1.அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா? மழை பெய்தாலோ, நல்ல வெயில் அடித்தாலோ குடை வேண்டும். அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். தன் கீழே பிரதிஷ்டை செய்யப்படும் பிள்ளையாரையும், நாகராஜாவை யும் அவை குடைபிடித்து பாதுகாப்பதாக ஐதீகம். இயற்கையும் இறைவனை வணங்கு கிறது என்பது ஒரு ரகசியம்.
பனிக்காலம் இலையுதிர் காலம். அப்போது, இந்த மரங்கள் இலையை உதிர்த்து விட்டு கட்டைகளுடன் நிற்கும். அதாவது, குடையை மடக்கி விடும் எனலாம். அப்போது, சூரியன் தன் கதிர்களை இந்த இடைவெளி வழியே பாய்ச்சி, விநாயகரையும், நாகரையும் வழிபடுவான். அதுமட்டுமல்ல, வெயில், மழை காலத்தில் மரத்துக்கு கீழே மனிதர்கள் ஒதுங்குவார்கள். பனிக்காலத்தில் இளவெயில் பட்டால் தான் உடலுக்கு உஷ்ணம் கிடைக்கும். சீதோஷ்ண நிலையால் அவர்களைக் கஷ்டப்படுத்தி விடக்கூடாது என்ற கருணை யுடன் தெய்வங்கள் மரத்தடிகளை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டு விட்டனர் என்பது இன்னொரு ரகசியம். மரத்தடியில் ஒதுங்கும் சாக்கிலாவது, அங்கிருக்கும் இறைவனை ஒருதடவையாவது மனிதன் வணங்கிவிட மாட்டானா என்ற மகான்களின் ஆதங்கம், மரத்தடி தெய்வ பிரதிஷ்டையின் மற்றொரு ரகசியம்.
2.சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியிவன் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக்கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவாத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் (இறைவன்) பார்த்த வண்ணம் உள்ளது.
ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். மீறிச் செல்பவர்கள் ஏதோ கோயிலுக்குள் போய் வந்ததாக கணக்கில் கொள்ளப்படுமே தவிர, இறைவனின் அருள் அவர்களுக்கு கிட்டாது. அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment