நந்தி கல்யாணம் பார்த்தோருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள். அதன்படி நந்தி கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்தவருடம் நந்தி கல்யாணம் நடைபெறுவதற்குள் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர்.
*30-03-2023 நந்தி திருமணம்.*
பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமான் அவதாரம் தெய்வீகத்தன்மை வாய்ந்தது. சிலாத முனிவர் என்பவருக்கு வீதாஹல்யர் என்ற பெயரும் உண்டு. அவர் மனைவி பெயர் சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாகியும் புத்திரபேறு இல்லை. அதனால் அவர் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு தரிசனம் கொடுத்தார். முனிவரே, நீங்கள் எப்போதாவது யாகம் செய்வதற்காக நிலத்தை உழும் போது, என்னைப் போன்று வடிவுடன் அழகான ஒரு புதல்வரை பெறுவீர்கள் எனக்கூறி மறைந்தார்.
சிலகாலம் கழித்து சிலாத முனிவர் யாகம் செய்ய எண்ணி நிலத்தை உழுதபோது, ஏர்க்காலில் தட்டுப்பட்ட ஒரு செப்பு பெட்டகத்தை மண்ணிற்குள் இருந்து எடுத்தார். அதில் ஒரு அழகான ஆண் குழந்தை இருந்தது. அதற்கு 4 கால்கள் இருந்தன. மேலும் சிவனைப்போல் ஜடா முடியுடனும் காணப்பட்டது. சிவ வாக்கினை நினைவு கூர்ந்த முனிவர் அக்குழந்தைக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டினார். 14 ஆண்டு காலம் சகல கலைகளிலும், வேத ஆகம புராண சாத்திரங்களிலும் வல்லவரானார் செப்பேசன்.
ஒரு முறை அவர் ஆழ்ந்த சிவ சிந்தனையில் இருந்தார். அப்போது அவர் சிவனுடைய அந்தரங்க காவலராக இருந்ததும், அப்போது ஆடி என்ற அசுரனை சிவபெருமான் உத்தரவு இல்லாமல் அனுப்பியதால் சிவபெருமானால் சபிக்கப்பட்டு இப்பூமியில் பிறந்தது நினைவுக்கு வந்தது. பிறகு சிவனை நோக்கி ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தைக் கண்டு மன மகிழ்ந்த பரமேசுவரன் அவர் முன் தோன்றி, செப்பேசருக்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கங்கை நீர், இறைவியின் கொங்கை நீர், இடப வாய்நுரை நீர் ஆகிய ஐந்து வகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து தங்கப்பட்டம் அணிவித்து நந்தீஸ்வரர் என பெயர் சூட்டினார்.
அத்துடன் சிவன், தமக்கு சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்கு தலைமை தாங்கும் பதவியினையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும் நந்தீஸ்வரருக்கு அளித்தார். பின்னர் பட்டு சாத்தி, முடி அணிவித்து வீதி உலாவாக நந்தி தேவரை எடுத்து செல்கின்றனர். அன்று முதல் சிவனை விட்டு எங்குமே நீங்காமல், அவர் வாகனமாகவும் ஆனார். அதனால் அவர் நந்தி தேவர் என்று அழைக்கப்பட்டார்.
பரமேஸ்வரன் நந்தீஸ்வரருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அவருக்கு திருமழப்பாடியில் வாழ்ந்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசை என்ற பெண்ணை பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமழப்பாடியில் திருமணம் செய்துவைத்தார்.
இதற்காக திருவையாறில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருமழப்பாடிக்கு நந்தீஸ்வரர் குதிரை வாகனத்திலும், ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி வெட்டிவேர் பல்லக்கிலும் செல்கின்றனர். திருமழப்பாடியில் இறைவன் வைத்திய நாதரும், இறைவி சுந்தராம்பிகையும், கண்ணாடி பல்லக்கில் வந்து மாப்பிள்ளை வீட்டாரை எதிர் கொண்டு அழைக்கின்றனர்.
அன்று மாலை நந்தீஸ்வரர் சுயம்பிரகாசை திருமணம் தாலிகட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதியருக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. பின்னர் அங்கு இருக்கும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் புதுமணத் தம்பதிகளுடன் இறைவன் ஐயாறப்பர், தர்மசம்வர்த்தினி திருவையாறு புறப்பட்டு வருகின்றனர்.
இந்த திருமண விழாவுக்கு திருவையாறு மற்றும் அதன் அருகில் உள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவேதிக்குடி, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய திருத்தல இறைவன் சார்பில் அவற்றின் சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு அன்பளிப்புகள் வழங்குகின்றனர்.
“நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்” என்பது சான்றோர் வாக்கு. நந்தி கல்யாணம் பார்த்தோருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள். அதன்படி நந்தி கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்தவருடம் நந்தி கல்யாணம் நடைபெறுவதற்குள் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் திருமழப்பாடியில் நடைபெறும் இந்த தெய்வீக திருமணத்தை பல்லாயிரக்கணக்கானோர் திரளாக கூடிச் சென்று தரிசிக்கின்றனர்.
No comments:
Post a Comment