அடுத்தடுத்த திருப்பங்களால் அனல் பறக்கும் பஞ்சாப் அரசியல் களம், நேற்று மேலும் சூடானது. முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நேற்று அதிரடியாக ராஜினாமா செய்தார்.
இவரை தொடர்ந்து, பெண் அமைச்சர் உட்பட ஐந்து மூத்த காங்., தலைவர்கள் பதவி விலகினர். அடுத்த ஆண்டு மாநில சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்., தலைவர் சோனியாவின் முதுகில் ஆளாளுக்கு குத்தி ரணகளம் ஏற்படுத்தி வருவது, காங்.,குக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது.கடந்த சில மாதங்களாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் நிலவி வந்ததை அடுத்து, காங்., தலைமை சமரசம் செய்தது.
எதிர்காலம்
நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் காங்., தலைவராக நியமிக்கப்பட்டார். அமரீந்தர் சிங்குக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சரவையில் 18 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.இந்நிலையில் திடீர் திருப்பமாக, மாநில காங்., தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து நேற்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில் ராஜினாமாவுக்கான காரணமாக அவர் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. 'ஒரு மனிதன் சமரசம் செய்ய துவங்கும் போது அவனது பண்பு வீழ்ச்சி அடைகிறது. பஞ்சாபின் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து எந்த சமரசமும் செய்ய விரும்பவில்லை. காங்கிரசில் என் பணி தொடரும்' என, ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிருப்தி
பஞ்சாப் உள்துறை அமைச்சராக, துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரன்தாவா நியமிக்கப்பட்டது சித்துவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் போலீஸ் டி.ஜி.பி., மற்றும் மாநில அட்வகேட் ஜெனரல் பதவிகள் சித்து பரிந்துரைத்த நபர்களுக்கு வழங்கப்படாமல் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டதிலும், அவர் அதிருப்தியில் இருப்பதால், பதவியை ராஜினாமா செய்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.இது மட்டுமல்லாமல் அமரீந்தர் சிங் அமைச்சரவையில் பதவி வகித்த போது, மணல் குவாரி ஒப்பந்த ஊழலில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த ராணா குர்ஜித் சிங்குக்கு, மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பது, சித்துவுக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.சித்துவின் ராஜினாமா குறித்து முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் சமூகவலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், 'சித்து உறுதியான மனநிலை கொண்டவர் இல்லை. அவர் பஞ்சாப் அரசியலுக்கு ஏற்றவராக இருக்க மாட்டார் என ஏற்கனவே கூறினேன். அதை தற்போது நிரூபித்துள்ளார்' என, குறிப்பிட்டுள்ளார்.சித்துவின் ராஜினாமா செய்தி வெளியான பின், அமரீந்தர் சிங் டில்லி புறப்பட்டு சென்றார். அவர் பா.ஜ.,வில் இணைய போவதாகவும் கூறப்படுகிறது. ''இறுதியான அந்த முக்கிய முடிவை விரைவில் அறிவிப்பேன். சோனியா குடும்பத்தினரை சந்திக்கும் எண்ணமில்லை,'' என, அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்துவின் ராஜினாமா குறித்து முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியிடம் நிருபர்கள் கேட்டபோது, ''அது போன்ற எந்த தகவலையும் கேள்விப்படவில்லை. அது உண்மையானால் சித்துவுடன் அமர்ந்து பேசி நல்ல தீர்வு எட்டப்படும். அவர் எங்கள் கட்சி தலைவர்,'' என்றார்.
சித்துவுக்கு ஆதரவு தெரிவித்து, புதிய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த பெண் அமைச்சர் ராஸியா சுல்தானா உட்பட ஐந்து மூத்த காங்., தலைவர்கள் பதவி விலகி உள்ளனர்.
அமைச்சர் ராஜினாமா
அமரீந்தர் சிங் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஸியா சுல்தானாவுக்கு புதிய அமைச்சரவையில் குடிநீர் வழங்கல், சமூக பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை நேற்று வழங்கப்பட்டது. அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே பஞ்சாப் சட்டசபையில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, சித்து ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நவ்ஜோத் சிங் சித்துவின் ராஜினாமாவை, கட்சி தலைவர் சோனியா ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ''இந்த பிரச்னை மாநில அளவில் பேசி தீர்க்கப்படும்,'' என அவர் தெரிவித்தார்.
பஞ்சாப் காங்கிரசில் நடக்கும் இந்த கோஷ்டி மோதல், சோனியாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் அரசியல் நிலவரம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலும், காங்., - எம்.பி., ராகுல் தன் சொந்த தொகுதியான வயநாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக இன்று புறப்படுகிறார்.
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மின்சாரம், கலால், சுரங்கம், சுற்றுச்சூழல், பொதுத்துறை, பொது நிர்வாகம், நீதி, சட்டம் உள்ளிட்ட 14 துறைகள் முதல்வர் சரண்ஜித் சிங்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. துணை முதல்வரான சுக்ஜிந்தர் சிங்கிற்கு உள்துறை, கூட்டுறவு, சிறைத்துறை ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதல்வரான ஓ.பி.சோனிக்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் மன்பிரீத் சிங் பாதலுக்கு நிதித்துறையும், விஜய் இந்தர் சிங்லாவுக்கு பொதுப் பணித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment