ஒரு மைதானத்தின் காம்பௌண்டு சுவரை சுற்றியுள்ள புதர் பகுதிகளை ஒரு சிறுவன் நோட்டம் இட்டவாறு சுற்றிக்கொண்டிருந்ததை காண முடிந்தது.
அருகிலிருந்த ஒரு டீ கடையில் டீ குடித்தவாறே அந்தச் சிறுவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதிகபட்சமாக 20 நிமிடம் ஆகியிருக்கும். ஒரு சணல் பையில் பாதியளவு நிறைந்த ஒரு மூட்டையுடன் அந்த டீக்கடையை சுற்றியும் நோட்டமிட்டவாறே வந்து நின்றான். அவனிடம் பேச்சுக்கொடுத்த போது, பள்ளிக்கு செல்வதில்லையா தம்பீ என கேட்டேன்.
"பையில் என்ன?"
" காலி பாட்டில்கள் அண்ணா"
" இப்படி இருந்தால் படிப்பில் எப்படி நாட்டம் வரும்?" அப்பா என்ன தொழில் செய்யுறாரு ?"
"அப்பாவுக்கு உடம்புக்கு சரியில்லை.வீட்டோடு தான் இருக்கிறாரு.எங்க அம்மா தான் ஏரி வேலைக்குப் போறாங்க!"
"உன் கூடப் பிறந்தவங்க ?"
"எனக்கு ஒரு அக்கா இருக்காங்க. அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்குறாங்க!"
" அது சரி.இந்த பாட்டில்களை பெருக்குவது உனக்கெப்படி???"
" ஸ்கூல் விட்டதும் இங்கதான் வந்து விளையாடுவோம்.சாயங்காலம் ஆனதும் இங்க குடிகாரங்க நிறைய பேரு வருவாங்கல்ல....
அவங்க விட்டுட்டு போற காலி பாட்டிலுங்க நிறைய இருப்பதை பார்த்தேன்.அப்புறம் தான் எங்கம்மாகிட்ட இதைப்பத்தி சொன்னேன்...
எங்கம்மா தான் இதை எடுத்துட்டு வரச் சொன்னாங்க...
" ஒரு நாளைக்கு எவ்வளவு பாட்டில் எடுப்ப?"
"நான் இங்கேயும் , அந்த சுடுகாட்டுகிட்டேயும் மட்டும் தான்ணா பெருக்குறேன்..."
அறுபது எழுபது பாட்டில் கிடைக்கும்.
ஞாயிற்றுக் கிழமை மட்டும் 150 பாட்டில் வரைக்கும் கிடைக்கும்!"
தினமும் எடுத்துட்டு போய் முருகேசண்ணன் கடையில கொடுத்து காசு வாங்கிட்டு போய் அம்மாகிட்ட கொடுத்துட்டு ஸ்கூலுக்கு போய்டுவேன்!"
"உங்க அம்மா உனக்கு , காசு எதுவும் தருவாங்களா? "
எனக்கு எதுக்கு னா காசு? அப்பாவுக்கு செலவு, எங்களுக்கு செலவு னு எங்கம்மா எவ்வளவு கஷ்டப்படுறாங்க தெரியுமா?
"இதை பண்ணிகிட்டு படிப்பில் கவனம் குறைஞ்சிடப் போகுதுப்பா!"
" அதெப்படி ணா? படிப்புதானே முக்கியம்?
படிச்சு ஒரு வேலைக்கு போனாதானே எங்க அம்மாவ , குடும்பத்தை நல்ல படியாக கவனிக்க முடியும் என்றான்...
No comments:
Post a Comment