காங்கிரஸ் தோற்று திமுக ஆட்சியைப் பிடித்ததற்குப் பலகாரணங்கள்.
அவற்றில் சில:
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது காங்கிரஸ் அரசு துப்பாக்கி சூடு நடத்தியது.
சுதந்திரம் கிடைத்தால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தளர்ந்துபோய் காங்கிரஸ் பண்ணையார்களின் கட்சியாகவே மாறிவிட்டிருந்தது.
கடுமையான உணவுப் பஞ்சம் வந்த நேரத்தில் அதை சமாளிக்க முடியாத காங்கிரஸ் அரசு எலிக்கறியை சாப்பிடச்சொல்லி மக்களுக்கு அறிவுறுத்தியது.இருபதாண்டுகள் ஆண்டுவிட்டு எலிக்கறியைத் திண்ணச் சொல்கிறீர்களே என்று கடுமையான விமர்சனத்துக்கு காங்கிரஸ் உள்ளானது.
எம்ஜியார் சுடப்பட்டு மருத்துவமனையில் கட்டுடன் இருந்த எம்ஜியாரின் போஸ்டர் பட்டிதொட்டியெங்கும் ஒட்டப்பட்டு,அது திமுகவுக்கு சாதகமான அனுதாப அலையாக மக்களிடம் எழுச்சியைப் பெற்றது.
இப்படிப் பல காரணங்கள்.
நல்லா இருந்த ஒரு மனிதன் திடீரென்று சாவதற்கு அவன் உடம்பில் வெளியில் தெரியாமல் இருந்த பல நோய்கள் காரணமாகிவிடுவது போல் பல காரணங்கள் ஒன்று சேர்ந்து காங்கிரஸைத் தோல்வியுறவும் திமுகவை வெற்றிபெறவும் செய்துவிட்டது.
1967 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவ, திமுக அரியணை ஏறியது.
அப்போது ஒரு காங்கிரஸ்காரர் காமராஜரிடம் சொன்னார்,
"மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். அப்படியும் நீங்கள் ஜெயிப்பதற்குத் தேவையான வாக்குகள் விழவில்லை. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தீர்களா? எதிர்க்கட்சிக்காரர்கள் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டார்கள். நீங்களோ நாம் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் செய்தோம் என்பதைக் கூடப் பிரசாரத்தில் விவரமாய்த் தெரிவிக்கவே இல்லை. நீங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம்!"
அதற்கு காமராஜர் சொன்ன பதில்,
"அட, போய்யா! பெத்த தாய்க்குச் சேலை வாங்கிக் குடுக்கிற மகன், ‘எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்குச் சேலை வாங்கிக்க குடுத்தேன்னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத்தானேய்யா நாம செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?"
No comments:
Post a Comment