Wednesday, November 6, 2019

மஹா., குழப்பத்திற்கு முடிவு ; சரத் பவார் வெளிப்படை!

  ''மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை; எதிர்க்கட்சியாகச் செயல்படவே மக்கள் எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர். அதனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம். பா.ஜ. - சிவசேனா கூட்டணிக்கு தான் மக்கள் ஓட்டளித்துள்ளனர். அதனால் அவர்கள்தான் ஆட்சியமைக்க வேண்டும்'' என தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சரத் பவார் கூறினார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ. - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் சமீபத்தில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜ. -- சிவசேனா கூட்டணி 161 இடங்களிலும்; தேசியவாத காங். - காங். கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகள் வெற்றி பெற்றன. பா.ஜ. - சிவசேனா கூட்டணிக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைத்த போதிலும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பதவி உட்பட அனைத்திலும் சம பங்கு அளிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி வருகிறது. முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரும்; அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு பா.ஜ.வைச் சேர்ந்தவரும் முதல்வராக இருக்க வேண்டும் என சிவசேனா கூறுகிறது. இதற்கு பா.ஜ. மறுத்து வருகிறது. இதனால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா சட்டசபையின் பதவிக்காலம் நாளையுடன் முடிகிறது. அதற்குள் மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைந்தாக வேண்டும். இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டது.'பா.ஜ. கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேற வேண்டும்; மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் விலக வேண்டும்;

அப்படிச் செய்தால் தேசியவாத காங். சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டு தரும்; காங். வெளியிலிருந்து ஆதரவு தரும்' என தேசியவாத காங். கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவூத், தேசியவாத காங். தலைவர் சரத் பவாரை மும்பையில் நேற்று சந்தித்தார்.

இதனால் சிவசேனா -தேசியவாத காங். கூட்டணி ஆட்சி பற்றிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சஞ்சய் ரவூத்தை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய சரத் பவார் 'மஹாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தராது' என கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பா.ஜ.வும் சிவசேனாவும் 25 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணியில் உள்ளன.

ஆட்சி அமைப்பதில் இப்போது இழுபறி ஏற்பட்டாலும் பின் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைப்பர் என நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால் சிவசேனாவுக்கு தேசியவாத காங். ஆதரவு தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் தேசியவாத காங். - காங்கிரஸ் கூட்டணிக்கு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படத்தான் மக்கள் ஓட்டளித்துள்ளனர்.

அதனால் எங்கள் கட்சி எதிர்க்கட்சியாகவே செயல்படும். காங். நிலை பற்றி எனக்குத் தெரியாது. பா.ஜ. சிவசேனா கூட்டணிக்குதான் ஆட்சி அமைக்கும் பொறுப்பை மக்கள் வழங்கியுள்ளனர். அதனால் அவர்கள்தான் ஆட்சியமைக்க வேண்டும். மஹாராஷ்டிரா முதல்வராக நான்கு முறை இருந்துள்ளேன். மீண்டும் முதல்வராக நான் ஆசைப்படவில்லை. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் 18ம் தேதி துவங்குகிறது. அதில் எந்த பிரச்னைகளை எழுப்புவது என்பது பற்றித் தான் சஞ்சய் ரவூத் என்னிடம் ஆலோசித்தார். இவ்வாறு சரத் பவார் கூறினார்.


'அதிகாரத்தைப் பகிர பா.ஜ., ஒப்புதல்'

''மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவி உட்பட ஆட்சி அதிகாரத்தை சமமாக பகிர்ந்து கொள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பேயே சிவசேனாவும் பா.ஜ.வும் சம்மதித்து தான் கூட்டணி அமைத்தன'' என சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவூத் கூறினார். மும்பையில் அவர் கூறியதாவது: தேசியவாத காங். தலைவர் சரத் பவாரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். ஆட்சி அமைப்பது பற்றி பேசவில்லை. தேர்தலுக்கு முன் முதல்வர் பதவி உட்பட ஆட்சி அதிகாரத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்வது பற்றி ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின் தான் பா.ஜ.வும் சிவசேனாவும் கூட்டணி அமைத்தன.

விவசாயிகளும் நடுத்தர மக்களும் சிவசேனாவைச் சேர்ந்தவர் முதல்வராக வர வேண்டும் என விரும்புகின்றனர். தேர்தலுக்குப் பின் சிவசேனா எந்த புதிய கோரிக்கையையும் வைக்கவில்லை. கூட்டணிக்கு முன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தான் கூறுகிறது. ஆட்சி அமைப்பது பற்றி பா.ஜ.விடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இனி அமைச்சரவை பங்கீடு குறித்து பா.ஜ.வுடன் பேசி எந்த பயனும் இல்லை. அதனால் பேச்சுக்கு எங்களுடைய கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அதற்கு சிவசேனா பொறுப்பல்ல. அதே நேரம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அது தேர்தலில் ஓட்டளித்த வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு அநீதி. இவ்வாறு அவர் கூறினார்.


'கதவுகள் திறந்தே இருக்கின்றன'

'மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன' என பா.ஜ. கூறியுள்ளது. மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம் பற்றி முதல்வர் தேவேந்திர பட்னவிசுடன் பா.ஜ. மூத்த தலைவர்கள் மும்பையில் நேற்று ஆலோசனை நடத்தினர். பின் நிருபர்களிடம் மஹாராஷ்டிரா பா.ஜ. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது: ஆட்சியமைக்க பா.ஜ., சிவசேனா கூட்டணிக்கு தான் மக்கள் ஓட்டளித்துள்ளனர்.

அதை மதித்து ஆட்சியமைக்க வேண்டும். சிவசேனாவிடமிருந்து பா.ஜ.வுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை. கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜ. தயாராக உள்ளது. சிவசேனாவுக்கு பா.ஜ.வின் கதவுகள் திறந்தே உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். பா.ஜ. மூத்த தலைவர் சுதிர் முன்கத்திவார் கூறுகையில் ''சிவசேனாவின் முடிவுக்காக காத்திருக்கிறோம். எப்படியும் நாங்கள் ஆட்சி அமைப்போம்; இதில் சந்தேகமே இல்லை. அதற்கான தகவல் விரைவில் வெளியாகும்' என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...