை கொள்ளல் வேண்டும்
இந்நாள் அந்த சிந்தனைக்கான நாளே..
விளக்கேற்றுவதில் ஆகம விதிகளை பின்பற்றினால் நல்லது
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் தவிர இதர எண்ணெய்கள் நிச்சயம் விளக்குக்கு ஆகாது
சிலர் தாவர கொழுப்பில் நெய்யில் எரிக்கின்றார்கள் இதுவும் நல்லதல்ல, சரியானது அல்ல‌
காரணம் தீபம் என்பது ஒளிகொடுக்க அல்ல, அப்படியாயின் ஒரு மின்விளக்கு போதும், ஏன் தீபம்?
ஒவ்வொரு எண்ணைக்கும் விஷேஷித்த குணம் உண்டு, அது சூட்சும சக்திகளுக்கும் இன்னும் பல கண்ணுக்கு தெரியாத விஷயங்களுக்கும் தொடர்புடயவை
நல்ல சூழலை காக்கும் வகையில் நல்ல நெருப்பை கொடுக்கவும் முன்னோர் சொன்ன எண்ணையாலே முடியும்
அந்த எண்ணை வகைகளின் தீபம் ஒரு நல்ல அதிவையும் சூழலையும் கொடுக்கும், அது மனதை பிரபஞ்சத்தோடு இணைக்கும்
தயவு செய்து ஆகமவிதிபடி உள்ள எண்ணெய் வகைகளிலே தீபம் ஏற்றி பழகுங்கள், விலை சற்று அதிகம் எனினும் பலனும் அதிகம்
தீபம் முக்கியம் எனினும் அது ஏற்றபடும் எண்ணெயும் மகா முக்கியம்
விழா என சொல்லி தத்துவம் ஆன்மீகம் மருத்துவம் வரிசையில் ஏழை குயவரும் பிழைக்க வழி செய்தது இந்துமதம்
ஆம் இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகையும் ஒரு குறிப்பிட்ட தொழிலாள இனத்தை தூக்கிவிடுவதாக இருந்தது, ஆழ கவனியுங்கள் புரியும்
இறைவன் என்பவன் நாம் நினைத்த மாத்திரத்தில், முழு நினைவிலும் அவனை நிறுத்தும் பொழுது ஓடிவந்து நம் முன்னால் நிற்பவன், அவனுக்காய் ஒரு வடிவினை செய்து வழிபட்டால் அந்த முயற்சிக்கு இறைவன் மனம் உவந்து ஓடிவருவான்
செய்யும் முயற்சி முழுக்க அவன் நினைப்பே இருக்கும் பொழுது அது தியானம் ஆகின்றது, பூஜை ஏற்பாடோ, நைவேத்தியமோ, பூ அலங்காரமோ, சந்தண அரைப்போ அவனை நினைத்து கொண்டே செய்கையில் அது தியானமாகின்றது
அப்படி தியானத்துடன் விளக்கை தயாரித்து விளக்கேற்றுங்கள், மனம் அவன்பால் முழுமை அடையும்
இறைசக்தி அவ்வளவு எளிதானது மானிட மனம் தியானத்தில் செய்யும் ஒவ்வொன்றுக்கும் பதிலாக அது ஆனந்தத்துடன் ஓடிவருகின்றது.
கோகுலாஷ்டமி அன்று சிறிய பாதங்களை வரைந்தால் அச்சக்தி ஓடி வீட்டுக்குள் வருகின்றது
வாசலில் சாணத்தில் பிள்ளையாரை செய்தாலும் அந்த சக்தி வந்து வாசலில் நிற்கின்றது
பூஜையறையில் அந்த பெரும் சக்தியினை நினைந்து ஏற்றபடும் கற்பூரத்திலும், சாத்தபடும் இனிய பூ வாசனையிலும் அந்த சக்தி ஓடிவருகின்றது
ஆம் மனம் நிறைந்து ஒரு காரியத்தை செய்து வேண்டி நினைத்து அழைக்கும் பொழுது இறைவன் ஓடிவருகின்றான்
அப்படி இன்று விளக்கு ஏற்றி நினையுங்கள், ஒரு கணம் நினையுங்கள் போதும். இறைவன் ஓடிவந்து நிற்பான், இது நிச்சயம்
இந்நாளில் விளக்கேற்றி இறைவன் அருள்பெற்றுகொண்டிருக்கும் அனைவருக்கும் கார்த்திகை தீப
வாழ்த்துக்கள்
வீடெல்லாம் தீபம் எரியட்டும், தமிழரில் பெரும்பாலானோர் தாம் ஒரு இந்து என்பதை உணர்ந்து
திருவண்ணாமலை தீபத்தை நோக்கட்டும், அதன் உண்மை பொருளை உணரட்டும்
அந்த தீயில் தமிழகத்தை பிடித்த பலரின் அகங்காரமும் ஆணவமும் அழியட்டும், கருஞ்சக்தியும் காரிருளும் ஒழியட்டும்
தமிழகம் ஒளிரட்டும் அதில் ஞானம் மலரட்டும், தமிழகம் ஆன்மீகத்தில் மலரட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...