``அப்பாவுக்கு `4 வயசு இருக்கும்போது அவரின் அப்பா இறந்துட்டார். அதனால, மகனுடன் தன் அப்பா வீட்டுல பாட்டி குடியேறினாங்க.
அப்பா நாலாவதுவரைதான் படிச்சிருக்கார். இசை மீதான நாட்டத்தால, ஸ்கூல் போகாம பாட்டு வாத்தியார்கிட்ட மியூசிக் கத்துக்கிட்டார். அப்பவே கச்சேரிகள்லயும் வேலை செஞ்சிருக்கார். சினிமா, நாடகத்துறையினருடன் ஏற்பட்ட பழக்கத்துல, சேலம் மாடர்ன் தியேட்டர் உட்பட பல ஊர்கள்லயும் அவர் வேலை செஞ்சிருக்கார். அப்பாவுக்கு நடிக்கிற ஆசையும் இருந்திருக்கு. ஒருசில பட வாய்ப்புகளும் அவருக்கு வந்திருக்கு. ஆனா, அப்பா உயரம் குறைவா இருந்ததால, நடிகைகள் பலரும் அவருடன் நடிக்கத் தயங்கியிருக்காங்க. அதனாலேயே, நடிப்பு ஆசையை விட்டுட்டு, மியூசிக் துறையில மட்டும் கவனம் செலுத்தினார். அதுலயும் அவ்வளவு சுலபமால்லாம் அவருக்கு வாய்ப்புகள் கிடைச்சுடலை.
குடும்பத்தினர்
சினிமாவுல ஜெயிக்கணும்ங்கிற வைராக்கியத்துல, குடும்பத்தினரைப் பிரிஞ்சு, ஊர் ஊரா சுத்தியிருக்கார். `பையன், எங்க, எப்படி இருக்கானோ?’ன்னு அப்பாவின் குடும்பத்தினர் வருஷக்கணக்குல தவிச்சிருக்காங்க. சபாக்கள், ஸ்டூடியோக்கள், தியேட்டர்கள்ல தின்பண்டங்கள் விற்பனை செய்யுற வேலையும் செஞ்சிருக்கார். படப்பிடிப்புகள்ல சின்னச் சின்ன வேலைகள் செஞ்சும், சினிமாக்காரங்க வீட்டுல உதவியாளராவும் சிரமப்பட்டிருக்கார். சுயமா பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், `நான் உயிரோடுதான் இருக்கேன்'னு குடும்பத்தினருக்கு லெட்டர் அனுப்பினார். பிறகு, தன் குடும்பத்தினரை வரவழைச்சு சேலத்துல தன்னோடவே தங்க வெச்சுகிட்டார். கல்யாணமானதும் குடும்பத்துடன் சென்னையில குடியேறினார்.
இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் ஐயாகிட்ட அப்பா உதவியாளரா இருந்தார். அவரின் திடீர் மறைவால, சுப்பராமன் ஐயாவின் கைவசம் இருந்த சில படங்களுக்கு இசையமைக்கிற வாய்ப்பு அப்பாவுக்குக் கிடைச்சது. புதுமுகம்னு அப்பாவுக்குப் பலரும் வாய்ப்பு கொடுக்கத் தயங்கினாங்க. `எம்.எஸ்.வி மியூசிக் போட்டாதான் படம் ஓடும்'னு அவங்களே சொல்லுற அளவுக்குத் தன் திறமையால அப்பா முன்னேறினார். அதனால, எங்க குடும்பத்தின் கஷ்ட நிலை மாறுச்சு. தன் ஏழு பிள்ளைகளையும் செளகர்யமா வளர்த்தார்.
அப்பாவுக்கு மியூசிக் தவிர வெளியுலகம் எதுவுமே தெரியாது. குழந்தை மாதிரிதான் ரியாக்ட் பண்ணுவார். குடும்பமா உட்கார்ந்து டிவி பார்ப்போம். `இந்தப் பாட்டு வித்தியாசமா இருக்கே'ம்பார். `விளையாடாதீங்கப்பா, இது நீங்க மியூசிக் பண்ண பாட்டுதான்'னு சொல்லுவோம். `அப்படியா, ஞாபகம் இல்லை. இருந்தாலும், ஓரளவுக்கு நல்லாதான் வேலை செஞ்சிருக்கேன்போல'னு சிரிப்பார். வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் அம்மாதான் பார்த்துகிட்டாங்க. அவருக்கு எல்லாமுமா இருந்த எங்கம்மா, அப்பாவின் இறப்புக்கு சில வருஷங்களுக்கு முன்பே இறந்துட்டாங்க. அதனால, மனதளவுல வருத்தமாவே இருந்தார். மத்தபடி ரொம்பவே சந்தோஷமாவும், அர்த்தமுள்ளதாவும்தான் அப்பாவின் வாழ்க்கை அமைஞ்சது" என்கிறார் நெகிழ்ச்சியாக எம்.எஸ்.வியின் மகள் லதா மோகன்.
நன்றி: சினிமா விகடன்
No comments:
Post a Comment