2023 ம் ஆண்டில் பங்குனி உத்திர திருநாள் வருகின்ற ஏப்ரல் 05ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல் 04ஆம் தேதி காலை 10.29 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 05ஆம் தேதி பிற்பகல் 12.09 மணி வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளது.
பங்குனி உத்திரம் திருநாள் விழாவைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், 12வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் தான் பங்குனி உத்திரம். விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். உத்திர நட்சத்திர நாயகன் அதாவது அதிபதி சூரியன். அதே நாளில் நிறை நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன.
சிவபெருமானை கல்யாண சுந்தரமூர்த்தியாக பாவித்து அனுஷ்டிக்கும் விரதம் இது. சிவபெருமான், பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். மீனாட்சியைத் திருமணம் செய்துக் கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.
பர்வதராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.ஸ்ரீரங்க மன்னார் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.
வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜுனன் தோன்றியதும் பங்குனி உத்திர நந்நாளில் தான். திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தெய்வானை, வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர். தசரத மைந்தர்கள் ஸ்ரீ ராமன் - சீதை, லட்சுமணன் - ஊர்மிளை, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் - ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது.
அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான். பங்குனித் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். திருமழப்பாடியில் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்குப் பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.
காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். லோபமுத்திரை அகத்திய முனிவரை மணந்து கொண்டதும் இன்று தான். பூரணா, பூஷ்கலா சாஸ்தாவையும், ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது. தேவேந்திரன் இந்திராணி, நான்முகன் கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும் இந்த நாளில் தான். இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது.
காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது. இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது. மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள். மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்த நாள்.
*** இந்த நந்நாளில் கோயில்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ;----
பழனியில் காவடி உற்சவம்.
மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம்.
சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம்.
காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம்.
மதுரையில் மீனாட்சி திருமணம்.
இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். பக்தர்கள், எளியோருக்கு அன்னதானம் செய்து தெய்வங்களின் ஆசியைப் பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment