Monday, February 11, 2019

இல்லாத சோகத்தை இருப்பதாக எதிராளி சொல்லிச் சொல்லி பலவீனப்படுத்த முடியும்.

ஒரு ஊரில் ஒரு முரட்டு பயில்வான் இருந்தானாம். அவனை யாரும் நேருக்கு நேர் எதிர்க்க முடியவில்லை. எதிர்த்தால் அடிதான். உதைதான்.
ஊர் மக்கள் கூடி பயில்வானுக்குத் தெரியாமல் ஒரு சூழ்ச்சி செய்தார்கள்.
அதன்படி, மறுநாள் ஒருசிலர் பயில்வானைப் பார்த்தபோது, “என்ன உடம்பு முடியலயா?” என்று கேட்டார்கள்.
அடுத்து சிலர், “உடம்பு இளைச்ச மாதிரி தெரியுதே” என்றார்கள்.
சிலநாட்கள் கழித்து சிலர், “உனக்கு ஏதோ பெரிய நோய் இருக்கும்போல” என்று சொன்னார்கள்.
இன்னும் சிலர் சிலநாட்கள் கழித்து, “இப்படியே போனால் நீ சீக்கிரமே செத்துவிடுவாய்” என்றார்கள்.
இப்படி இப்படியே பயில்வானை உண்மையிலேயே நோயாளியாக்கி, உடல் இளைக்கவைத்து, சாகடித்தே விட்டார்கள்.
கைரேகை பார்ப்பவர்கள், கிளி ஜோசியம் பார்ப்பவர்கள் ஒரு உளவியலைக் கையாள்வார்கள். அதாவது…
தங்களிடம் ஜோசியம் பார்க்க வருகிறவர்களிடம், “நீங்க எல்லார்கிட்டேயும் உண்மையா இருப்பீங்க. ஆனா உங்கள் சுற்றம் உங்களைப் பயன்படுத்திக் கொண்டு உங்களைக் கண்டுகொள்வதே இல்லை. உங்கள் தியாக மனப்பான்மையை உங்கள் குடும்பத்தார்கூட புரிந்து கொள்வதில்லை. யாருக்காவது ஒண்ணுன்னா நீங்கள் ஓடிப்போய் நிற்பீர்கள். ஆனால் உங்களுக்கு ஒண்ணுன்னா யாருமே வருவதில்லை…” என்றெல்லாம் கதை அவிழ்த்து விடுவார்கள்.
ஜோசியம் கேட்க வருவர்களும் (குறிப்பாக பெண்கள்) ‘ஆமா…இவர் சொல்வதெல்லாம் சரிதானே’ என்று நினைப்பார்கள். சுயநலவாதிகளும் தங்களை தியாகி என்றுதான் நினைத்துக் கொள்வார்கள் என்பது வேறு விஷயம். ‘என் மனதை அப்படியே படம் பிடித்ததுபோல இந்த ஜோசியர் சொல்கிறாரே’ என்று நினைப்பார்கள்.
தீவிர இலக்கியம் எழுதுபவர்கள், அதுபோல முகநூலில் பெண்களைக் கவர வேண்டும் என்று பதிவிடுபவர்கள் என்ன செய்கிறார்கள்?
பெண்கள் மனதில் பெரிய சோகங்களைச் சுமந்து வெளியே சிரிப்பதாக எழுதுகிறார்கள். பணக்காரப் பெண்களும் தனியே பால்கனியில் ஒரு நாற்காலியைப் போட்டு, நாடியைத் தாங்கி, சோகமாக எதையோ பறிகொடுத்தவர்களாக இருப்பது போல எழுதுகிறார்கள்.
அதைப் படிக்கின்ற பெரும்பாலான பெண்களும், ‘ஆஹா.. என் மனதைப் படித்து எழுதியிருக்கிறார் எழுத்தாளர்’ என்று நினைத்துக் கொள்வார்கள்.
இந்த சோக மனநிலை எல்லாம் மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றே நினைக்கிறேன். மேற்கத்திய நாடுகளில்தான் அதிகமாக பெண்கள் தனித்துவிடப்பட்டதாய் உணர்கிறார்கள். கணவனைத் தவிர்த்து, ஆறுதல் சொல்வதாய்க் காட்டிக் கொள்ளும் வேறு ஆண்களைத் தேடிச் செல்கிறார்கள்.
நம் நாட்டில் 50 வருடங்கள், 60 வருடங்கள் இனிமையாக குடும்பம் நடத்திய தம்பதியினர் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தினமும் ‘ஐ லவ்யூ’ சொன்னது இல்லை. மனைவியின் முகவாயைத் தாங்கி ஆறுதல் நெற்றியில் முத்தமிட்டு, அணைத்துக் கொண்டவர்களும் இல்லை. ஆனாலும் ஒருவருக்கொருவர் மனதைப் புரிந்து கொண்டிருக்கவே செய்தார்கள்.
ஏதேனும் துக்கத்தில் இருக்கும்போது, என் கன்னங்களைத் தாங்கி ‘நானிருக்கிறேன்’ என்று ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இம்மாதிரி எழுத்துக்கள் தூண்டிவிடுகின்றன. ஒருவேளை கணவன் அப்படி செய்யாதவனாக இருப்பின், கணவனுக்குத் தன் மீது காதலே இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. இந்த எண்ணம் அதிகமாக பெண்களுக்கு வருகிறது. பெண்களை வீழ்த்தவேண்டும் என்றும் நினைக்கும் பல ஆண்கள், பெண்களின் இந்த எண்ணத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வலையில் வீழ்த்துகிறார்கள்.
அந்த அளவுக்கு பெண்கள் ஒன்றும் தெரியாதவர்களா? என்றெல்லாம் எதிர்க்கேள்வி வரலாம். ஆனாலும் உளவியல் ரீதியாக பெண்கள் ஆண்களிடமிருந்து மாறுபட்டவர்கள். மனவலிமை கொண்டவர்களாக இருந்தாலும், மேலே சொன்ன பயில்வானைப் போல, இல்லாத சோகத்தை இருப்பதாக எதிராளி சொல்லிச் சொல்லி பலவீனப்படுத்த முடியும்.
நகைச்சுவை உணர்வு கொண்ட, எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் குணம் பெண்களிடம் இந்த வித்தை எல்லாம் பலிக்காது. அவர்கள் அநேகமாக பிரச்சனைகளில் சிக்கவே மாட்டார்கள். அவர்கள் உணர்வைவிட அறிவுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறவர்கள். உணர்வின் எல்லை எது? அறிவின் எல்லை எது என்று புரிந்தவர்கள் அவர்கள்.
மந்திரங்கள் எல்லாம் தைரியம், பலம், புத்தி என்று நேர்மறையான வார்த்தைகளைச் சொல்லுகின்றன. ஆனால், சமீபகாலமாக வலி, துரோகம், தனித்திருக்கும் உணர்வு என்றெல்லாம் தொடர்ந்து பெண்களைப் பலவீனப்படுத்தும் எழுத்துக்களே அதிகம் கண்ணில் படுகின்றன.
மந்திரங்கள் என்றல்ல, எப்போதும் தங்களை தைரியமூட்டும், வலிமையாக்கும் எழுத்துக்களைத் தேடி பெண்கள் படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதுவே பல உளவியல் பிரச்சனைகளைத் தன்னைத் தானே தீர்த்துக் கொள்ளும் அறிவைத் தரும்.
புத்திசாலிப்பெண்களுக்கு என்னைப் போன்ற சாதாரண ஒருவன் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...