Sunday, May 2, 2021

10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உதயமாகிறது தி.மு.க.,

 தமிழகத்தில்,10 ஆண்டுகளுக்கு பின், மீண்டும், தி.மு.க.,வின் உதயசூரியன் உதயமாகிறது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன், ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., ஆட்சி அமைகிறது. தொடர்ந்து, ௧௦ ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, அ.தி.மு.க., பலமிக்க எதிர்க்கட்சியாக, சட்டசபையில் அமர உள்ளது.



தமிழக சட்டசபை பொதுத்தேர்தல், ஏப்., 6ல் நடந்தது. அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., - மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சியும், 234 தொகுதிகளில் களம் இறங்கின.தி.மு.க., கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெறும் என, கருத்து கணிப்புகள் தெரிவித்தன. எனவே, தி.மு.க., தரப்பில், ஆட்சி மாற்றம் உறுதி என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். 'கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, மூன்றாவது முறையாக, 'ஹாட்ரிக்' வெற்றி பெறுவோம்' என, அ.தி.மு.க.,வினர் கூறி வந்தனர்.



ஓட்டு எண்ணிக்கை



இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று ஓட்டு எண்ணிக்கை, மாநிலம் முழுதும், 75 மையங்களில் நடந்தது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்றும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனையில், தொற்று இல்லை என கண்டறியப்பட்டவர்கள், இரண்டு, 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டும், ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை, 8:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.


தபால் ஓட்டுகள்



latest tamil news




முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதுவரை நடந்த தேர்தல்களில், தபால் ஓட்டுகளை எண்ணும் போது, தி.மு.க.,வே முன்னிலை வகிப்பது வழக்கம்; அது, இம்முறையும் தொடர்ந்தது.
இருப்பினும், சில தொகுதிகளில், அ.தி.மு.க.,வும் தபால் ஓட்டுக்களை அதிகம் பெற்றிருந்ததால், அ.தி.மு.க.,வினரிடம் உற்சாகம் பிறந்தது. காலை, 8:30 மணியளவில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை துவங்கியது. தி.மு.க., கூட்டணி கட்சிகளும், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளும், மாறி மாறி முன்னிலை பெற்றன. மற்ற கூட்டணி கட்சிகள், போட்டியில் இல்லாத சூழல் ஏற்பட்டது.


கமல் தோல்வி



மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், கோவை தெற்கு தொகுதியில், தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். வெற்றி பெறுவார் என, பலரும் எதிர்பார்த்த நிலையில், இறுதியில், 1,728 ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனிடம், தோல்வியை தழுவினார். அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், கோவில்பட்டி தொகுதியில் இரண்டாமிடத்தில் வந்தார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில், மூன்றாமிடத்தில் நின்றார்.

ஆரம்ப கட்டத்தில், தி.மு.க., கூட்டணிக்கு, அ.தி.மு.க., அணி கடும் நெருக்கடி கொடுத்தது. அ.தி.மு.க., கூட்டணி, 100 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. அதேநேரத்தில், தி.மு.க., கூட்டணி, 130 இடங்களில் முன்னிலை பெற்று, அக்கட்சியினரிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.பல தொகுதிகளில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், இழுபறி நிலை ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல, தி.மு.க., கூட்டணி, கூடுதல் இடங்களில் முன்னிலை பெறத் துவங்கியது.
நள்ளிரவு நிலவரப்படி, தி.மு.க., கூட்டணி, 158 இடங்களிலும், அ.தி.மு.க., கூட்டணி, 76 இடங்களிலும், முன்னிலை பெற்றன.


latest tamil news





தனிப்பெரும் கட்சி



தி.மு.க., கூட்டணியில், தி.மு.க., 125 இடங்களில் முன்னிலை பெற்று, தனிப்பெரும்பான்மை பெற்றது. அக்கட்சியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட, ம.தி.மு.க., நான்கு இடங்களிலும், பிற கட்சிகள், நான்கு இடங்களிலும், முன்னிலை பெற்றன. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், 17 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தலா, இரண்டு தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நான்கு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றன.ஆளும் கூட்டணியில், அ.தி.மு.க., 66 தொகுதிகளிலும், பா.ம.க., ஐந்து தொகுதிகளிலும், பா.ஜ., நான்கு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றன. அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்ட, புரட்சி பாரதம் கட்சி, ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

தமிழகத்தில், 2011 முதல், அ.தி.மு.க., ஆட்சி நீடித்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின், பொதுத் தேர்தலை சந்தித்த அ.தி.மு.க.,வை, பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தி.மு.க., வீழ்த்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க.,வின் உதயசூரியன், தமிழகத்தில் மீண்டும் உதயமாகிறது. அக்கட்சி தலைவர் ஸ்டாலின், அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார்.

தொடர்ந்து, இரண்டு முறை ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., பெரும்பான்மையை இழந்து, 'ஹாட்ரிக்' வெற்றியை நழுவ விட்டுள்ளது. ஆனாலும், 66 தொகுதிகளில் வெற்றி பெற்று, பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளதால், புதிய ஆட்சி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளில், தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது.


தந்தையை மிஞ்சிய தனயன்



latest tamil news




சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள, உதயநிதி ஸ்டாலினுக்கு, தன் தந்தைக்கு கிடைக்காத வாய்ப்பு கிடைத்து, முதல் தேர்தலிலேயே பெரும் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலில் ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள, தி.மு.க.,வின் முக்கிய வேட்பாளர்களில் முக்கியமானவர்உதயநிதி ஸ்டாலின். இவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகன்.தி.மு.க., வரலாற்றில், இளைஞரணி தலைவராக பணியாற்றிய ஸ்டாலின், 1984ல் முதன் முறையாக சட்டசபை தேர்தலில், சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் கே.ஏ.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். ஸ்டாலின் தன் முதல் தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், தன், 43வது வயதில் முதன்முதலாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று உள்ளார். முதல் முயற்சியிலேயே தந்தையை மிஞ்சி, உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.


latest tamil news



பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஸ்டாலின்



தமிழகத்தில், தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளதால், ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைகிறது. முதல்வராக உள்ள ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்க, நேரம் கேட்டுள்ளார். இம்மாத இறுதியில், இந்த சந்திப்பு நடக்கும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...