மதுரையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சிவகங்கை ரிங்ரோட்டில் பாண்டி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இது 200 ஆண்டுகளுக்கும் முந்தைய வழிபாட்டு பெருமைக்கு உரிய தலம். 39 சென்ட் இடத்தில் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த இயற்கை அழகில் மதுரையின் காவல் தெய்வமாக ‘பாண்டி முனீஸ்வரர்’ வீற்றிருக்கிறார்
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே பாண்டி முனீசுவரராக குடிகொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு முன்பு மதுரை மாநகரம் இருந்தது என்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலைச் சுற்றிய வயல்வெளி வரப்புகளில் பெரிய, பெரிய செங்கற்களைக் கொண்ட கோட்டைச் சுவர்கள், மதில்கள் இன்றும் உள்ளன. மன்னர் அரண்மனை பகுதியும் இப்பகுதியில் இருந்ததற்கான தொல்லியல் கூற்றுகளும் உண்டு. அதனால் இவரை ‘பழமதுரை பாண்டீஸ்வரர்’ என்று அழைக்கின்றனர்.
காவிரிப் பூம்பட்டினத்தை சேர்ந்த கோவலன், கண்ணகியை மணந்து இன்ப மாக வாழ்ந்தான். இதற்கிடையே ஆடலரசி மாதவி மேல் மோகம் கொண்டு அங்கேயே தங்கினான். இதன் காரணமாக கோவலன், செல்வத்தை எல்லாம் இழந்தான். அப்போது ஒருதடவை மாதவி இந்திர விழாவில் கானல் வரி பாடலை பாடினாள்.
இதன் உட்பொருளை தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை பிரிந்து, கண்ணகியிடம் மீண்டான். அதன் பிறகு கோவலன் வணிகம் செய்யும் பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்கு சென்றான்.
அங்கு கண்ணகியின் சிலம்பை விற்று வர வேண்டி, கோவலன் மதுரை கடைவீதிக்கு சென்றான். அப்போது பாண்டிமாதேவியின் காற்சிலம்பை திருடிய பொற் கொல்லன், கோவ லன் மேல் பொய்ப் பழி சுமத்தினான். அதனை மன்னன் நம்ப, கோவலன் கொலை செய்யப்படுகிறான்.
இந்த நிலையில் கணவன் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் கண்ணகி நேராக அரண்மனைக்கு சென்றாள். மன்னனிடம் நியாயம் கேட்டாள். அப்போது, “கள்வனை கொலை செய்வது கொடுங்கோல் அல்ல, அதுவே அரச நீதி” என்று மன்னன் கூறினான். அதற்கு கண்ணகி “என் கணவர் விற்பதற்காக எடுத்து வந்திருந்த கால்சிலம்பு, மாணிக்க பரல்களை உடையது” என்றாள். அதற்கு அரசன் “என் மனைவி கால்சிலம்பில் முத்து பரல்கள் உள்ளன” என்றான். இதனை தொடர்ந்து கோவலனிடம் கைப்பற்றிய சிலம்பு உடைக்கப்பட்டது. அப்போது அதில் மாணிக்கப்பரல்கள் இருந்தன.
இதனை கண்டு அதிர்ந்த பாண்டிய மன்னன் “பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய நான் அரசன் அல்ல, நானே கள்வன். என் வாழ்நாள் அழியட்டும்” என்றபடி மயங்கி விழுந்து இறந்தான். அதன்பிறகு பாண்டிய மன்னனின் ஆத்மா, சிவபெருமானிடம் சென்றது. அப்போது, “நீதிக்காக உயிரை நீத்த நீ மீண்டும் மானிடப் பிறவி எடுத்து உன் பிறவிக்கடன் தீர்ப்பாய்” என்று சிவபெருமான் ஆசீர்வதித்தார்.
இதனை கேட்ட பாண்டிய நெடுஞ்செழியன், ‘எனக்கு மீண்டும் மானிட பிறவி வேண்டாம். என்னை பூஜித்து மானிடர்கள் வழிபடட்டும். நான் அவர்களை காத்து அருளும் பொருட்டு, எனக்கு தீய சக்திகளை வெல்லும் வரம், தீயவர்களை கொல்லும் வரம், நம்பியவர்களுக்கு அருள்புரியும் வரம் வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு சிவபெருமான், ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஆசி கூறினார். அதன் பிறகு மதுரை மானகிரி கிராமத்தில் இறைவனை நோக்கி தவம் இருந்த பாண்டிய நெடுஞ்செழியன், அப்படியே கல்லாக மாறி பூமிக்குள் மறைந்தார்.
இந்த நிலையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாள்- பெரியசாமி தம் பதியர் கரூரில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக மதுரைக்கு வந்தனர். வழியில் இருட்டி விட்டதால், மாட்டுத்தாவணி அருகே உள்ள மானகிரியில் தங்கினர். அப்போது வள்ளியம்மாள் கனவில் முனிவர் தோன்றி, “நான் மதுரையை ஆண்ட பாண்டிய நெடுஞ்செழியன். கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்துக்காக மறுபிறவி எடுத்து உள்ளேன். அந்த பாவத்தின் நிவர்த்திக்காக இதே இடத்தில் ஈசனை நோக்கி 8 அடி மண் ணுக்குள் தியானம் செய்து வருகிறேன், என்னை மீட்டு எடுத்து வழிபட்டால், அன்னாரின் குடும்பத்தை சீரும் சிறப்பு மாக வாழ வைப் பேன்” என்று கூறி மறைந்தார்.
அதன் அடிப்படையில் ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடி வள்ளியம்மாள் கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, அங்கே மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்ட ஜடாமுடியோடு சுவாமி சிலை சம்மணம் இட்ட தவக்கோலத்தில் கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து வைத்து கும்பிடத் தொடங்கினார் கள். அப்போது பாண்டி முனீஸ்வரர் ஒருதடவை நேரில் காட்சி தந்து, ‘நான் வெயிலில் காய்கிறேன். மழையில் நனைகிறேன்’ என்று கூறினார்.
அடுத்த நாளே பனை ஓலையால் குடிசை அமைத்து, அங்கு பாண்டி முனீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.
தற்போது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா மண்டபம் கட்டப்பட்டு மிகப்பெரிய கோவிலில் அருள்பாலித்து வருகிறார். முனிவர் வேடத்தில் சிவன் இருந்ததால் முனீஸ்வரன் என்றும் பாண்டிய மன்னன் தான் முனீஸ்வரனாக இவ்விடம் வந்துள்ளேன் என்று அருள் வந்து ஆடிய பெரியசாமி கூறியதாலும் அன்று முதல் இக்கோயில் தெய்வம் பாண்டி முனீஸ்வரர் என்றழைக்கப்பட்டார். இங்கு உலகின் பிற காவல் தெய்வம் போல அல்லாமல், முனீசுவரர் பத்மாசனமிட்டு யோக நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளார்.
இவர் குழந்தை இல்லாதோருக்கு மழலை வரம் தருவது முதல் பேய்& பிசாசு பிடித்தவருக்கு நிவர்த்தி தருதல் வரை, அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைக்கிறார். சிறப்புகள்: இங்கு பாண்டியமன்னன் நெடுஞ்செழியனே தர்ம முனீஸ்வரராக இருந்து ஆட்சி புரிகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மட்டுமின்றி அந்த வழியாக செல்லும் இறைநம்பிக்கையுள்ள பக்தர்களிடம் அதிக திருவிளையாடல்களை நடத்துவார்.
இப்போதும் நிறைய பக்தர்கள் இவரை நேரில் பார்த்து இருப்பதாக சொல்கிறார்கள். பெரும்பாலும் முதியவர் வேடத்தில் தான் பாண்டி முனீஸ்வரர் தோன்றுவதாக மக்கள் கூறுகின்றனர். துயரங்களோடு வரும் உண் மையான பக்தர்களுக்கு வெறும் சிலையாக மட்டும் இன்றி நேரில் வந்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர். இந்த கோவிலுக்கு வந்து முழுமனதோடு வழிபட்டு சென்றால் வெற்றிநிச்சயம். இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று மன பாரங்களை கொட்டுங்கள். உங்கள் துயரங்களில் இருந்து நிச்சயம் பாண்டி முனீஸ்வரர் காப்பார்.
பாண்டி முனீஸ்வரர் கோவிலில் தினமும் காலை, மாலை இருவேளையும் பூஜை நடை பெறுகிறது. பூஜையின்போது எப்போதும் கூட்டம் அலைமோதும். பாண்டி முனீஸ் வரரை மதுரை மட்டுமல்லாது தேனி, விருதுநகர், திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலில் விநாயகர், சமய கருப்ப சாமி, ஆண்டிச்சாமி, சுப்பிரமணியருக்கு தனி சன்னதிகள் உள்ளன. பாண்டி முனீஸ்வரர் வெண்ணிற ஆடை சாத்தி, பால், மணமிகு தைலம், சந்தனம், ஜவ்வாது, பொங்கல் மற்றும் தேங்காய் பழம் போன்றவைகளை கொண்டு வந்து வழிபடுகின்றனர். இங்குள்ள சமய கருப்பசாமிக்கு ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் சாராயம், சுருட்டு போன்றவற்றை படைத்தும் வழிபடுகின்றனர்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி முனீஸ்வரரிடம் வேண்டிக் கொள்வார்கள். கருணை உள்ளம் கொண்ட அவர் மழலைச்செல்வம் கொடுக்கிறார். பல்வேறு வேண்டுதல்களுக்கும் பக்தர்கள் கோவிலில் காணிக்கைகளாக செலுத்திய மணி அங்கு குவிந்து கிடப்பதை காணலாம்.
No comments:
Post a Comment