சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனு இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
மார்கழியின் சிறப்பு
மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.
மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை , நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்வர்.
நோன்பு காலத்தில் கன்னிப் பெண்கள் திருப்பாவை பாசுரத்தில் இரண்டாம் பாடலில் கூறியபடி நெய் மற்றும் பால் உண்ணாமலும்,கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தகாதனவற்றைச் செய்யாதும், நற்செயல்களில் ஈடுபட்டு எந்நேரமும் இறை சிந்தையுடன் நோன்பை கடைபிடிப்பர்.
No comments:
Post a Comment