தமிழ் திரை நடிகர் முத்துராமன்....
அரசிளங்குமரி என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த பின்னர்தான் வெகுஜன ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார் முத்துராமன். அதன் பின் பல திரைப்படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களில் தோன்றி தனக்கென தனி முத்திரை பதிக்கத் தொடங்கினார் முத்துராமன், அவற்றுள் குறிப்பிடத் தகுந்த படங்கள் நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி, தெய்வம், சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், காசேதான் கடவுளடா, எதிர் நீச்சல், ஊட்டி வரை உறவு, மயங்குகிறாள் ஒரு மாது, வாணி ராணி, மூன்று தெய்வங்கள் போன்றவை அதில் அடங்கும்.
முத்துராமன் ஒரு கண்ணியமான இடைவெளியில்தான் கதாநாயகிகளுடன் நடிப்பார். அது அன்றைய ரசிகர்களிடையே அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
கே.ஆர்.விஜயாவுடன்தான் அதிகளவு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் முத்துராமன். தேவிகா, ஜெயலலிதா, காஞ்சனா, என முன்னணி கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அவர். அதிலும்
காஞ்சனாவுடன் 19 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடக நடிகையான சுலோச்சனா என்பவரை காதல் திருமணம் புரிந்தார்.
அக்டோபர் 16-ம் தேதி, 1981-ம் ஆண்டு ஆயிரம் முத்தங்கள் என்ற படத்தின் படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றிருந்த சமயத்தில், காலை நடைபயிற்சிக்கு சென்றிருந்தார். திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட கீழே விழுந்துவிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்துவிட்டார்.
அப்போது அவருக்கு 52 வயதுதான். உடல் நலத்தில் அக்கறையுடன் இருந்து வந்த அவர் எப்போதும் ஆரோக்கியமாகவே இருந்தார். அதனால் அவருடைய மறைவு அவரது குடும்பத்தாருக்கும், திரைத்துறைக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
நட்பு, பழகும் தன்மை இவற்றைப் பொருத்தவரை ஒரு சகாப்தம் மறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும் என்று எம்.ஜி.ஆர் தமது இரங்கலை முத்துராமனின் மறைவின் போது கூறினார்.
No comments:
Post a Comment