ஒரு காலத்துல எத்தனையோ பேரின் அன்பை, காதலை, ஏக்கத்தை , எதிர்பார்ப்பை தீர்த்து வைத்த காயின் பாக்ஸ் ஃபோன் இன்று ஏறக்குறைய காணாமல் போய்விட்டது.
சமீபத்தில் நான் பொள்ளாச்சி சென்றிருந்த போது, அங்குள்ள ஒரு கடையில் ஒருவர் இந்த காயின் பாக்ஸ் ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததை கண்டேன்.
2005 ஆம் வருடம் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்..
அப்பொழுதுதான் இந்த காயின் பாக்ஸ் ஃபோன் பரவலாக மக்களிடம் உபயோகத்தில் இருந்த நேரம்.
அதற்கு பல வருடங்களுக்கு முன்பே இந்த ஃபோன் பல வடிவங்களில் உபயோகத்தில் இருந்தாலும், செல்ஃபோன் பரவலான காலத்தில் இந்த காயின் ஃபோன் உபயோகம் அதிகரித்தது.
அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பார்கள். அதுபோல இந்த காயின் ஃபோன் உபயோகம் செல்ஃபோன் வந்த காலத்தில் அதிகமானது.
நான் பள்ளியில் படித்தபோது எனக்கு தினமும் இரண்டு ரூபாய் பாக்கெட் மணி கிடைக்கும். அதை சேர்த்து வைத்து, சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு இந்த காயின் பாக்ஸ் ஃபோனில் இருந்து பேசியது இன்னும் மறக்கவில்லை.
ஃபோனின் வாயில் ஒரு ரூபாய் காயின் ஒன்றினை போட்டு, நம்பர் டயல் செய்ய வேண்டும். எதிர் முனையில் பேசுபவர்கள் ஃபோன் அட்டென்ட் செய்ததும், உண்டியலில் காசு விழும் சத்தத்துடன் காசு ஃபோனுக்குள் விழும்.
அந்த சத்தத்தை கேட்டதுமே நமக்குள் ஒரு இனம் புரியாத பரவசம் உண்டாகும்.
ஒரு நிமிடம் முடிவதற்கு பத்து வினாடிக்கு முன்பாகவே நமக்கு பீப் பீப் என சத்தம் கேட்க ஆரம்பித்துவிடும். உடனடியாக அடுத்த காயின் போட வேண்டும்.
ஃபோன் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே நம்மிடம் இருக்கும் பணத்திற்கு ஒரு ரூபாய் காயின்களாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
நானெல்லாம் 100 ரூபாயை கூட, ஒரு ரூபாய் காயின்களாக மாற்றி வைத்து பேசியிருக்கிறேன்.
சில நேரம் கையில் காசு இருக்கும் போது, வேண்டுமென்றே தெரியாத நம்பருக்கு ஃபோன் போட்டு பேசியதும் உண்டு.
காயின் பாக்ஸ் ஃபோனில் பேசுவது அத்தனை ஆனந்தமாக இருந்தது.
அப்பொழுதுதான் செல்ஃபோனில் காலர் ட்யூன் வந்த சமயம். யாருக்காவது ஃபோன் செய்தால் நமக்கு பாட்டு கேட்கும் என்பதே அபூர்வமாக இருந்தது.
நானெல்லாம் காயின் பாக்ஸ் ஃபோனில் இருந்து எனக்கு தெரிந்தவர்களுக்கு ஃபோன் செய்து, உங்க ஃபோன்ல வர்ற பாட்ட கேக்கணும், அதனால் நான் ஃபோன் பண்ணா அட்டென்ட் பண்ணாதீங்கனு முன்னாடியே சொல்லிட்டு, காயின் போட்டு பாட்டு கேட்டிருக்கேன்.
அப்படி நான் அந்த நேரத்துல அதிகமா கேட்ட பாடல்கள்.. "வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்", ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன், பார்த்த முதல் நாளே பாடல்கள்தான்.
செல்ஃபோன் மக்களிடம் பிரபலமானதற்கு பிறகு இந்த காயின் பாக்ஸ் ஃபோன் படிப்படியாக காணாமல் போய்விட்டது.
2007 ஆம் வருடம் ஈஸ்டருக்கு முந்தைய இரவில், பதினோரு மணிக்கு மேல்.. என் தோழி ஒருத்திக்கு வாழ்த்து சொல்வதற்காக, பூட்டியிருந்த ஒரு கடைவாசலில் இருந்த காயின் பாக்சில் இருந்து 113 ரூபாய்க்கு பேசினேன்.
அன்றைக்கு அத்தனை ஒரு ரூபாய் காயின்களை சாயங்காலம் முதலே சில்லறை மாற்றி வைக்க அலைந்து அலைந்து நான் பட்ட பாடு இருக்கே...
இன்றைக்கும் மறக்கவில்லை.
இன்று காயின் பாக்ஸ் ஃபோன்கள் துருப்பிடித்து , காணாமல் போயிருக்கலாம்.
ஆனால்...
அது தந்த நினைவுகள் இன்றும் பசுமை மாறாமல் மனதில் உள்ளது..!
No comments:
Post a Comment