1912- டிசம்பர், -24ல், கேரள மாநிலம் கண்ணனுார் சிறையில் இருந்து விடுதலையாகி வருகிறார் ஒருவர்... அவரை வரவேற்க, ஒரே ஒருவர் மட்டுமே வந்திருந்தார்... விடுதலையாகி வரும் நபர் செய்த குற்றம், ஆங்கிலேயருக்கு எதிராக சரக்கு கப்பல் விட்டது.
அவர் வேறு யாருமல்ல... நாட்டுக்காக தன் சொத்தை இழந்து, இறுதியில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல், மண்ணெண்ணெய் வியாபாரம் செய்து வறுமையில் வாடிய, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் தான். அவரை வரவேற்க வந்திருந்தவர், அவரின் நண்பர் சுப்பிரமணிய சிவா. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு, என்னை மட்டுமின்றி, நியாயம், நேர்மை மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரின் மனதையும், வேதனையில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது வேறு ஒன்றுமில்லை... முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் விடுதலைக்கு, தமிழகத்தில் நடக்கும் கொண்டாட்டங்கள் தான்.
தன் இன மக்களுக்காக போராடி, 27 ஆண்டுகள் சிறையில் இருந்த, நெல்சன் மண்டேலாவிற்கு கூட இப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு கொலை குற்றவாளிக்கு, ஏதோ நாட்டு மக்களுக்காக போராடி சிறை சென்று, விடுதலை அடைந்ததை போல அத்தனை வரவேற்பு. நம் முதல்வர் வேறு, அவரை ஆரத்தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். தவறு செய்தது தன் மகனே ஆனாலும், அவனை தேர்க்காலில் இட்டு தண்டனை வழங்கிய மனு நீதிச் சோழன், தான் தவறாக தீர்ப்பு கொடுத்து விட்டோம் என்பதை அறிந்த அடுத்த நொடியே, 'நானே கள்வன்' எனக்கூறி, உயிரை விட்ட பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் போன்றவர்கள் வாழ்ந்த தமிழகத்தில், முன்னாள் பிரதமர் கொலை வழக்கு குற்றவாளியை, ஏதோ தியாகம் செய்து சிறைக்கு சென்று வந்தவர் மாதிரி சித்தரிக்கின்றனர்.
இனி, அவருக்கு, 'பாரத ரத்னா' விருது கொடுக்க வேண்டும்; ஏன்... 'நோபல் பரிசே' கொடுக்க வேண்டும் என, பரிந்துரை செய்தாலும் செய்வர். ஏனெனில், நாட்டுக்காக அவ்வளவு, 'தியாகங்களை' பேரறிவாளன் செய்துள்ளார். அத்துடன், அவரை ஒரு புனிதராக்கி, வரலாற்று பாடப் புத்தகத்திலும் இடம் பெறச் செய்து விடுவர். இப்படி கொண்டாடுவது, தவறு செய்பவர்களுக்கு, ஒரு தவறான முன்னுதாரணமாகி விடாதா... உண்மையிலேயே தவறு செய்யாமல், எத்தனையோ நிரபராதிகள் விசாரணை கைதி என்ற பெயரில், தங்கள் வாழ்க்கையை சிறையில் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களைப் பற்றி கவலைப்படாமல், கொலை குற்றவாளிக்கு, அரசியல்வாதிகள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். தமிழக மக்களை நம்பி, நம் மாநிலத்திற்கு வந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையானதற்கு, நாம் ஒவ்வொருவரும் குற்ற உணர்வில் தலைக்குனிய வேண்டுமே தவிர, குற்றவாளியை காப்பாற்ற போராடக் கூடாது. ராஜிவுடன் எத்தனை பேர், வாழவேண்டிய வயதில், தங்கள் உயிரை நீத்தனர்... எத்தனை பேர் நிரந்தர ஊனமாகி இன்று வரை அவஸ்தையை அனுபவிக்கின்றனர். இதை எல்லாம் மறந்து, பேரறிவாளன் விடுதலையை, தியாகியின் விடுதலையை போல கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்?
இன்று நீதிமன்றத்திலிருந்து விடுதலை அடைந்திருக்கலாம். 'அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பதற்கேற்ப, குண்டு வெடிப்பில் ராஜிவுடன் இறந்தவர்களின் ஆன்மாவும், நிரந்தர ஊனமடைந்து தினம் தினம் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிரபராதிகளின் சாபத்திற்கும், பேரறிவாளன் நிச்சயம் ஆளாக நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment