அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து, முக்கிய துறையான போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ராஜகண்ணப்பனுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த முடிவால், தி.மு.க., மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
அரியலுார் மாவட்டம், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.,வான சிவசங்கர், தி.மு.க., மாவட்ட செயலராகவும் இருக்கிறார். திருச்சி மண்டலத்தில், அமைச்சர் நேருவையும் மீறி, எம்.பி., மத்திய அமைச்சர் என உயர்ந்து, தி.மு.க.,வில் முக்கிய இடத்தை பிடித்தவர் ஆ.ராஜா.பெரம்பலுார் பொது தொகுதியான பின், நீலகிரி எம்.பி.,யானாலும், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களை அடிப்படையாக வைத்துதான் அரசியல் நடத்தி வருகிறார்.
சிவசங்கர் அமைச்சரானதும், ராஜாவின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. இப்போது, போக்குவரத்து துறை எனும் பசையான துறையும் கிடைத்து விட்டதால், சிவசங்கர் பெரும் சக்தியாக வளர்ந்து விடுவார் என, ராஜா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.மத்திய மண்டலத்தில் ஏற்கனவே செந்தில் பாலாஜி, மகேஷ் என, இரு முக்கிய துறைகளின் அமைச்சர்கள் இருக்கும் நிலையில், மூன்றாவதாக சிவசங்கரும் வந்து விட்டதால், நேருவும் அதிருப்தியில் இருக்கிறாராம்.
ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதை, முன்கூட்டியே கணித்திருந்த மூத்த அமைச்சர்கள் சிலரும், போக்குவரத்து துறையை எதிர்பார்த்துள்ளனர். தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக இருக்கும் மகன் ராஜாவுக்கு அமைச்சர் பதவியை எதிர்பார்த்துள்ளார். இது எதுவும் நடக்காததால், அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment