வங்கிகளில், பல கோடி ரூபாய் கடன் வாங்கி, அவற்றை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத, 30 மோசடி பேர்வழிகளின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 'இவர்கள் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ள கடன் தொகை, கடந்த ஏப்ரல் மாதம் வரை, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தொழில் மேம்பாட்டுக்கு எனக் கூறி, பல தொழிலதிபர்கள், வங்கிகளில், பல கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இவர்களில் பலர், கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். மோசடி செய்தோர் பற்றிய விபரம், பல ஆண்டுகளுக்கு முன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்தது.
'விபரங்களை வெளியிட்டால், அது நாட்டின் பொருளாதார நலனுக்கு எதிராக அமையும்; வங்கிகளுடனான எங்களின் உறவு பாதிக்கும்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாதோர் பட்டியலை வெளியிட வேண்டும்' என, ரிசர்வ் வங்கிக்கு, 2015ல் உத்தரவிட்டது.
இந்நிலையில், 'தி ஒயர்' என்ற இணைய இதழ் சார்பில், ரிசர்வ் வங்கியிடம், கடனை திருப்பிச் செலுத்தாதோர் பற்றிய விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. இதை அடுத்து, கடனை திருப்பிச் செலுத்தாத, 30 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலை, ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், 'இந்த நிறுவனங்கள், வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ள தொகை, கடந்த ஏப்ரல் மாதம் வரை, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த, 30 நிறுவனங்களில், விஜய் மல்லையாவின், 'கிங் பிஷர்' நிறுவனம், வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி உள்ளிட்டோரின் நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. வங்கிகளில் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாதவர்களின் விபரங்களை, 'டிரான்ஸ்யூனியன் சிபில்' என்ற நிறுவனம் சேகரிக்கிறது. இந்நிறுவன கணக்கின் படி, கடந்த ஆண்டு டிசம்பர் வரையில், 11 ஆயிரம் நிறுவனங்கள், வங்கிகளிடம் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாத தொகை, 1.61 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் என, தெரியவந்துள்ளது.
ஆனால், கடன், எந்த ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்படவில்லை. நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல வழக்குகளை பதிவு செய்து, விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment