உண்மை முயற்சித்து பாருங்கள்...
கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள்.
இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.
அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.
ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும்
பெருமான் திரு முருகப் பெருமான்.
அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், ச ர வ ண ப வ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.
நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது, வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்றால் அமைதிதானே.
இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரஹங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் முகத்தில் தெய்வீக ஒளி வீசும். கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறி வகுத்தளித்தனர்.
முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம்.
இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர்,மிகச்சிறந்த முருக அடியார் என்பது தான் தெரியுமே தவிர, அவர் எங்கு,யாருக்கு மகனாக பிறந்தார்? எப்படியெல்லாம் வாழ்ந்தார்? என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
250 வயது: எனினும், கந்த சஷ்டி கவசப் பாடல்களில் காணப்படும் சில சொல்லாடல்களை வைத்துப் பார்க்கும்போது அவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கணிக்க மட்டுமே முடிகிறது.
மேலும், சஷ்டிகவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6 அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே சஷ்டி கவசங்களை இயற்றினாலும், அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டிகவசம் என்று அழைக்கப்படுகின்றன.
ஆனாலும் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியை நோக்க சரவண பவனார்.. என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்ட கவசம் தான்.
கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு.
பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.
ஒரு சமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை.
வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.
ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார்.
திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார்.
முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான்காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.
சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்... என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்...!
கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை
அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்று வலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.
கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார்.
அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.
No comments:
Post a Comment