==================
இந்தப் படம்
மரணத்திற்கு நீ கொடுத்த
மாடலாக
இருக்கக்கூடாதா!...
கவிஞர் பழனி பாரதியின் இந்தக் கவிதையில், கண்ணீரிலும் கரைந்துவிடாத ஒரு கதறல் தெரியும்... ஓலத்தை வெளிப்படுத்தாத ஒரு ஒப்பாரி ஒளிந்திருக்கும்...
மேலே சொல்லப்பட்ட "இந்தப் படம்" - நடிகை சில்க் சுமிதா உயிரற்ற உடலாக கிடத்தப்பட்ட படம்... அந்த படத்திற்குதான் பழனி பாரதி தனது கவிதாஞ்சலியை இப்படி செலுத்தியிருந்தார்...
சில்க் சுமிதா... தமிழ்த் திரையுலகில் திடீர் புயலாக மையம் கொண்ட பூந்தென்றல்... ஆடை குறைத்து கவர்ச்சி பதுமையாக திரையில் உலா வந்தாலும், ரசிகர்களின் ஆழ்மனதில் அதிகமாய் பதிந்தவர்...
ஆந்திர மாநிலம் எலுரு என்ற இடத்தில் பிறந்த Vijayalakshmi Vadiapatia தான், பின்னாளில் திரையுலகில் சில்க் சுமிதாவானார். பள்ளிப்படிப்பு கற்றுத்தந்த பாடத்தைவிட, இளமையில் வறுமை கற்றுத்தந்த பாடம்தான் அதிகமாக புரிந்தது... அதனால் 4ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார்... குடும்ப வறுமை அவரை அலைகழித்தது... இயற்கையின் கொடையாக அமைந்த வசீகரத் தோற்றம் வாலிபத்தின் மீது வளமான கவிதைகளை எழுத, சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டார்...
திருமண வாழ்க்கை தந்த தோல்வியின் காயத்தை, திரை வாழ்க்கை என்ற மருந்து ஆற்றும் என நம்பினார்... நிஜ வாழ்க்கையில் இருப்பது போலவே, மேடு பள்ளங்கள் நிறைந்த திரை வாழ்க்கையிலும் சமரசம் செய்து கொண்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்ற தாரக மந்திரம், சில்க் சுமிதாவின் வேத மந்திரமானது... ஒப்பனைக் கலைஞராக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சுமிதா, வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்... வண்டிச்சக்கரம் இவரது வாழ்க்கை சக்கரத்தை மாற்றியமைத்தது... இதன் பிறகே சாதாரண சுமிதா சில்க் சுமிதாவானார்...
வாழ்க்கை என்ற பரமபத விளையாட்டில் பாம்புகள் தீண்டி பாதாளத்தில் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த சில்க் சுமிதாவுக்கு, வண்டிச்சக்கரம் பல புதிய ஏணிப்படிகளை அறிமுகப்படுத்தியது... தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சில்க் சுமிதாவுக்கு வெஞ்சாமரம் வீசப்பட்டது. புகழின் உச்சியில் தடுமாறாமல் முன்னேறிக் கொண்டிருந்தார்...
கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை ஆகிய படங்கள் சில்க் சுமிதாவை வேறு பரிணாமங்களில் படம் பிடித்து காட்டியது. மூன்றாம்பிறை படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து அவர் ஆடிய "பொன்மேனி உருகுதே" பாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் உருகித்தான் போனார்கள்...
தொடர் படப்பிடிப்பு, தொல்லைகளை தற்காலிகமாக தள்ளி வைக்க சமரசங்கள், தீராத மன உளைச்சல்கள், துணை என நினைத்து துன்பத்தை அணைத்துக் கொண்ட காதலால் தோல்வி, புகழ் போதையில் தடுமாறாத சுமிதா, மது போதையில் தள்ளாடியதாக கிடைத்த தகவல் என அனைத்தும் சேர்ந்து அவரது வாழ்க்கைக்கு அவசரஅவசரமாக முடிவுரை எழுதியது... 1996ம் ஆண்டு சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்...
பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு, எதுவுமே நிரந்தரமில்லை... திருமணத்தைக்கூட அவளால் முற்றிலுமாக தீர்மானிக்க முடியவில்லை. சமூகம் என்னும் விலங்குகளால் கட்டப்பட்டிருக்கிறாள் பெண்...
வாழ்க்கையைப் போன்றே மரணமும் நிஜம்... உயிருக்கு ஏற்படும் மரணம், ஒரு நொடியில் முடிந்து போகிறது... ஆனால், மனதிற்கு ஏற்படும் மரணம், பல காலம் கொல்கிறது... சில்க் சுமிதாவின் மனதிற்கு ஏற்பட்ட மரணம்தான், உருமாறி உடலுக்கு வந்தது...
சில்க் சுமிதா முழு உடலையும் போர்த்தியவாறு, கண்களை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு ஒன்றாம் வாய்ப்பாடு சொன்னால், அதுகூட கவர்ச்சியாகத்தான் இருக்கும்... பிரபல வார இதழ் ஒன்றில் வெளியான அரசு பதில்கள் பகுதியில் இடம்பெற்றிருந்ததுதான் மேலே சொல்லப்பட்ட வாசகம்... இது எவ்வளவு உண்மை!...
ரசிர்களுக்கு சில்க் சுமிதா என்ற கவர்ச்சி பதுமை தந்த பிரிவின் வலி வலியது... கொடியது... பிரிவு தவிர்க்க முடியாதது... தாங்க முடியாததும் கூட... சில்க் சுமிதாவின் பிரிவும் இந்த ரகத்தை சேர்ந்ததுதான்...
(பிரபல நடிகை சில்க் சுமிதா நினைவு நாள் செப்டம்பர் 23, 1996 -
No comments:
Post a Comment