சென்னை, வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலி'ற்கு பக்கத்தில் உள்ளது, இந்த வித்தியாசமான உணவு கடை. வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும்போது, இன்முகத்துடன், 'சைகை'யால் வரவேற்கின்றனர், இரு பெண்கள்.
வந்தவர்களும், பதில் வணக்கம் தெரிவித்து, 'சைகை'யால் ஏதோ சொல்கின்றனர். பெண்கள் இருவரும் புரிந்து, தலையாட்டுகின்றனர்.
சிறிது நேரத்தில், சப்பாத்தி, தோசை மற்றும் இட்லி சுடச்சுட தயாராகி, அவர்களது இருக்கைக்கு செல்கிறது. பிரமிளா, ரத்னம் என்ற, இந்த இரு பெண்களுக்கும் காது கேட்காது, பேச வராது. ஆனால், பிரமாதமாக சமைக்க தெரியும்.
இருவரும் பிழைப்பு தேடி, தங்களது ஊரை விட்டு, சென்னை வந்தனர்.
இங்கே உள்ள காது கேளாதோர் அமைப்பின் மக்கள் தொடர்பாளராக இருக்கும் சித்ராவை சந்தித்து, தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவும்படி கேட்டனர்.
சித்ராவும் இவர்களை அழைத்து, மாற்றுத்திறனாளிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்களான, பிரபாகரன், கற்பகம் ஆகியோரை சந்திக்க வைத்தார்.
அவர்களது வழிகாட்டுதலின்படி, சேலம், ஆர்.ஆர்.பிரியாணி அதிபர், தமிழ்ச்செல்வனை சந்தித்தனர்.
'உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?' என்று அவர் கேட்க, 'எங்களுக்கு தள்ளு வண்டி வாங்கிக் கொடுத்தால், சென்னையில், நடமாடும் உணவகம் அமைத்து, பிழைத்துக் கொள்வோம்...'
என்று கூறியுள்ளனர்.
'தள்ளு வண்டி வேண்டாம்;சிரமம் அதிகம். அதற்கு பதிலாக, வேளச்சேரி பிரதான சாலையில் இருக்கும், என்னுடைய, ஆர்.ஆர்.பிரியாணி கடையையும், கடைப் பொருட்களையும், காலையும் - மாலையும் கட்டணமில்லாமல் உபயோகித்துக் கொள்ளுங்கள்...' என்று, கொடுத்து உதவினார்.
அதன்படி, இப்போது இவர்கள் , காலையில், இட்லி, தோசை மற்றும் இடியாப்பமும்; மாலையில், இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா மற்றும் 'பிரைடு ரைஸ்' என, விதவிதமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இவர்களது சுவையான உணவிற்காகவே, நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
அவ்வாறு வருபவர்கள், இவர்களின் நிலைமையை புரிந்து, 'சைகை' மொழியில் வேண்டியதை கேட்டு, சாப்பிடுகின்றனர்.
புது வாடிக்கையாளர்களுக்கும், இந்த இரு பெண்களுக்கு பாலமாகவும், பணவரவு செலவை பார்த்துக் கொள்ளவும் கூடவே இருக்கிறார், சித்ரா.
தற்போது, தங்களைப் போன்ற மேலும் சிலருக்கு வேலை வாய்ப்பு தர உள்ளனர்.உழைத்து பிழைக்க தயாரான இவர்கள்,
பலருக்கு வேலை வாய்ப்பு தரும் அளவிற்கு உயர்ந்திருப்பது பாராட்ட வேண்டியது தான்.
தலைவணங்கிறேன்.
No comments:
Post a Comment