Tuesday, April 5, 2022

இலங்கை அதிபர் கோத்தபய பதவி 'அம்போ?'

 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு பொறுப்பேற்று, 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், நிதியமைச்சரும், தன் சகோதரருமான பசில் ராஜபக்சேவை, அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று பதவி நீக்கம் செய்தார்.


இதனால், சகோதரர்கள் மத்தியில் இருந்த கருத்து வேறுபாடு தற்போது மோதலாக வெடித்துள்ளது. மறுபுறம், எதிர்க்கட்சியினர்மட்டுமின்றி மக்கள் போராட்டமும் தீவிரமடைந்து வருவதால், இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே இழக்கும் சூழல் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில், அன்னிய செலாவணி தட்டுப்பாட்டால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை, பல மடங்கு உயர்ந்தது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. நாடு முழுதும் பல மணி நேர மின் வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகினர். நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, 'பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும்' எனக் கோரி, பொதுமக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




பொருளாதார நெருக்கடி



இதையடுத்து, இலங்கையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி, கடந்த 1ம் தேதி நள்ளிரவு பிரதமர் உத்தரவிட்டார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி, எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்தவை பதவி விலகச் சொல்லி, எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி மக்கள் போராட்டமும் வலுவடைந்தது. இந்நிலையில், மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள், நேற்று முன்தினம் இரவு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மட்டும் பதவி விலகவில்லை.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து, இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள, அனைத்து கட்சி உறுப்பினர்களையும் அடக்கிய கூட்டு அமைச்சரவையை அமைக்க, கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டார். இந்த கூட்டு அமைச்சரவையில் இணைய, அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அதிபரின் அழைப்பை ஏற்க எதிர்க்கட்சியினர் மறுத்துவிட்டனர்.இந்நிலையில், மகிந்த ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த ஜி.எல்.பெய்ரிஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், தினேஷ் குணவர்தனே கல்வி அமைச்சராகவும், ஜான்ஸ்டன் பெர்னாண்டோ நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் நேற்று பொறுப்பேற்றனர்.

இதற்கிடையே, இலங்கை நிதி அமைச்சரும், அதிபரின் சகோதரருமான பசில் ராஜபக்சே, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, இந்திய அரசுடன் பேசி நிவாரண நிதி பெறும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். மேலும், சர்வதேச நிதியத்திடமிருந்து பிணைக் கடனுதவி பெற அமெரிக்கா செல்லவும் திட்டமிட்டிருந்தார். பசில் ராஜபக்சே மீது, இலங்கையின் பொதுஜன பெராமுனா கூட்டணி கட்சித் தலைவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. பசிலை வெளிப்படையாக விமர்சித்த இரண்டு அமைச்சர்கள், கடந்த மாதம் பதவி நீக்கம்
செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று பசில் ராஜபக்சே திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டு, சட்டத்துறை அமைச்சராக இருந்த அலி சப்ரி புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பசில் தான் காரணம் என எதிர்க்கட்சியினர் விமர்சித்ததை அடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நாட்டின் பொருளாதார நிலை வீழ்ச்சி அடைந்த பின், அதிபர் கோத்தபய - நிதி அமைச்சர் பசில் இடையே உரசல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பசில் ராஜபக்சேவின் தவறான நிதி கொள்கைகளும் இந்த கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என, அவரது சகோதரரும், அதிபருமான கோத்தபய உறுதியாக நம்பியதாக கூறப்படுகிறது.இலைமறை காயாக இருந்த இந்த கருத்து வேறுபாடு, பசிலின் பதவி நீக்க நடவடிக்கையால் மோதலாக வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி இழக்கும் நிலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை வட்டாரங்கள் தெரிவித்தன.




போராட்டம்



பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் சொந்த ஊர், தெற்கு மாகாணத்தில் உள்ள தங்கல்லை. சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இங்கு, ராஜபக்சே சகோதரர்களுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. ஆனால் நேற்று ஏராளமான பொதுமக்கள், மகிந்த வீடு முன் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலர், மகிந்த வீட்டின் கேட்டின் மீது ஏறினர். இதையடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.


மத்திய வங்கி கவர்னர் ராஜினாமா



இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் அஜித் நிவர்த் கப்ரால், 67, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் நேற்று அளித்தார். சர்வதேச நிதியத்திடம் இருந்து பிணைக் கடனுதவி பெறும் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்த கவர்னர் அஜித், 2006 - 15 வரை மத்திய வங்கி கவர்னராக பதவி வகித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சரும், எம்.பி.,யுமான இவர், 2021 செப்டம்பரில் தான் இரண்டாவது முறையாக
மத்திய வங்கியின் கவர்னராக பொறுப்பேற்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...