அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.41.9 கோடி வைப்புத் தொகை பறிமுதல் - அமலாக்கத் துறை தகவல்..
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது...
வைப்புத் தொகை தவிர பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது என்றும், இதில் வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவை அடங்கும் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணியின் சொகுசு காரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சொகுசு காரில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும், இதனால் சொகுசு காரை பறிமுதல் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
அமலாக்கத்துறை சோதனை பின்னணி: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். அவரது மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீட்டிலும் இந்தச் சோதனை நடந்தப்பட்டது.
சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் நேற்று காலை முதல் நடந்த 13 மணி நேரம் சோதனைக்குப் பிறகு, சென்னை நுங்காம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். சிஆர்பிஎஃப் படை வீரர்களின் துணையுடன் பொன்முடி அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் பொன்முடியின் சொந்த வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அவரது மகன் கவுதம சிகாமணியையும் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் வைத்து அமலாக்கத் துறை இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சர் பொன்முடியின் அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் காத்திருந்த தொண்டர்களும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு தங்களது வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர்....
No comments:
Post a Comment