நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவ வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது..
பிறருக்காக இரக்கப்படும் சுபாவம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
பிறரின் கனவுகளை அடைய நாம் உதவினால், நம் இலக்கை நாம் எளிதாக அடைந்து விட முடியும் என்பது இயற்கை விதி.
நம் உதவியால் பிறருக்குப் புதுவாழ்க்கை அமையலாம், செல்வம் சேரலாம், தைரியம் தரலாம், புது நம்பிக்கை அளிக்கலாம்.
இவையெல்லாம் இரக்கத்தின் மூலமாகத் தான் சாத்தியமாகும். பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்வது சிலரின் குணமாகவே கூட இருக்கும்..
உள்ளங்கையில் இருக்கும் விரல்களுக்கிடையே யார் சிறந்தவர்?’ என்ற போட்டி வந்தது..
எல்லா விரல்களையும் விட நான் தான் சிறந்தவன் என்று இறுமாப்புடன் கூறியது கட்டை விரல்.
இல்லை! இல்லை!! மற்ற விரல்களை விட நானே உயர்ந்தவன். எனவே நானே சிறந்தவன் என்று பெருமை கொண்டது நடுவிரல்.
மனிதன் அணிகலனான மோதிரத்தை அணிவித்து அழகு பார்ப்பது என்னைத் தான். எனவே, நானே உயர்ந்தவன் என்றது மோதிர விரல்.
மனிதர்களுக்கு கடைக்குட்டியான செல்லப் பிள்ளைகள் மீது தான் பிரியம் அதிகம்.
எனவே உங்களை விட நான் தான் கடைக்குட்டி. அதனால் செல்லப் பிள்ளையும் நான் தான் என்றது சுண்டு விரல்.
ஆள்காட்டி விரல் மட்டும் எதையும் சொல்லாமல் மவுனம் சாதித்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த உள்ளங்கை, உங்களுக்கு நான் சரியான தீர்ப்பு கூறுகிறேன் என்று விரல்களின் போட்டிக்கு நாட்டாமை ஆனது.
நீங்கள் எல்லாம் யாருடைய கைகளில் விரல்களாக இருக்கிறீர்களோ அவர்களுக்குத் தான் பயன் கொடுக்கிறீர்கள்.
ஆனால் ஆள்காட்டி விரல் மட்டும் திசை தெரியாமல் வரும் பிறருக்கும் அதோ வழி’ எனச் சுட்டிக் காட்டி உதவுகிறது.
பிறருக்கு உதவும் பண்பினை ஆள்காட்டி விரல் கொண்டு இருப்பதால் அதுவே முதலிடம் என்று உள்ளங்கை தீர்ப்பு அளித்தது.
பிறருக்கு உதவுபவர்கள் மட்டுமே என்றும் மற்றவர்களின் உள்ளங்களில் முதலிடம் பிடிக்கிறார்கள்..
பிறரது வளர்ச்சியில் மகிழ்பவன் மனிதன். பிறரது வளர்ச்சிக்கு உதவுபவன் மனிதன்.,
No comments:
Post a Comment