Saturday, March 25, 2023

சீதாப்பழம் குடுக்காம போறியே?

 மகா பெரியவாளைத் தரிசிக்கும்போது வெறும் கையுடன் செல்லக் கூடாதே என்பதற்காக குசேலர் அவல் கோண்டு போன மாதிரி ஒரு சீதாப்பழம் கொண்டு போன ஏழைப் பாட்டி.

ஒரு விள்ளல் சீதாப்பழம் சாப்பிட்டு,பாட்டிக்கு பூரிப்பை ஏற்படுத்திய மகா பெரியவா.
கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
புத்தகம்-பெரியவா பெரியவாதான்.
(சற்று சுருக்கப்பட்டுள்ளது)
மகா பெரியவாளின் அனுக்ரஹத்துக்கு உள்ளான இன்னொரு பெண்மணி. பெயர் - சுந்தா சுந்தரம்.
காஞ்சிப் பெரியவா மீது அப்படி ஒரு பக்தி. காஞ்சி சென்று மகா ஸ்வாமிகளின் தரிசனம் பெற்று, அந்த ஆனந்த வெள்ளத்தில் திளைப்பார். மகா பெரியவாளின் திருச்சந்நிதியின் எதிரே அமர்ந்து வெகு நேரம் தரிசித்துக் கொண்டிருப்பார்.
எப்போது காஞ்சி ஸ்ரீ மடத்துக்கு மகா பெரியவாளின் தரிசனத்துக்குச் சென்றாலும், ஒரு கூடை ரோஜா மலர்களைக் கொண்டு செல்வது சுந்தா சுந்தரத்தின் வழக்கம்.
வழக்கம்போல் ஒரு நாள் கூடை நிறைய புத்தம் புது ரோஜாப் பூக்களை வாங்கிக்கொண்டு காஞ்சி ஸ்ரீ மடத்துக்குப் போனார். அன்றைய தினம், சுந்தா சுந்தரத்துடன் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பாட்டியும் சென்றிருந்தார். மகா பெரியவாளைத் தரிசிக்கும்போது, வெறும் கையுடன் செல்லக் கூடாதே என்பதற்காக, குசேலர் அவல் கொண்டு போன மாதிரி, ஒரு சீதாப்பழத்தை எடுத்து வைத்திருந்தார்.
மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். ஆளாளுக்குக் கையில் ஒரு மூங்கில் தட்டில் ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம் என்று விதம் விதமான -காஸ்ட்லியான பழங்களை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர்.
தரிசனம் செல்லும் வரிசையை சீர் செய்து கொண்டிருந்த மடத்து சிஷ்யர் ஒருவர், இந்தப் பாட்டியின் கையில் இருந்த சிறிய சீதாப்பழத்தைப் பார்த்து விட்டு, " பாட்டி... இது மாதிரி பழங்களை எல்லாம் பெரியவாளுக்குக் கொடுக்கக் கூடாது. கொடுத்தாலும், அவர் ஏத்துக்க மாட்டார்.இதைக் கொடுத்துடாதீங்கோ நீங்க கொடுக்கலேன்னா ஒண்ணும் குறைஞ்சு போயிடாது...சாதாரணமா ஒரு நமஸ்காரம் மட்டும் பண்ணிட்டுப் போங்கோ" என்று சற்று அலட்சியமாகச் சொன்னான்.
இதைக் கேட்ட பாட்டியின் மனம் வருந்தியது.தன் சக்திக்கு ஏற்ற மாதிரி எதையாவது பெரியவாளுக்கு, அர்ப்பணிக்கலாம் என்று வந்தால் 'கூடாது' என்று தடுக்கிறானே...ஒருவேளை மகாபெரியவா இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டாரோ? என்று யோசித்து, அந்த சீதாப்பழத்தை எவரும் அறியா வண்ணம் தன் முந்தானையில் இறுக்கமான மனதுடன் முடிந்து கொண்டார்.
சுந்தா சுந்தரத்தின் முறை வந்தது. தான் காணிக்கையாகக் கொண்டு வந்த மூங்கில் தட்டை, பெரியவாளுக்கு சமர்ப்பித்துவிட்டு,பிரசாதம் பெற்று திருப்தியுடன் நகர்ந்தார்
அடுத்து சீதாப்பழ பாட்டியின் முறை.
கைகளைக் குவித்து மகா பெரியவாளை வணங்கி, அதன் பின் கன்னத்தில் போட்டுக் கொண்டு ஒரு நமஸ்காரம் செய்து, பிரசாத்துக்காக கையை நீட்டினார்.
மகா பெரியவா பிரசாதம் கொடுக்கவில்லை.
"பிரசாதம் தாங்கோ பெரியவா" என்று கேட்டார் பாட்டி..
புன்னகையுடன் பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தார் திரிகால ஞானியான மகா பெரியவா.
தன் தரிசனம் முடிந்ததால் சுந்தா சுந்தரம் சற்றே விலகி நிற்க, அவருடன் வந்த பாட்டி, மகா பெரியவாளின் அருகே வந்து கையெடுத்துக் கும்பிட்டு நின்று கொண்டிருந்தார். கண்கள் பணிக்க அந்த தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் சில விநாடிகளுக்கு பிறகு பிரசாதம் வேண்டித் தன் இரு கைகளையும் ஒரு நடுக்கத்துடன் பெரியவாளை நோக்கி நீட்டினார்.
ஆனால்,மகா பெரியவா பிரசாதம் கொடுக்கவில்லை ."மொதல்ல நீ கொண்டு வந்த பழத்தை எங்கிட்ட கொடு,அப்புறமா பிரசாதம் தர்றேன்" என்று சிரித்தார்.
பாட்டி தவித்துப் போனார். பெரியவா என்ன பழத்தைக் கேட்கிறார் என்பது புரியவில்லை. காரணம் எவருக்குமே தெரியாத வண்ணம் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் சீதாப்பழம் மகா பெரியவாளுக்கு எப்படித் தெரியும் என்கிற சந்தேகம்தான். எனவே பெரியவா இதைத்தான் குறிப்பிட்டுக் கேட்கிறார்' என்று தீர்மானித்து சீதாப்பழத்தைச் சட்டென்று எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை பாட்டிக்கு.
அதோடு, பெரியவாளைத் தரிசிப்பதற்காக இந்தப் பாட்டி வரிசையில் நின்றுகொண்டிருக்கும்போது ஒரு சிஷ்யன் பாட்டியிடம் வந்து சொல்லி விட்டானே - பெரியவாளுக்கு சீதாப்பழம் பிடிக்காது..அதைக் கொடுத்துடாதீங்கோ' என்று.இந்த வாசகம்தான் பாட்டியின் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. எனவே, 'பெரியவாளுக்குப் பிடிக்காது என்று சொல்லி விட்டான்.அதனால் தப்பித் தவறியும் இதைக் கொடுத்து பெரியவாளின் அபசாரத்துக்கு ஆளாகி விடக் கூடாது' என்று தீர்மானமாக இருந்தார் பாட்டி.
ஆனால்,அந்தப் பரப்பிரம்மம் விடுமா? தனக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டு இந்தப் பாட்டி இங்கே வந்திருக்கிறார் என்பதை அறியாதவரா அவர்?.
"எங்கே, நீ கொண்டு வந்த சீதாப்பழம்? அதைக் கொடு மொதல்லே,எனக்காகத்தானே கொண்டு வந்தே?" என்று பட்டவர்த்தனமாக, புன்னகை விலகாமல் பாட்டியைப் பார்த்துக் கேட்டே விட்டார்.
இனியும் பெரியவாளிடம் ஏதாவது பேசி சமாளிக்க முடியாது. வாயைத் திறந்து சீதாப்பழம் கொடு என்று கேட்டு விட்டார்.எனவே, புடவை முந்தானையில் இருந்து அதை எடுத்துத் துடைத்துக் கொடுத்தார்.
சீதாப்பழம் பாட்டியிடம் இருந்து, மகா பெரியவாளுக்கு மாறியது. அந்த சீதாப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டுமோ, அந்த முறையில் பக்குவமாக ஒரு துளி எடுத்துச் சாப்பிட்டார் மகாபெரியவா. இதை நேருக்கு நேர் காணும் பாக்கியம் பெற்ற பாட்டி சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்.
பிறகு பாட்டியைப் பார்த்து," ஆசையோட நீ கொண்டு வந்த சீதாப்பழத்தை ஒரு விள்ளல் எடுத்து ஒன் கண் முன்னாலயே போட்டுண்டுட்டேன்,பார்த்தியா" என்று சொல்லி பெரிதான ஒரு சிரிப்பு சிரித்து,"இப்ப தர்றேன் ஒனக்குப் பிரசாதம் வாங்கிக்கோ" என்று பிரசாதத்தை நீட்டினார்,மகா பெரியவா.
சுந்தா சுந்தரமும்,பாட்டியும் மீண்டும் ஒரு முறை மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, அங்கிருந்து பூரிப்புடன் வெளியே வந்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...