தமிழகத்தின் ஈரோட்டு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், திருமகன் ஈவெரா திடீரென காலமானதை அடுத்து, ஏற்பட்ட
காலியிடத்திற்கு நடத்தப்பட வேட்டிய இடைத்தேர்தல்,
உடனடியாகவே அறிவிக்கப்பட்டு விட்டது.
அது வரும் பிப்ரவரி 27 ம் தேதி தேர்தல் நடத்தவிருப்பதாக அறிவிப்பு வந்ததும், அரசியல் கட்சிகளிடையே
ஒரு பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஆளும் திமுகவுக்கு, இங்கு இறந்த தனது கூட்டணி கட்சி உறுப்பினர் சார்ந்த காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக அடிப்படையில் விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். அது காங்கிரஸிற்கு விட்டுக் கொடுத்துவிட்டது.
அதே சமயம், ஆளும் கட்சியின் இரண்டாண்டு கால ஆட்சியின் அளவுகோலாக இந்த இடைத் தேர்தல் பார்க்கப்படும் என்பதும் ஒரு கோணம்.
அதனால் , திமுகவே களத்தில் நிற்பது போன்ற
நிலைப்பாடு எடுத்து, ஆரம்பம் முதலே
வ்யூகங்களை வகுக்க ஆரம்பித்தது.
பொதுவாக இறந்தவரின் குடும்பத்தில் இருந்தே ஒருவரை இடைத் தேர்தலில் நிறுத்துவது, மக்களின் அனுதாப அலையைத் தூண்டி வாக்குகள் அதிகம் கிடைக்கும் என நினைப்பது சகஜம்.
அப்படித் தான் இது வரை நடந்து வருகிறது.
அதன்படி, இறந்தவரின் சகோதரரை
வேட்பாளராக்க காங்கிரஸ் தலைமை முடிவெடுத்து அறிவித்த நிலையில்,
அவரை விட பழகிய, முகம் தெரிந்த, அவர் குடும்பத்து நபர் ஒருவரை, அதாவது ஈவிகே எஸ் இளங்கோவன் அவர்களை நிறுத்த திமுக சார்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இதை ஏற்று காங்கிரஸ் அவரை நிறுத்தியது. இங்கிருந்தே திமுகவின் ஆடுபுலி ஆட்டம் துவங்கி விட்டது எனலாம்.
வேட்பாளர்கள் மனுதாக்கல், மனுக்கள் பரிசீலனை, திரும்பப் பெறுவது எல்லாம் முடிந்து இறுதிப் பட்டியல் வெளியானதும்,
காங்கிரஸை விட திமுக தான், தன் கட்சி உறுப்பினரின் வெற்றிக்குப் பாடுபடுவது போல் , களத்தில் தன் ரத,கஜ,துரத பதாதிகளை இறக்கியது.
மூத்த அமைச்சர் K N நேரு அவர்கள் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவை, அமைத்து உடனே ஈரோட்டுக்கு அனுப்பியது. அதில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா உட்பட அமைச்சர்கள், M P க்கள், மூத்த நிர்வாகிகள் பலர் இடம் பெற்றிருந்தனர்.
ஆட்சி எந்திரமே ஈரோட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகளோடு பெரிதாகக் கலந்தாலோசனை செய்ததாகக் கூடத் தெரியவில்லை.
திமுக சொல்படி காங்கிரஸ் கேட்க ஆரம்பித்தது. காங்கிரஸிலேயே பலருக்கு தங்களை முன்னிறுத்தாமல் கட்சி மேலிடம் புறக்கணிப்பதாகக் குறை இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, அதிமுக கூட்டணியில், முன்பாக தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்கு தொகுதியை அதன் தலைவர்
திரு G K வாசன் அவர்களிடம் பேசி , அதிமுக தன் கட்சி வேட்பாளரை நிறுத்தியது.
அதிமுக, இரண்டு பிரிவாக செயல்பட்டு , குழப்பம் இருந்த நிலையில் , திமுக தன் அடுத்த வியூகத்தை செயல்படுத்தியது.
OPS தரப்பில் அதிமுக என்று ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.
இன்னொரு வியூகம் TTVதினகரன் மூலம் ஒருவரை நிறுத்த வைத்தது.
இதில் பாஜக, ஒன்றிணைந்த அதிமுகவுக்கு ஆதரவு தருவதாகக் கூறி, தான் நேரடியாகப் போட்டி இடாமல் கூட்டணி தர்மம் காத்தது.
.
இங்கு தான் அதிமுக விஷயத்தில்
திமுக எதிர்பாராத அதிர்ச்சியைச் சந்தித்தது. பாஜக , OPS அணியை ஆதரிக்கும் என சிலர் கணக்கு போட,
EPS க்கு பிரச்னை ஏற்படும்., இரட்டை இலை முடக்கப்பட்டு விடும், சுயேச்சை சின்னத்தில் நின்றால் அதிமுக தோற்றுவிடும்.
தான் முன்னிறுத்திய காங்கிரஸ் எளிதில் வென்றுவிடும் என கணக்குப் போட்டது, தப்புக் கணக்காகியது.
மத்திய பாஜக, மாநில பாஜக அதன் தலைவர் அண்ணாமலை , இவர்களின் ஆலோசனைப்படியும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலும், EPS க்கு சாதகமான சூழல் உருவாக, OPS தன் வேட்பாளரை வாபஸ் பெற்றார்.
குக்கர் சின்னம் கிடைக்காததால் , தான் விலகுவதாக TTV தினகரன் கூறினாலும், அவரும் இரட்டை இலையை முடக்கினால், அதை வைத்து OPS , சசிகலாவுடன் , அதிமுகவைக் கைப்பற்றலாம் என போட்ட கணக்கு தவறியதும் காரணம்.
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம்
காங்கிரஸ் ஆதரவு, பாமக ஒதுங்கி நிற்பது ஒரு வகை Strategy.
தேமுதிக தனித்து நிற்பது ஒரு அசட்டு நம்பிக்கை. திமுகவின் ஆலோசனையாகக் கூட இருக்கக்கூடும்.
நாம் தமிழர் சீமான் எப்போதும் போல் தனியாக தனக்கென உள்ள பாதையில் பயணிக்க, களத்தில்
காங்கிரஸ்+திமுக கூட்டணிக்கும், அதிமுக+ பாஜக கூட்டணிக்கும் தான் நேரடி மோதல் என்ற சூழல் இப்போது உருவாகியுள்ளது.
அதிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஸ்டாலினுக்குமான மோதல் தான் இந்த இடைத் தேர்தல்.
எடப்பாடி ஜெயிக்கவில்லை என்றாலும், ஜெயித்தாலும், இது அவருடைய விடாமுயற்சி, ஆளுமைக்கு கிடைத்த அங்கீகாரம்.
பாஜகவை பொறுத்த வரை, கூட்டணி தர்மத்தைக் காத்த நேர்மை. இடைத் தேர்தலில் தன் பலத்தைக் காட்ட வேண்டிய அவசியம் அதற்கு இல்லை.
ஆனால், காங்கிரஸ் வென்றாலும் தோற்றாலும் காங்கிரஸிற்கு எந்த வகையிலும் பெருமை இல்லை.
திமுகவின் பணபலம், அதிகார பலம், படை பலம், எப்படியும் ஜெயிக்க வைத்துவிடும். ஆனால், அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலிலும்
அவர்கள் திமுக சொல்படி தான் கேட்டாக வேண்டிய நிர்பந்தம்.
.
பொதுவாக தேர்தல்களில், வாக்காளர்களுக்கு, வாக்குகளைப் பெற முறையற்ற பணப்பட்டுவாடா அதிகம் இருக்கும் என்றாலும், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நடந்த பண பரிமாற்றங்கள் மிகவும் அதிகம்.
இப்போது திமுக இடைத் தேர்தலில், மிக மிக மோசமான நடைமுறைகளைக் கடைபிடித்து, ஜனநாயக நெறிமுறைகள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை முகஞ்சுளிக்க வைத்து விட்டது . அத்துடன் , இனி வரவிருக்கும் காலங்களில் தேர்தல்களில், சமூக அக்கறையோடு செயல்படக் கூடிய , பணம் இல்லாத சாமானியர்கள் போட்டியிட இயலாது, என்பதை எடுத்துக் காட்டுவதாக இது அமைந்துள்ளது.
.
ஆடு, மாடு கால்நடைகளை , மந்தைகளாக சாவடியில் அடைப்பது போல், நாள் முழுதும் மக்களை சத்திரங்களில் அடைத்து கறி, சோறு, பணம், பரிசுப் பொருட்கள் என்று செலவு செய்து,
பெறுவது தான் ஜனநாயக முறைத்
தேர்தலின் இலக்கணமா?
ஒருவேளை, தேர்தல் கமிஷன் தேர்தலை ரத்து செய்தாலும், காங்கிரஸ் பெயர் தான் கெடும். திமுக பெயர் வராது.
பாஜக வென்று விட்டால் EVM எந்திரங்களில் தகிடுதத்தம் செய்து பெற்ற வெற்றி என்று கூறுபவர்கள், ஊடகங்களே வெளிச்சம் போட்டுக் காட்டிய பின்பும், எந்தக் கருத்தும் கூறாமல் வாளாவிருப்பது அவர்களின் நேர்மையற்ற மனத்தின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது.
.
தேர்தல் கமிஷன், இந்தத் தொகுதி இடைத்தேர்தலில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் இருக்கிறதோ என்ற ஐயத்தையும், பயத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி இருப்பது உண்மை.
ஆனால், தேர்தல் கமிஷன் மத்தியில் இருந்து, உத்தரவிட்டாலும், மாநில அளவில், தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தான் செயல்படுத்த வேண்டும். அவர்களுக்கு என்ன வகை நிர்பந்தங்கள், அழுத்தங்கள் இருக்கிறதோ எனவும் எண்ண இடமுண்டு.
மக்கள் ஒட்டு மொத்தமாக அயோக்கியர்கள் இல்லை. பணம், பரிசு, அரட்டல், உருட்டல், மிரட்டல் எல்லாம் மக்களில் பலரை சலனப் படுத்துவதும் உண்மையே.
ஒரு புறம் மாற்றம் விரும்பும் மக்கள் அண்ணாமலை அவர்கள் பின்னால் அணி திரள்வது நடக்கும் அதே வேளையில் , இன்னும் பணம், பரிசு, மது, கறிசோறுக்காக தங்க் வாக்குகளை அடகு வைக்கும் மக்களின் மனோபாவமும் வருத்தப்பட வைக்கிறது.
.
திமுக மக்களின் பலகீனங்களை வைத்து பரிசுகளால் அடிக்கிறது.
அது பெறும் வெற்றிகள் எத்தனை பெரிதானாலும், அந்த வெற்றியைப் பெறக் கையாளும் வழிகள் கேவலமானவை. நேர்மையாளர்கள் வெறுப்பவை. ஜனநாயகத்தைக் கேலிக்குறியதாக்குபவை.
மக்கள் மனம் மாற வேண்டும்.
பணத்திற்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும். அது திமுக போன்ற கட்சிகளை நாட்டிலிருந்து விரட்டும்..
அந்நாள் விரைவில் மலர வேண்டும்.
No comments:
Post a Comment