கரியையும் சாம்பல் தூளையும் கொடுத்துப்
பல் விளக்கச் சொன்ன போது,
பட்டிக்காடு! என இளித்த பற்கள்-
இன்று, வேரற்றுப் போனபோது-
ஓடுகின்றேன்
சர்வோதயா, காதிகிராப்ட் என,
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
"வெந்தயமும் சிகைக்காயும்
வடிதண்ணீரில் அரைத்துத், தேய்த்துக் குளி"
என்றபோது
பித்துக்குளிகள்!
என எள்ளி நகையாடி,
சிக் ஷாம்பூவைச்
சிக்கெனப் பிடித்து,
இன்று,
வெண்கேசம் வந்தபின்பு
ஓடுகின்றேன்
சிகைக்காய் வாங்க.
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
"பாசிப்பயறோ, கடலைமாவோ
அரைத்துக்குளி!" என்ற போது
லிரில், லக்ஸ் இத்தியாதி,
சினிமா நட்சத்திரங்களின்
அழகு சாதன சோப் என,
அவர்கள் கைகாட்டிய கட்டிகளை எல்லாம் தேய்த்துத், தேய்த்துத்
தோல் சுருங்கி,
நரை, திரை நன்றாய்த் தெரிந்த பின்பு,
ஓடுகின்றேன்
பயத்தமாவு அரைக்க.
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
இருமலோ தும்மலோ வந்த போது,
துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு
எல்லாம் போட்டுக்
கசாயம் தந்த போது,
முகத்தைச் சுளித்து, மறுத்து ஒதுக்கிக்
'காஃப் சிரப்' குடித்து,
தைராய்டு வரை சென்ற பின்பு
ஓடுகின்றேன்
துளசி தூதுவளைச் செடி வளர்க்க!
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
வயிறு வலி என்ற போது
வெறும் வயிற்றில்
வெந்தயக்களியோ
கற்றாழைச்சாறோ
கொண்டு வந்து தந்த போது,
தூக்கி எறிந்து, சீறிச் சினந்து,
ப்ரூஃபென்னும், 'பெயின் கில்லரும்' போட்டு,
கருப்பை பழுதடைந்த பின்பு,
ஓடுகின்றேன்
கற்றாழை வளர்க்க!
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
நல்லெண்ணெய்,
செக்கில் ஆட்டி
மணக்க, மணக்கத் தந்தபோது,
"சன்ஃப்ளவர் ஆயிலைப் பார்!
முகம் காட்டும் தூய்மை!" எனக்கூறி,
முகத்தில் அறையப் பதில் சொல்லிவிட்டு,
இன்று-
வாய்க்கு விளங்காத, வாசமே இல்லாத,
வாழ்வு வந்த பின்பு-
ஓடுகின்றேன்
நாட்டுச் செக்குகளைத் தேடி!
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
மண்பானைச் சமையல்
மண்பானைக் குளிர் நீரை எல்லாம்
மாற்றி விட்டு,
'ஆர்வோ வாட்டர்' எனப்,
புழு, பூச்சி கூட வாழத்தகுதி அற்ற
நீரைக் குடித்துக் குடித்து,
சவமான பின்பு
ஓடுகின்றேன்
மண்பானை வாங்க!
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
படித்த தலைமுறை
எனும் நாகரீகத்தில் திளைத்து,
குருகுலக் கல்வியைக்
கோடி ரூபாய்க் கல்வியாக்கி,
கொல்லைத் துளசி வைத்தியம் மறந்து,
மாடி மேல் மாடி கட்டிக்
குளிரூட்டப்பட்ட அறைகளில்,
லட்ச லட்சமாய்க் கொட்டி,
நடை பிணமாக நடமாடும் நம்மிடம்
"உன் வாழ்வில் ஏது சுதந்திரம்?
ஏது சுகாதாரம்?" என்று,
எங்கோ இருந்து,
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
No comments:
Post a Comment