சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமி என 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் சேகர் ரெட்டி. துவக்கத்தில் சிறிய கான்ட்ராக்டராக இருந்து, பின்னர் அரசியல் தொடர்புகள் கிடைத்ததும் பெரிய அளவில் உயர்ந்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்குத் தமிழகத்தின் பிரதிநிதியாக சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து பல கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் கிலோ கணக்கில் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.
திருப்பதி தேவஸ்தானத்தின் பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சேகர் ரெட்டி மீது வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அதிமுக முக்கிய புள்ளிகள் பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை அடுத்து, வருமான வரித்துறையினர் இது குறித்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதில், சேகர் ரெட்டிக்கு நெருக்கமானவர் என அறியப்பட்ட முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் பழனிசாமி என முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் உள்ளிட்ட 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அந்த வகையில், அதிமுக.,வில் இருந்து பிரிந்து,
அமமுகவில் சேர்ந்து பிறகு அங்கிருந்து பிரிந்து
திமுக.,வில் இணைந்து தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment