தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களைப் பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்வாரா என்ற பரபரப்பு இன்றும் காணப்படுகிறது. இதில் சட்டம் சொல்வது என்ன?
கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடிய எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரகாண்ட் ஆணையைப் படித்துப் பார்த்தால் பேரவைத் தலைவருக்கு சில அதிகாரங்கள் உள்ளதாகவே தோன்றுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 2016 காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது முதல்வருக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அவர்களைத் தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர். விஷயம் சுப்ரீம் கோர்ட் போனது. அப்போது இரண்டு விஷ்யங்களை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
1.ஒருவர் ஒரு கட்சியிலிருந்து தானாகவே விலகினால் தகுதியிழப்பு செய்யலாம்.
2.தானாகவே கட்சி நிலைப்பாட்டிலிருந்து மாறினாலும் தகுதி நீக்கம் செய்யலாம்.
இந்த இடத்தில் கட்சி என்பது சட்டமன்றக் கட்சி.
இதைத் தமிழ்நாட்டு உதாரணத்தோடு பொருத்திப் பார்த்தால் இங்கு சட்டமன்றக் கட்சி என்பது அதிமுக சட்டமன்றக் கட்சி. கட்சி நிலைப்பாடு என்பது - 122 எம்.எல்.ஏக்கள் சேர்ந்து எடப்பாடியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தது. அவர் மீது நம்பிக்கை இல்லைஎன்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஈக்கள் கவர்னரிடம் கடிதம் கொடுத்ததின் மூலம் அவர்கள் கட்சி நிலைப்பாட்டிலிருந்து மாறியதாகக் கருதி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யலாம்.
ஆனால் -
இதே போன்ற கர்நாடகா வழக்கொன்றில் (எடியூரப்பா வழக்கு) சுப்ரீம் கோர்ட் "வெறும் அதிருப்தி தெரிவிப்பது மட்டுமே கட்சித் தாவல் கிடையாது!" என்று கூறியுள்ளது.
திமுக தரப்பு தொடுத்த வழக்கு சட்டமன்ற உரிமைக் குழு தொடர்புடையது. உரிமைக்குழுவில் ஏதோ ஒருவகையான சஸ்பென்ஷன் கொடுத்து அதைச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றிவிடுவார்கள் என்று அது கோர்ட்டில் வாதங்களை வைத்தது. இடைக்காலத் தடை விதித்து செபடம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.
ஆக, கவர்னர் விரும்பினாலும் சட்டமன்றத்தைக் கூட்டும்படி செப் 20 வரை உத்தரவிடமுடியாது. ஆனால் தினகரன் தரப்பைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்குத் தடையில்லை. அப்படித் தகுதி நீக்கம் செய்தாலும் சட்டமன்றத்தை உடனே கூட்டி அரசு மீது நம்பிக்கைத் தீர்மானத்தை நிறைவேற்றமுடியாதுசபாநாயகர் உத்தரவை எதிர்த்து தினகரன் தரப்பினர் நீதிமன்றம் சென்று தடையாணை வாங்க நேரம் உள்ளது. எனவே எடப்பாடி தரப்பு தீவிர ஆலோசனையில் உள்ளது.
சமீபத்தில் நடந்த பொதுக்குழு தீர்மானம் எண் ஒன்றில் " ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் முன்பு பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்" என்ற எம்.ஜி.ஆர். படப்பாடலை மேற்கோள் காட்டி இருந்தார்கள். ஏதோ ஒருவகையிலான உறவை "எப்படியோ" வரவழைக்க அரசுத் தரப்பு முன்முயற்சி எடுக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆக, பெரிய சட்டப் போராட்டத்தை நோக்கிப் போகிறது தமிழக அரசியல். இதில் அரசு தன் நேரத்தையும் கவனத்தையும் முழுமையாகச் செலுத்துவதால் மக்கள் பணிகள் ஸ்தம்பித்துக் கிடக்கின்றன.
No comments:
Post a Comment