Tuesday, May 4, 2021

ஐயப்பன் வரலாறு காட்டும் தத்துவம்...

 கடவுளை வணங்குவோருக்கு வேண்டியது கிடைக்கும். அப்படி கிடைத்ததை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் தண்டனையும் உடனே கிடைக்கும்.

சாகாவரம் பெற்றவர்களுக்குக்கூட ஏதோ ஒரு சக்தியால் அழிவு நிச்சயம். நிலையற்றது இந்த வாழ்க்கை. எனவே வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.
சபரிமலை ஐயப்பனின் வரலாற்றில் முதலில் ஆடம்பரமான அரண்மனை வாழ்வு..
இது நிலைத்ததா என்றால் இல்லை. தெய்வப்பிறவியான ஐயப்பனுக்கு கூட இந்த வாழ்வு நிலைக்கவில்லை என்றால் சாதாரண மனிதர்களான நமக்கு மட்டும் நிலைத்துவிடுமா என்ன... எனவேதான் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல எளிமையான ஏற்றத்தாழ்வற்ற சீருடை அணிந்து, ஒன்றுபோல இருமுடி கட்டி, ஒற்றுமையாய் கூட்டமாய் போய் அவனை வணங்கிவிட்டு வருகிறோம்.
ஐயப்பனின் இருகால்களும் கட்டப்பட்டிருப்பதன் ரகசியம் என்ன?
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்றும் நாம் ஐயப்பனை தவக்கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.
ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் அமைப்பு
ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத்தகடுகள் தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ப்புல் போல் இருக்கும். இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது.
அந்த ஓட்டு வீட்டின் முகப்பும் நீட்டிவிடப் பெற்றுச் சாய்ப்பான ஓட்டு வீடு போல்தான் இருக்கும். ஐயப்பனின் முன்னுள்ள ஓட்டுப் பகுதியில் நின்றால் மட்டுமே வெயில் மழை நம்மீது படாது.
உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோவிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோவில் நம் கண்ணில் தென்பட்டு, ‘கண்டேன், கண்டேன் உன் திருக்கோவில்’ என்று கூற வைக்கிறது.
இப்போது உள்ள ஐயப்பனின் திருக்கோவில் பழமையானது அல்ல. பழமையான கோவில் இருந்த இடத்தில் எழுப்பப் பெற்ற கோவிலாகும். 1900 ஆம் ஆண்டில் இத்தலத்தில் ஒரு தீவிபத்து ஏற்பட்டது.
எனவே கோவிலைக் கட்ட அரசு விளம்பரம் செய்தது. கோவில் கட்டும் பணியைப் போளச்சிறய்க்கல் கொச்சும்மன் என்னும் ஒப்பந்தக்காரர் ஏற்றார். 1904 இல் கொல்லம் புதுக்குளங்கரை அரண்மனை வளாகத்தில் கோவில் கட்டும் பணியைத் தொடங்கினார்.
கொல்லம் காயல்கரையில் கோவில் பகுதிகளை இணைத்ததைத் திருவனந்தபுரம் மன்னர் வந்து பார்வையிட்டதும், அவற்றையெல்லாம் பிரித்துப் படகில் கோட்டயம் கொண்டு சேர்த்தனர்.
அங்கிருந்து சாலை வழியாக முண்டக்காயம் சேர்த்து, மேற்குப் பாறைத் தோட்டம் வழியே தலையில் சுமந்து கட்டிடப் பொருள்களைச் சபரிமலைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.500-க்கும் மேற்பட்டோர் நான்கு மாதங்கள் தலையில் இவற்றைச் சுமந்து வந்து சேர்த்தனர்.
கொச்சும்மனே சபரிமலையில் தங்கியிருந்து கருங்கல் பணிகளையும், மரப்பணிகளையும் முடித்தார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, கோவில் கட்டும் பொறுப்பை ஆற்றுக்குழி ராமன் பிள்ளை என்பவரிடம் ஒப்படைத்தார்.
கொச்சும்மனின் மருமகனின் தலைமையில் இந்த வேலையை முடிக்கச் செய்தார். அவருடைய தலைமையில் 1913 இல் திருக்கோவில் பணிகள் முடிவுற்றன.
1950 இல் இக்கோவில் மீண்டும் நெருப்புக்கு இரையாயிற்று. அதனால் புதுப்பித்துக் கட்டினர். இதனால் கோவில் தொடர்பான பல ஆவணங்கள் அழிந்து விட்டன.
பரிமலை செல்லும் பாதையில் உள்ள புனிதமான இடங்கள்
சபரிமலை மட்டும் புனிதமானது அல்ல. அங்கு செல்லும் பாதையிலும் பல்வேறு புனிதமான இடங்களை ஐயப்ப பக்தர்கள் அடைந்து அதன் மகத்துவத்தால் சிறப்பு பெறலாம். அந்த புனித தலங்களின் பெருமைகளைப் பார்ப்போம்.
பேரூர்தோடு :
எருமேலியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றால் பேரூர் தோட்டை அடையலாம். இங்கு நீராடிய பிறகே பக்தர்கள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இங்குள்ள பாறையில் ஐயப்பன் அமர்ந்து இளைப்பாறியதாக கூறப்படுகிறது. சுவாமி உடல் பட்ட இந்த பாறைகளில் பக்தர்கள் அரிசிப் பொடியை தூவி இங்கு வழிபடுகின்றனர்.
காளவெட்டி :
மணிகண்டனுடைய மகிஷி சம்காரத்தை காண பூமிக்கு வந்த பரமேசுவரன் இங்குள்ள ஒரு மரத்தில் தன் காளையை கட்டி விட்டு மகிஷிமர்த்தனத்தை கண்டதாக கூறப்படுகிறது. இங்கு பரமேசுவரன் காளையின் சுந்தரரூபத்தை காணலாம்.
அழுதா நதி :
பம்பா நதியின் ஒரு கிளை நதியாகும் இது. மகிஷி ஐயப்பனால் சுற்றி எறியப்பட்ட போது அவள் விழுந்த இடம் அழுதா. அழுதா நதியில் ஐயப்ப பக்தர்கள் மூழ்கி நீராடுகின்றனர். கன்னி ஐயப்பன்மார்கள் அழுதாவில் மூழ்கி ஒரு சிறிய கல்லை எடுக்கவேண்டும். இதை கல்லிடும் குன்றில் இட வேண்டும்.
கல்லிடும் குன்று :
மகிஷியின் பூத உடலை ஐயப்பனின் பூத கணங்கள் கற்களால் எறிந்து மூடிய இடம். எனவே அழுதையில் மூழ்கி எடுத்த கற்களை ஐயப்ப பக்தர்கள் இங்கு இடுகிறார்கள்.
கரிமலை :
கரிமலை ஏறும் ஐயப்பன்மார் கரிமலை நாதனின் சிலைக்கு மஞ்சள் தூவி வணங்கி கரிமலை இறங்க தொடங்குகின்றனர். மணிகண்டன் தன் திவ்யாஸ்திரம் உபயோகித்து அமைத்த ஒரு நாளும் வற்றாத கிணறு ஒன்று இங்கே உள்ளது.
நீலிமலை :
மகிஷியின் வளர்ப்பு மகளான நீலியின் நினைவாக உள்ள இந்த மலையை வணங்கி கடினமான மலை ஏற்றத்தை ஆரம்பிக்க வேண்டும். இதன் இரு பக்கங்களில் உள்ள ஆழமான பள்ளங்களில் துர்தேவதைகளை வதம் செய்வதற்காக பக்தர்கள் அரிசி உருண்டைகளை எறிவது வழக்கம்.
மகத்துவம் மிக்க சபரிமலை மகரஜோதி
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மகர சங்கராந்தி தினத்தன்று (தை மாதம் 1-ந் தேதி) பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பல லட்சம் மதிப்புள்ள கற்பூரம் கொளுத்தப்படும்.
மாலை 6.40 மணியில் இருந்து 6.50 மணிக்குள் சபரிமலை கோவிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள காந்தமலை பொன்னம்பல மேட்டில் மிகப் பிரகாசமாக ஒளியாக மகரஜோதி தென்படும். இந்த ஜோதியை தரிசனம் செய்யும் லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பும் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷம் விண்ணை அதிர செய்யும்.
பொன்ணம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ ஐயப்பன் அன்று காந்தமலையில் இருந்து சபரிமலைக்கு வருவதாக ஐதீகம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...