நிலாவுக்கு அமெரிக்கா உண்மையில் சென்றதா?!' - ஜூலை...20.. அமெரிக்கா நிலவில் காலடி எடுத்து வைத்த நாள்.
`ஆம். நாடுகளை பிடித்துக்கொண்டிருந்த அமெரிக்கா தற்போது கிரகத்தைப் பிடித்திருக்கிறது. செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் வழியில் தங்குவதற்கான ஏற்பாடு நிலவில் இருக்கும். அதற்காக மீண்டும் மனிதன் 2024-க்குள் நிலவுக்குச் செல்வான் என அமெரிக்கா அறிவித்திருக்கிறது.’
1969-ம் ஆண்டு, ஜூலை மாதம் 20-ம் தேதி இரவு 11:56 மணி. முக்கியமான ஒரு வாக்கியம் உலக வரலாற்றில் பதிவானது. ‘மனிதனைப் பொறுத்தவரை இது ஒரு காலடிதான். ஆனால், மனிதகுலத்தைப் பொறுத்தவரை இது மிகப்பெரும் பாய்ச்சல்’ என்ற வாக்கியம். அந்த வாக்கியத்தைச் சொன்னவரின் பெயர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங். உலகின் முதல் மனிதன் நிலவில் காலடி வைத்தான். புதிய வரலாறு ஒன்று தொடங்கப்பட்டது.
நிலவின் பரப்பில் மனிதர்கள் குதித்துக்கொண்டு தங்களின் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகள் மனித அறிவு மற்றும் ஆற்றலின் அடையாளங்களாக மாறின. மனித மனங்கள் பாதுகாக்கும் சாதனைக் கணங்கள் பிறந்தன.
முறையாக ஆர்ம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் நிலவுக்குச் சென்று திரும்பியதற்காகக் கொண்டாடப்பட்டுவருகின்றனர். அந்த மூவருக்கும் இணையாக இன்னொரு நபரும் இன்றுவரை பேசப்பட்டுவருகிறார். அவர் பெயர் பில் கேய்சிங். அவருக்கும் நிலவுப் பயணத்துக்கும் நேரடித் தொடர்பு ஒன்றுமில்லை. ஆனாலும் அவர் பேசப்படுகிறார். காரணம் என்ன தெரியுமா? 1976-ம் ஆண்டு பில் கேய்சிங் எழுதிய ஒரு புத்தகம். அந்தப் புத்தகத்தின் பெயர், `We never went to the Moon: America’s Thirty Billion Dollar Swindle.’ `நாம் நிலவுக்குச் செல்லவேயில்லை: அமெரிக்காவின் மூவாயிரம் கோடி டாலர் மோசடி’ என நூலின் பெயரைத் தமிழில் மொழிபெயர்க்கலாம்.
ஆம். பில் கேய்சிங்கைப் பொறுத்தவரை நிலவுக்கு அமெரிக்கா செல்லவே இல்லை. நிலவுக்குச் சென்றதாக சொல்லப்படும் விஷயங்கள், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாமுமே நாடகம். பெரும் மக்கள் கூட்டம் பில் கேய்சிங்கின் நூலால் அதிர்ச்சி அடைந்தது.
தன் தரப்பை விளக்கவென சில முக்கியமான விஷயங்களை முன்வைக்கிறார் பில் கேய்சிங். நிலாவுக்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பம் நாசாவிடம் இல்லை என்கிறார். நிலவில் எடுத்த புகைப்படங்களில் நட்சத்திரங்கள் இல்லை என்கிறார். பல அறிவியல்பூர்வமான சிக்கல்களைப் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன என வாதாடுகிறார். மொத்தத்தில் அந்தக் காணொலி மற்றும் புகைப்படங்கள் யாவும் ஒரு திரைப்பட ஸ்டூடியோவில் வைத்து எடுக்கப்பட்டவை எனச் சாதித்தார்.
அமெரிக்காவில் இருக்கும் மக்களில் 5% பேர் நிலவில் மனிதன் இறங்கவில்லை என்றே எண்ணுகின்றனர். காட்டப்படும் காணொலிகளும் புகைப்படங்களும் பொய்யாக உருவாக்கப்பட்டதென நம்புகின்றனர். 5% பேர் என்பது கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடிப் பேர். அத்தனை பேரின் நம்பிக்கைக்கும் முதற்காரணம் பில் கேய்சிங்.
பில் கேய்சிங் கொஞ்ச காலம் அமெரிக்காவின் விண்வெளித் திட்டத்தில் பணிபுரிந்தார். 1956-ம் ஆண்டிலிருந்து 1963-ம் ஆண்டு வரை ராக்கெட்டைன் என்கிற நிறுவனத்தில் அவர் பணிபுரிந்தார்.
ராக்கெட்களுக்கான இன்ஜின் தயாரிப்பில் உதவுவதே அவரின் வேலை. அங்கிருந்து வெளியேறிய பிறகு 1976-ம் ஆண்டில்தான் பில் கேய்சிங் நூலைப் பதிப்பிக்கிறார். அந்த நூலை பதிப்பிக்கக்கூட எந்த நிறுவனமும் அவருக்குக் கிடைக்கவில்லை. சொந்தமாகவே அந்த நூலைப் பதிப்பித்தார்.
அவருடைய முக்கியமான கேள்விகள் இவைதாம். ஏன் எந்தப் புகைப்படத்திலும் நட்சத்திரங்கள் இல்லை? நிலவில் கலம் தரை இறங்கியபோது எந்தவித சிறுவெடிப்பும் ஏன் நிலப்பரப்பில் இல்லை? நிழல்கள் ஏன் இல்லை? இருந்தாலும் ஏன் வித்தியாசமாக இருக்கின்றன? மிக எளிய கேள்விகள்தான்.
2005-ம் ஆண்டு அவர் இறந்துபோனார். ஆனால் 1994-ம் ஆண்டில் கொடுத்த பேட்டியில்கூட அவர், “நாசா மையம் ஒழுங்காக செயல்படுவதில்லை என்பதற்கும், குறைந்த தரத்தை அது கொண்டிருப்பதற்கும் பல ஆதாரங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. ஆனால் திடீரென 1969-ம் ஆண்டில் மனிதனையே விண்வெளிக்கு அனுப்பிவிடும் சாத்தியம் எப்படி நமக்குக் கிடைத்தது? அதுவும் வெற்றியும் அடைந்தது. இருக்கும் தரவுகளுக்கு எதிராக எல்லாமும் சரியாக நடந்தது எப்படி?” என்றுதான் கேட்டார். இறுதிவரை அவர் துளிக்கூட மாறிவிடவில்லை.
பில் கேய்சிங் சொன்னதில் சில உண்மைகள் இருக்கவே செய்தன. சோவியத் யூனியன்தான் முதலில் அக்டோபர் 1957-ம் ஆண்டில் விண்வெளிக்குக் கலத்தை அனுப்பியது. அடுத்த ஒரே மாதத்தில் லைக்கா என்கிற நாயை ஸ்புட்னிக் 2-ம் கலத்தில் வைத்து விண்வெளிக்கு அனுப்பியது. சோவியத் யூனியன் விண்வெளிக்குச் செல்லும் தொழில்நுட்பத்தைப் பெற்றிருந்த இந்தக் காலகட்டத்தில் நாசா மையம் தொடங்கப்படக்கூட இல்லை.
தொடங்கியதும் அவசர அவசரமாக ஒரு மனிதரை 1961-ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பியது. அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எஃப் கென்னடிகூட ’இந்த பத்து வருடங்களில் மனிதனை நிலவுக்கு அனுப்பி, திரும்பப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்ப்பதை லட்சியமாகக்கொண்டு சாதிக்க வேண்டும்’ என்று கூறினார். இதெல்லாம் சாத்தியம்தானா என்கிற நிலையே அவர் சொல்லும்போது இருந்தது. 60-களின் மத்தியில் அமெரிக்க பட்ஜெட்டில் 4% அளவுக்கு நாசாவுக்கென செலவழிக்கப்பட்டது.
அமெரிக்கா நிலவுக்குச் சென்றதைப் பற்றிய சந்தேகங்களுக்கு தொழில்நுட்ப குறைபாடு முக்கியக் காரணம் என்றாலும், அது மட்டுமன்றி இன்னும் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.
சோவியத் யூனியன் இருந்த வரை உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்திருந்தது. இரண்டு சித்தாந்தங்களும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இரு நாடுகளுக்கும் இடையே பெரும் போட்டி நிலவியது. வரலாறு இந்தப் போட்டியை `பனிப்போர்’ எனக் குறிப்பிடுகிறது. இந்தப் போட்டி இரு நாடுகளின் அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்விலும் இருந்தது. அதில் சந்தேகத்துக்கு இடமின்றி சோவியத் யூனியனே முன்னணி வகித்தது. ஆகவே சோவியத் யூனியனை விஞ்சும் தொழில்நுட்பமும் அறிவியலும் தனக்கு இருப்பதாகக் காட்ட அமெரிக்கா பொய்க்கதை கட்டியிருக்கலாம் என ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
இன்னொன்று. சோவியத் யூனியனின் திறமைக்கு முன்னால் அவமானப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், திறனின்மையால் தனக்கு அளிக்கப்படும் நிதி நிறுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதாலும் நாசா மையம் இத்தகைய பொய்யை கட்டமைத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அடுத்த காரணம் ஒரு போரைப் பற்றியது. அமெரிக்கா வியட்நாம் நாட்டின் மீது அந்தக் காலகட்டத்தில் போர் தொடுத்திருந்தது. வியட்நாமும் ஒரு கம்யூனிச நாடு. ஆனால் அமெரிக்காவுக்கு சம்பந்தேமேயில்லாத போர் அது. அப்போரில் அமெரிக்கா வீசிய குண்டுகளும், அப்பாவி மக்களைக் கொன்ற விதமும் அமெரிக்க மக்களுக்கே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. அமெரிக்க அரசுக்கு எதிராகப் பல போராட்டங்கள் அமெரிக்காவுக்குள்ளேயே வெடித்தன. மக்களிடையே நிலவிய எதிர்ப்புணர்வை திசைதிருப்ப இப்படியொரு பொய் சொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நிலாவுக்கு அமெரிக்கா உண்மையில் சென்றதா?
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சியில் தேக்கம் இருந்தது என்ற வாதத்தில் உண்மைகள் இல்லாமலில்லை. நிலவில் சென்று இறங்கிய கலம் செய்யப் பயன்படுத்தப்ட்ட உலோகம் என்ன தெரியுமா? தகரம்! Tinfoil எனப்படும் வெற்று தகரத்தால்தான் அந்தக் கலம் செய்யப்பட்டது என்ற தகவல் அதற்குள் இருந்த இருவர் எத்தனை பெரிய ஆபத்தின் நெருக்கத்தில் இருந்திருப்பார்கள் என்பதைப் புரியவைக்கும். நிலவுக்குச் சென்று வந்த பயணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் இறங்குவதற்கான திசையை சரியாக கணிப்பது மிகவும் கஷ்டமாக இருந்ததாகச் சொல்கிறார். நிலவின் பரப்பில் நடந்தது எத்தனை கஷ்டமாக இருந்தது என்கிற கேள்விக்கு ஆர்ம்ஸ்ட்ராங் 1-லிருந்து 10 என்கிற அளவில் 13 அளவு கொடுக்கிறார். அளந்திட முடியாத அளவுக்குக் கஷ்டமாக அது இருந்திருக்கிறது.
நிலவுக்கு மனிதன் சென்று வந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500 பேர் விண்வெளிக்குச் சென்றிருக்கின்றனர். கிட்டத்தட்ட 438 நாள்கள் விண்வெளியில் செலவழிக்கப்பட்டிருக்கின்றன. சோவியத் யூனியனின் விண்வெளி நிலையம் தொடங்கி, அமெரிக்காவின் விண்வெளி மையமும் இயங்கியிருக்கிறது. பல முறை விண்கலங்கள் விண்வெளி நிலையங்களுக்குச் சென்று வந்திருக்கின்றன. 2000-ம் ஆண்டு தொடங்கி 2011-ம் ஆண்டு வரை கட்டப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையமும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment