அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் - சசிகலா இடையே நிலவும் அதிகார மோதல் போக்கால், அதிருப்தி அடைந்துள்ள அ.ம.மு.க., மாவட்டச் செயலர்கள் 20 பேர், தி.மு.க.,வுக்கு ஓட்டம் பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சூடாகி உள்ளார்
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரனை, அரசியல் ரீதியாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும், தன்னுடன் சசிகலா அழைத்து செல்வதில்லை. தினகரனின் ஆலோசனையையும் சசிகலா கேட்பதில்லை. சிறையில் இருந்து விடுதலையானதும், தினகரன் மகளின் திருமண நிகழ்ச்சியில் மட்டும் சசிகலா பங்கேற்றார். ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர்., இல்லம், தேவர் குரு பூஜை, தஞ்சாவூர் சுற்றுப்பயணம் போன்றவற்றில் தினகரனை சசிகலா புறக்கணித்தார்.
சசிகலாவின் கணவர் நடராஜனின் குடும்ப உறுப்பினர்களான பழனிவேல், ராமச்சந்திரன் மற்றும் டாக்டர் வெங்கடேஷ், இளவரசி மகன் விவேக் போன்றவர்களின் ஆலோசனையை கேட்டு, சசிகலா செயல்பட்டு வருகிறார்.விரைவில், தென் மாவட்டங்களில், மழை பாதித்த பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கவும் சசிகலா திட்டமிட்டுள்ளார்.
அப்போது அவரை வரவேற்க, அ.ம.மு.க., நிர்வாகிகள் யாரும் செல்லக் கூடாது என, தினகரன் தரப்பிலிருந்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக, அ.ம.மு.க., முக்கிய நிர்வாகிகள் திருவாரூர் காமராஜ், தஞ்சாவூர் சேகர் மற்றும் தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி தி.நகர் வைத்தியநாதன் போன்ற சிலர், சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களாக மாறி உள்ளனர்.
இதனால், சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இடையே அதிகார மோதலும், யாருக்கு அதிக செல்வாக்கு என்ற 'ஈகோ' பிரச்னையும் உருவாகி உள்ளது.இது குறித்து, அ.ம.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:சசிகலாவை புறக்கணிக்க வேண்டும் என்ற தவறான முடிவை, தினகரன் எடுக்கிறார். சசிகலா சிறைக்கு செல்லும் முன் கட்சி பதவி, ஆட்சி பொறுப்பை தினகரனிடம், சசிகலா விட்டு சென்றார். ஆனால், தினகரன் அதை கட்டிக்காக்கவில்லை.
திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க., நிர்வாகியிடம், 'உங்கள் செயல்பாடு சரியில்லை' என, தினகரன் கூறியுள்ளார். அதற்கு அந்த நிர்வாகி, 'நீங்கள் தான் ஆறு மாத காலமாக பதுங்கு குழியில் இருந்தீர்கள். நீங்கள் சொல்லி நான் என்ன செய்யவில்லை என்பதை விளக்குங்கள்' என, சூடாகி உள்ளார்.
ரகசிய பேச்சு
கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் செலவுக்கு, சசிகலா குடும்ப உறுப்பினர்கள் தந்த பணத்திற்கு, அ.ம.மு.க., முக்கிய நிர்வாகிகள் மூன்று பேரிடம் கணக்கு கேட்ட விவகாரமும் பிரச்னையாக வெடித்துள்ளது. இதற்கிடையில், அ.ம.மு.க., நிர்வாகிகள் சிலருக்கு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முக்கிய பதவிகள் வழங்கப்படும் என, தி.மு.க., தரப்பில் ரகசிய பேச்சு நடத்தப்பட்டுள்ளது. சசிகலா, தினகரனை நம்பினால், அரசியலில், இனி தங்களுக்கு எதிர்காலம் இல்லை என கருதும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் உட்பட 20 பேர், தி.மு.க.,வுக்கு ஓட்டம் பிடிக்க தயாராகி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment