Sunday, November 17, 2019

வெற்றி!இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே...

அண்டை நாடான இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா, 52 சதவீத ஓட்டுகள் பெற்று, அபார வெற்றி பெற்றார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், சஜித் பிரேமதாசா அதிக ஓட்டுகள் பெற்றபோதும், சிங்களர்களின் பலத்த ஆதரவுடன், ஐந்து ஆண்டுகளுக்கு பின், ராஜபக்சே குடும்பம், மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளது.

இலங்கையின் தற்போதைய அதிபரான சிறிசேனவின் பதவிக் காலம் முடிவடைவதை ஒட்டி, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது.

இலங்கை அதிபர் தேர்தல் சனிக்கிழமை நடந்தது. இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்சே, ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா போட்டியிட்டனர். ஞாயிறன்று ஓட்டு எண்ணப்பட்டது. கோத்தபய ராஜபக்சே 52 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். பிரேமதாசா 42 சதவீத ஓட்டுகளுடன் தோற்றார். கோத்தபய ராஜபக்சேவை அதிபராக தேர்தல் கமிஷன் முறைப்படி அறிவித்தது.




35 பேர்
இதில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா, 70, ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் மறைந்த ரணசிங்கே பிரேமதாசாவின் மகன், சஜித் பிரேமதாசா, 52, ஆகியோர் உட்பட, 35 பேர் போட்டியிட்டனர். இலங்கை தேர்தல் வரலாற்றில், இந்த முறை தான் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மேலும், 1982க்கு பின், பதவியில் உள்ள அதிபர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் போட்டியிடாத தேர்தலும் இது தான். கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது, இலங்கையில், நட்சத்திர ஓட்டல்கள், தேவாலயங்களில் குண்டுகள் வெடித்து, 269 பேர் பலியாகினர். குண்டு வெடிப்புக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனால், இலங்கையில் நிலையற்ற அரசியல் தன்மை நிலவியது.
இந்த பரபரப்பான சூழலில் தான், அதிபர் தேர்தல் நடந்தது. தேர்தலில், 80 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தேர்தல் முடிந்ததுமே, தபால் ஓட்டுகளை எண்ணும் பணி முதலில் துவங்கியது. இதில், கோத்தபயா முன்னிலை வகித்தார். இதற்கு பின், தேர்தலில் பதிவான ஓட்டுச் சீட்டுகள் எண்ணப்பட்டன. சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், கோத்தபயா, துவக்கத்திலிருந்தே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதனால், அவர் வெற்றி முகத்தில் இருந்தார். ஆனால், தமிழர்கள் அதிகம் வசிக்கும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், சஜித் பிரேமதாசாவுக்கு, மிக அதிக ஓட்டுகள் பதிவாகியிருந்தன.

90 சதவீதம்
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அவருக்கு, 80 சதவீத ஓட்டுகள் விழுந்திருந்தன. கோத்தபயாவுக்கு, 5 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகளே விழுந்துஇருந்தன. இதேபோல், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு பகுதியான முட்டூரிலும், சஜித் பிரேமதாசாவுக்கே, 90 சதவீத ஓட்டுகள் பதிவாகிஇருந்தன. இதனால், சஜித் பிரேமதாசா முன்னிலைக்கு வந்தார். ஆனால், சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் ஓட்டுகள் எண்ண எண்ண, கோத்தபயா மீண்டும் முன்னிலைக்கு வந்தார்.



இறுதியில், 52.25 சதவீத ஓட்டுகள் பெற்று, கோத்தபயா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர், 69 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றிருந்தார். ஆதிக்கம்சஜித் பிரேமதாசா, 41.99 சதவீத ஓட்டுகள் பெற்றார்.அவருக்கு,55 லட்சத்து, 64 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. இலங்கையில் மொத்தம் உள்ள, 22 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் கோத்தபயாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துஇருந்தன.

இதையடுத்து, இலங்கையின் புதிய அதிபராக, கோத்தபயா பதவியேற்கஉள்ளார். இலங்கை அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள், ராஜபக்சே குடும்பத்தினர். கடந்த, 2015ல் நடந்த அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சேவை தோற்கடித்ததன் மூலம், அவரது குடும்ப ஆதிக்கத்துக்கு, தற்போதைய அதிபர் சிறிசேன முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது கோத்தபயா வெற்றி பெற்றுள்ளதன் மூலம், ராஜபக்சே குடும்பத்தின் கைகளுக்கு அதிகாரம் வந்துள்ளது. இது, எதிர்க்கட்சியினரிடமும், சிறுபான்மையினரிடமும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அதிபராக கோத்தபயா பதவியேற்றதும், தன் சகோதரர் மகிந்த ராஜபக்சேவை, பிரதமராக நியமிக்கும் முயற்சியில் இறங்குவார் என, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, தான் வகித்து வந்த, ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியை, சஜித் பிரேமதாசா ராஜினாமா செய்தார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன். இலங்கை அதிபராக பொறுப்பேற்கவுள்ள கோத்தபயாவுக்கு வாழ்த்துகள்' என, தெரிவித்துள்ளார்.

மோடி வாழ்த்து


இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயா ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயாவுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு, இலங்கை. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு, மேலும் பலமடைய வேண்டும் என்பதே என் விருப்பம்' என, தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு, கோத்தபயா ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.


சீனாவுக்கு நெருக்கமானவராகோத்தபயா ராஜபக்சே?


இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபயா ராஜபக்சே, அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது, ஆட்சியிலும், அதிகாரத்திலும் கொடி கட்டிப் பறந்தவர். கடந்த, 2005 - 2014ல், இலங்கை ராணுவச் செயலராக பதவி வகித்தார். இலங்கையில், 30 ஆண்டுகளாக நடந்து வந்த விடுதலைப் புலிகளுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைத்து, இறுதிப் போரில் ராணுவம் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர், கோத்தபயா.

ஆனாலும், போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக, இவர் மீது குற்றச்சாட்டும் உள்ளது. இலங்கையில் சிறுபான்மையினராக வசிக்கும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது, பாரபட்சமாக செயல்பட்டதாகவும் கருத்து நிலவுகிறது. மகிந்த அதிபராக இருந்தபோது, அரசை விமர்சித்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மர்மமான முறையில் கடத்தி கொலை செய்யப்பட்டதாக, மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டின. இதில், கோத்தபயாவுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. அரசியலுக்கு வருவதற்கு முன், இலங்கை ராணுவத்திலும் உயர் அதிகாரியாக பணியாற்றினார்.

சென்னை பல்கலையில், பாதுகாப்பு தொடர்பான கல்வியில், முதுநிலை பட்டம் பெற்றவர். ராஜபக்சே குடும்பத்தினர் குறித்து, அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:ராஜபக்சே குடும்பத்தினர், சீனாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற கருத்து நிலவுகிறது. மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது, இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததற்கு, அவர் உதவியதாக செய்தி வெளியானது.

இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகம், சீனாவின் கட்டுப்பாட்டில் வருவதற்கும், ராஜபக்சே குடும்பம் முக்கிய பங்கு வகித்தது. இந்திய பெருங்கடலில் சீன கப்பல்கள் நடமாட்டத்துக்கு இடம் அளித்ததாக, இந்தியாவின் அதிருப்திக்கும், அந்த குடும்பத்தினர் ஆளாகினர். தற்போது ராஜபக்சே குடும்பத்தினர் மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளதால், சீனாவுடன் நெருக்கத்தை அதிகரிக்க, அவர்கள் முயற்சிப்பர். இதனால், இலங்கை நிகழ்வுகளை, இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இணைந்து பயணிப்போம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த புதிய பயணத்தில், இலங்கை மக்கள் அனைவரும் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது, எப்படி அமைதியாக செயல்பட்டோமோ, அதுபோல் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் தொடர்ந்து செயல்படுவோம்.

கோத்தபயா ராஜபக்சே
இலங்கை அதிபர் தேர்தல் வெற்றி வேட்பாளர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...