Monday, November 15, 2021

திமுகவை வளர்த்த தன்னிடமே திமுக ஆட்சியில் திமுகவினர் 15% கமிஷன் கேட்டா கட்சி எப்படி உருப்புடும்?

 முதல்வருக்கு திமுக நிர்வாகி கடிதம்!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீதி கேட்டு எழுதியுள்ள கடிதம் அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆலங்குடி பகுதியில் திமுகவை வளர்த்த தன்னிடமே திமுக ஆட்சியில் 15% கமிஷன் கேட்கப்படுவதாக அந்த கடிதத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக நிச்சயம் பலவீனம் அடையக்கூடும் என்றும் கட்சி வளராது எனவும் அந்த நிர்வாகி தனது மனக்குமுறலை கொட்டியிருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் திமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்ததுடன் ஆலங்குடி நகர திமுக செயலாளராக இரண்டு முறை இருந்தவர். இதுமட்டுமல்லாமல் ஆரம்பக்காலத்தில் திமுக இளைஞரணி ஒன்றிய அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். மேலும், இவரது மனைவி குமுதவள்ளி ஆலங்குடி பேரூராட்சி தலைவராக கடந்த 1996-2001 வரை பதவி வகித்திருக்கிறார். தலைமை அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் தவறாது கலந்துகொண்டு ஆலங்குடி பகுதியில் திமுகவை வளர்க்க சொந்த நிதியை கணக்கு வழக்கில்லாமல் செலவும் செய்திருக்கிறார்.
இப்படி திமுகவில் ஆஹா ஓஹோவென ஒரு காலத்தில் இருந்த இவர் இப்போது அடிப்படை உறுப்பினராக மட்டும் இருக்கிறார். இந்நிலையில் ஆலங்குடி பேரூராட்சியில் ஓடை பாலம் கட்டுவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டதை அறிந்து 3 ஓடை பாலங்களை கட்ட டெண்டர் போட்டிருக்கிறார். ஒரு ஓடை பாலத்தின் திட்ட மதிப்பு ஒன்றரை லட்சம் என்ற வீதத்தில் மூன்று ஓடை பாலத்தின் திட்ட மதிப்பு நான்கரை லட்சம் என பேரூராட்சி நிர்வாகம் எஸ்டிமேட் கொடுத்துள்ளது.
10 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாக இருந்ததால் எந்தப் பணியையும் எடுத்துச்செய்ய முடியாமல் இருந்த சத்தியமூர்த்தி, இப்போது நடப்பது நம்ம ஆட்சி என்ற அதீத நம்பிக்கையில் அந்த ஓடை பாலங்களுக்கான பணியை தாம் செய்வதாக கேட்டிருக்கிறார். செய்யுங்கள் ஆனால் 15% கமிஷன் கொடுத்துவிட்டு செய்யுங்கள் என செக் வைத்திருக்கிறார் ஆலங்குடி பேரூராட்சி திமுக நகரச் செயலாளர்.
என்னப்பா இது என்னிடமே இப்படி கேட்கிறீர்கள், கட்சிக்காக நாயாக பேயாக உழைத்த எனக்கே இந்த நிலையா என தனது ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.
எனினும் கட்சிக்காரன் என்ற அடிப்படையில் கமிஷன் தொகையை கூட குறைத்துக் கொள்ள மறுத்த ஆலங்குடி திமுக நகரச் செயலாளர் பணம் இல்லை என்றால் வேலை இல்லை என முகத்தில் அடித்தது போல் கூறி அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது உள்ளக்குமுறலை கொட்டித்தீர்க்கும் வகையில் சத்தியமூர்த்தி எழுதியுள்ள கடிதத்தில், ஆலங்குடி பேரூராட்சியில் ஒப்பந்தப் பணிகளுக்கு நான் டெண்டர் போட்டால், 15% தனியாக லஞ்சம் கேட்பதாக தெரிவித்திருக்கிறார்.
மேலிடத்திற்காக பணம் வாங்கியபிறகே டெண்டரை உறுதிப்படுத்த முடியும் என கூறுவதாகவும் தனக்கு தற்போது வயது 67 ஆவதாகவும் தன்னை போன்ற கட்சியை வளர்த்தவர்களுக்கே இந்த நிலை என்றால் திமுக எப்படி வளரும் என கேள்வி எழுப்பியிருக்கிறார். இதே நிலை நீடித்தால் பேரூராட்சி தேர்தலில் திமுக பலவீனம் அடையும் என ஸ்டாலினை அவர் எச்சரித்திருக்கிறார். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மேலிடமாக இருந்தாலும் கூட அவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலினை திமுக நிர்வாகி சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஆலங்குடி திமுக நிர்வாகி சத்தியமூர்த்தி, ''அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறேனோ அது முழுவதும் உண்மை. எனக்கு ஒன்றும் யாரைக் கண்டும் பயம் கிடையாது. நான் யாரிடமும் அஞ்சு பைசா அனாமத்தாக எதிர்பார்க்கமாட்டேன். கட்சிக்காக பல வருஷம் உழைச்சும் நான் எதையும் பெரிசா சம்பாதிக்கலை, என் மகன் படித்து அவர் பெறக்கூடிய ஊதியத்தில் தான் வீடே கட்டினோம். தலைவருக்கு நான் இப்படி ஒரு கடிதம் எழுதியது தெரிந்ததும், பல இடங்களில் இருந்து கட்சியினர் அழைத்து அண்ணே நாங்க சொல்ல முடியாததை நீங்க சொல்லீட்டீங்க எனக் கூறுகின்றனர். தலைவர் இப்போது மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதால் இன்னும் இது அவரது கவனத்துக்கு போயிருக்காது என நினைக்கிறேன் '' என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...