தமிழக சட்டசபை தேர்தலில், 'மேஜிக்' காட்டும் வகையில், தனி அணியை உருவாக்கிய தினகரனின் அ.ம.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தவிப்புக்கு ஆளானது. அ.தி.மு.க.,வை மீட்கப் போவதாக கூறிய கட்சி, மீள முடியாத தோல்வியை சந்தித்துள்ளது.
தி.மு.க., - அ.தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. அ.தி.மு.க.,வின் உள்கட்சி பிரச்னையால், புதிதாக உருவான தினகரனின் அ.ம.மு.க., இந்த தேர்தலில், தனி அணியாக களம் கண்டது.கூட்டணிஎஸ்.டி.பி.ஐ., கட்சி, ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மற்றும் சில ஜாதி கட்சிகளுடன் சேர்ந்து, தினகரன்கட்சி தேர்தலில்போட்டியிட்டது.
வெற்றி பெற்று, அ.தி.மு.க.,வை மீட்கப் போவதாக சூளுரைத்து, தினகரன் தேர்தலில் போட்டியிட்டார். 'மணலை கயிறாக்குவோம்' என, மாயாஜாலங்களை சொல்லத் தோன்றும் வகையில், தனியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, மிகப்பெரும் கட்சி போல அ.ம.மு.க.,வை காட்டிக் கொண்டார். அ.தி.மு.க., கூட்டணியில் இடம் கிடைக்காமல் போன, தே.மு.தி.க.,வும், இந்த அணியுடன் சேர்ந்து, 60 இடங்களில் போட்டியிட்டது.
இந்நிலையில், நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான போது, ஒரு இடத்தில் கூட வெற்றியை நெருங்க முடியாமல், அ.ம.மு.க., அணி திணறியது. அதிலும், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், தான் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் கடம்பூர் ராஜுவிடம் தோற்றார்.
தத்தளிப்பு
கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., மஜ்லிஸ் கட்சி போன்றவையும், இரண்டாம் இடத்தை கூட நெருங்க முடியாமல் தத்தளித்துள்ளன. பெரும்பாலான இடங்களில், 'டிபாசிட்' இழந்து, அ.ம.மு.க., அணி தடுமாறியது. அ.தி.மு.க., ஒரு பக்கம் தோற்றாலும், அ.ம.மு.க.,வின் தடுமாற்றம் அக்கட்சியினரை மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.
ஒரே கட்சியாகஒற்றுமையாகச் செயல்பட்டிருந்தால், இந்தநிலை ஏற்பட்டிருக்காது என, இரு கட்சியினரும் பரஸ்பரம் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தே.மு.தி.க., படுதோல்வி!
அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தே.மு.தி.க., அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை தொடர, தே.மு.தி.க., முயற்சித்தது. 13 தொகுதிகள் வரை கொடுக்க, அ.தி.மு.க., முன்வந்தது. ஏற்க மறுத்து, அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 60 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டது. தேர்தல் செலவிற்கு பணம் இல்லாமல், தே.மு.தி.க.,வினர் திண்டாடினர். கட்சி தலைமை கண்டுகொள்ளவே இல்லை. உடல்நலம் சரியில்லாததால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தால், பிரசாரத்தில் பேச முடியாத நிலை ஏற்பட்டது.
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டதால், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும், மற்ற வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்யவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், பிரசாரம் செய்வதை தவிர்த்து விட்டார். விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் மட்டும், பிரசாரம் செய்தார். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும், இக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
'தே.மு.தி.க., இடம் பெற்ற கூட்டணி தான், தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்' என, பிரேமலதா கூறி வந்தார். ஆனால், விருத்தாசலம் தொகுதியில், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். மற்ற தொகுதிகளில், மூன்றாவது இடத்தை கூட, தே.மு.தி.க.,வினரால் பெற முடியவில்லை.
No comments:
Post a Comment