''செயல்படுத்திய எல்லா திட்டங்களுமே தோற்றுப் போய்விட்ட நிலையில், மக்களை ஏமாற்றும் வகையில், தேர்தல் அறிக்கை வெளியிடுவதை போல, மத்திய அரசு பட்ஜெட்டை தயாரித்து வெளியிட்டுள்ளது,'' என, அ.தி.மு.க., மூத்த, எம்.பி., தம்பிதுரை குற்றஞ்சாட்டினார்.
லோக்சபாவில், பட்ஜெட் விவாதத்தில், நேற்று அவர் பேசியதாவது: கடந்த தேர்தலில் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால், மிக மோசமான தோல்வியை மத்திய அரசு அடைந்துவிட்டது. பண மதிப்பிழப்பால், மக்களின் வாழ்வாதாரமே பறிபோய் கிடக்கிறது. ஜி.எஸ்.டி., விதிப்பால் பாதிக்கப்பட்டது, உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தமிழகம் தான். 'துாய்மை இந்தியா' திட்டமும் தோல்வியே.
செயல்படுத்திய அனைத்து திட்டங்களுமே தோற்றுப்போனது என்றால், அது, இந்த அரசில் தான். மாநில அரசின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக காவு வாங்கும், பா.ஜ., தமிழகத்தை பெரிதும் வஞ்சித்துவிட்டது. இதே தவறை செய்து வந்த காங்கிரஸ், கடைசியில், மாநில கட்சிகளின் தயவை நாட வேண்டிய நிலைக்கு தற்போது வந்துவிட்டது. இதே கதி தான், பா.ஜ.,வுக்கும் நேரிடும்.
விவசாயிகளை ஏமாற்றும் வகையில், பட்ஜெட் தயாரித்துள்ளனர். அவர்களது நிலை கருதி, குறைந்தபட்சம், 12 ஆயிரம் ரூபாயாவது தராமல், 6,000 ரூபாயை தருவது சரியல்ல. ஒரு தேர்தல் அறிக்கையை, மத்திய அரசின் பட்ஜெட் எனக்கூறி, தாக்கல் செய்துள்ளனர். இத்தனை வாக்குறுதிகளை, கடந்த ஆண்டுகளில், ஏன் தரவில்லை?
'தானே' புயலில் துவங்கி, 'கஜா' புயல் வரை, தமிழகம், இயற்கை பேரிடர்களை சந்தித்தபடி இருந்தாலும், எதற்குமே மத்திய அரசு நிவாரண நிதி தரவில்லை. நிவாரண நிதியாக, இதுவரையில், ஒரு பைசா கூட தரவில்லை. இவ்வாறு தம்பிதுரை பேசினார்.
No comments:
Post a Comment