Wednesday, July 19, 2023

மசால்வடை_புராணம்.

 நம் தமிழ்நாட்டில் ஆமவடை, பருப்பு வடை, மசால் வடை என்று பல்வேறு நாம கரணங்களில் அழைக்கப்படும் மசால்வடையின் ருசி தனித்துவமானது! எட்டத்துல பார்த்தா தாண்டா காமெடியா இருப்பேன்.. கிட்டத்துல பார்த்தா டெரரா இருப்பேண்டான்னு நம்ம வடிவேலு சொல்ற மாதிரி இதை சூடா சாப்பிட்டா ஒரு ருசியிலும் ஆறிப்போய் சாப்பிட்டா இன்னொரு ருசியிலும் இருக்கும்.!

நம்ம ஊர் தரை லோக்கல் YouTuber விடியோ முதல் ஹாலிவுட்டின் பிரம்மாண்ட அவதார் படத் தயாரிப்பு வரை இருக்கும் வித்யாசம் போல இந்த மசால்வடை கோலி குண்டு சைசில் துவங்கி டோனெட் சைஸ் வரை பல்வேறு வடிவங்களில் தயாராகிறது. இன்றும் மதுரையில் ₹10க்கு ஐந்து வடைகள் கோலி சைசிலும் கிடைக்கிறது! 1 வடை ₹10என டோனட் சைஸிலும் கிடைக்கிறது!
வடையின் அளவை பொறுத்து ருசியும் மாறுபடும். பொதுவா இந்த வடைக்கு மாவை நறநறப்பா அரைக்கணும், அதான் பெஸ்ட்! சிலர் கொஞ்சம் இரக்கம் காட்டி துவையல் பதத்தில் ஆட்டிவிடுவார்கள்! அது சூடா சாப்பிட்டா மட்டுமே நல்லா இருக்கும்! ஆறிட்டா கல்லு போல ஆகிடும் மொறு மொறுன்னு மேற்புறமும் உள்ளே மென்மையாவும் இருப்பதால் தான் ஆமவடைன்னு பேரு வந்துச்சாம்!
இந்தப் பெயர்க் காரணம் இன்று வரை மதுரை வடைப்பிரியர்களின் நடுவே அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. மதுரையில் மட்டும் தசாவதாரம் கமலை விட அதிகமான கெட்டப்புகளில் மசால்வடை பல “பாத்திரங்களில்”வீற்றிருக்கும்! பொதுவாக சட்னி வகைகள் வைத்து சாப்பிட தேவையில்லாத வடை மசால் வடை! இருப்பினும் சில கடைகளில் இதற்கென்றே..
சில பிரத்யேக சட்னிகள் வைத்திருப்பார்கள்! பச்சை மிளகாய், இஞ்சி புதினா போன்ற சட்னிகள், பாம்பே குருமான்னு மசால் வடையோடு குழம்பி அடிக்கும் பகாசூரர்களை மதுரையின் சாலை ஓரங்களில் மானாவாரியாக காணமுடியும். அசால்டாக ஆறு வடைகளை சாப்பிட்டு ஒரு டீ சொல்லும் கண் கொள்ளா காட்சிகள் இங்கு மட்டுமே கிடைக்கும். தேங்காய் சட்னி இதற்கு ஓரளவு ஏற்றது!
அதிலும் ஹார்பிக் கம்பெனிக்கே முன்னோடியாக சிவப்பு மிளகாய் பச்சை மிளகாய்னு 2 வித நிறங்களில் தேங்காய் சட்னி கொடுத்து அசத்தும் மசால் நேசர்களும் இங்குண்டு! அண்ணா பஸ் ஸ்டாண்ட் சங்கர் காபி கடையின் மசால்வடை ஒவ்வொன்றும் டோனட் சைசில் இருக்கும் 1 வடை 1 டீ சாப்பிட்டாலே 3 மணி நேரம் பசிக்காதுன்னு ப்ரீத்திக்கே தராத கேரண்டியைத் நான் இதற்குத் தருவேன்.
90களில் அழகப்பன் நகர் பாண்டியன் தெருவில் இருந்த பார்வதி அக்கா டீக்கடை மசால் வடைக்கு படு ஃபேமஸ்! அவர் கடை மசால் வடை ஒவ்வொன்றும் பாகுபலி போல் மிகவும் பிரம்மாண்டமானவை இன்றைக்கு பெரிய ஓட்டல்களில் கிடைக்கும் மசால்வடையின் அளவை விட கிட்டத்தட்ட 4 மடங்கு பெரிதானவை! எனவே தான் பார்வதி கடைக்கு காலகேயர்களாய் பலர் (ப) வடையெடுத்தனர்!
கிருஷ்ணாபுரம் காலனி, கூடல் நகர், மேலமாசி வீதியில் கோலி குண்டு சைஸிலும், மதுரை வடை ஃபேக்டரிகளில் வெவ்வேறு சைசிலும் மசால்வடைகள் தினமும் லட்சக்கணக்கில் சுட்டுத் தள்ளப்படுகின்றன! மதுரையைத் தாண்டி சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டையிலும் இதே போலத்தான். நெல்லை மாநகர் அல்வாவின் பிடியில் சிக்குண்டதால் அங்கு மசால்வடை..
மதுரை அளவு ஃபேமஸ் இல்லை! அப்படியே நாரோயில் பக்கம் போனா இதே வடையை கொஞ்சம் மென்மையாக அரைத்து அதை ரசத்தில் ஊற வைத்து ரசவடையாகத் தருவார்கள்!
அருமையாக
இருக்கும். சேலம்,கோவை, ஈரோடு பக்கமெல்லாம் பூண்டு தட்டிப் போட்ட மசால்வடைக்கு உயிரையும் தருவார்கள். தமிழகத்தில் பல உடுப்பி ஓட்டல்களின் ஃபேவரைட் ரெஸிபி இந்த மசால்வடை!
மசால்வடை புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம் போன்ற சிற்றான்னங்களுக்கு பொருத்தமான ஜோடியாகும். சேலத்தில் குகை எனும் பகுதியில் இருந்த எங்கள் ஓட்டலில் தயிரில் மசால்வடையை ஊற வைத்து தருவோம். அன்று அதை சாப்பிட ஒரு பெரும் சிங்கக் கூட்டமே குகை வாசலில் காத்திருந்தன. அதன் தயிர் வடையின் செய்முறை ஃபார்முலா எங்கள் தொழில் ரகசியமாகும்!
நல்ல மழை பெய்யும் ஒரு மாலை நேரத்தில் ஜன்னலோரம் அமர்ந்து ஏலக்காய் மணக்க சூடான ஒரு மசாலா டீ அல்லது சிக்கரி மணக்கும் அற்புதமான ஃபில்டர் காபி இதோடு இஞ்சி, புதினா, மல்லி சட்னியோடு சுடச்சுட மொறு மொறுப்பான பூண்டு தட்டிப் போட்ட மசால்வடையை கடித்துக்கொண்டு நமக்குப் பிடித்த பாடலை கேட்கும் சுகம் இருக்குதே அதுதான் சார் சொர்க்கம் என்பது!!
May be an image of coconut macaroon and croquette

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...