Tuesday, May 17, 2022

கழிப்பறைகளை ஆக்கிரமிக்கும் கவுன்சிலர்கள் அடாவடி! தடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாநகராட்சி உத்தரவு.

சென்னை மாநகராட்சியில் உள்ள கழிப்பறைகளை ஆக்கிரமிப்பதில் கவுன்சிலர்கள், ஆளுங்கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும், தள்ளுவண்டி முதல் அனைத்திலும், ஆளுங்கட்சியினர் லஞ்சம் பெற்று அட்டகாசம் செய்வதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை தடுத்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

latest tamil news

ஆறு ஆண்டுகளுக்கு பின், சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு, இரண்டரை மாதத்தை நிறைவு செய்துள்ளனர். ஆறு ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், பழைய கவுன்சிலர்கள், அப்போதைய ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், சில இடங்களில் செல்வாக்கை பயன்படுத்தி, மாமூல் பெற்றனர்.ஆட்சி மாற்றத்திற்கு பின், தி.மு.க., வினர் 'கட்டிங்' பெறுவது அதிகரித்துள்ளது.

புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள், தங்கள் வீட்டு அருகாமையில் ஜல்லி, மணல் போன்றவை கொட்டி வைப்பதற்கும், திட்ட அனுமதிக்கும், தி.மு.க., வட்ட செயலர் மற்றும் கவுன்சிலரின் ஆதரவு தேவைப்படுகிறது.மேலும், சென்னை மாநகராட்சியில் பெருக்கெடுத்துள்ள தள்ளுவண்டி கடைகளை, எவ்வித சிரமமுமின்றி நடத்த, தினசரி 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை மாமூல் வழங்க வேண்டியுள்ளது.

இதைதவிர, ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தம், பூங்கா, விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவற்றையும் அபகரிக்கும் முயற்சியில் தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.சில இடங்களில், மாநகராட்சி சொத்துக்கள் மீது கல்வீச்சு சம்பவமும் நடந்துள்ளது.எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் இருந்தால், அந்த வார்டில், ஆளுங்கட்சியினர் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி, 'கட்டிங்' பெறுவது அதிகரித்துள்ளது.


latest tamil news

தினசரி ஆயிரக்கணக்கான ரூபாய் கொட்டக்கூடிய கழிப்பறைகளை ஆக்கிரமிப்பதில், கவுன்சிலர்கள், ஆளுங்கட்சி வட்ட செயலர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.ஒரு வார்டில் 20 கழிப்பறைகள் இருந்தால், அங்கு கவுன்சிலருக்கு ஒதுக்கீடு, வட்ட செயலருக்கு ஒதுக்கீடு என, தனித்தனியாக ஒதுக்கீட்டுக்கான பேச்சு அவர்களுக்குள் நடந்து வருகிறது. தற்போது மயிலாப்பூர் பகுதியில் இதற்கான பேச்சு துவங்கிஉள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், 102 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், பெரும்பாலான பெண் கவுன்சிலர்களின் கணவர், ஆளுங்கட்சியின் வட்ட செயலராக உள்ளார்.இதனால், அவரே நிழல் கவுன்சிலராக இருந்து, அனைத்தையும் நேரடியாக பார்த்து கொள்கிறார். பெண் கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்திற்கு மட்டுமே, வீட்டை தாண்டி வருகின்றனர்.

அதேநேரம், காங்கிரஸ், வி.சி., கம்யூனிஸ்ட் கட்சியினர் கவுன்சிலராக இருக்கும் வார்டுகளில் தி.மு.க.,வின் வட்ட செயலர்கள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். குழாய் பதிக்க 'ரோடு கட்டிங்'க்கு அனுமதி கோரி சென்றால், கவுன்சிலர் அல்லது வட்ட செயலரை பார்த்தால் தான் வேலை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், கழிப்பறைகள் ஆக்கிரமிப்பை தடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. வாகன நிறுத்தங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கண்காணிக்க உத்தரவு

லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு மாநகராட்சி விடுத்துள்ள உத்தரவு:
 சென்னை மாநகராட்சியில், 866 இடங்களில், 7,471 கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளை, வெளியாட்கள் ஆக்கிரமிப்பு செய்யாமல், சுகாதாரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

 தினசரி ஆய்வு செய்து, கழிப்பறைகளை வெளியாட்கள் ஆக்கிரமித்து கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டோர் மீது போலீசில் புகார் அளித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 மாநகராட்சி இரவு காப்பகங்கள் ஆய்வு செய்தல் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் ஆய்வு செய்து முறைகேடு நடைபெறாமல் தடுக்க வேண்டும்

 மாநகராட்சியின் வாகன பணிமனைகளில் காலை, 6:30 மணியளவில் ஆய்வு செய்வதுடன், பெட்ரோல், டீசல் திருடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

 பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, பராமரிப்பின்றி இருந்தால், ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும்

 மெரினா, பெசன்ட் நகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, அதுபோன்ற முறைகேடுகளை தடுக்க வேண்டும்

 மாநகராட்சியின் மண்டலம், வார்டு அலுவலகங்களில், காலை, பிற்பகல், மாலை நேரங்களில் திடீர் ஆய்வு செய்து, முறையாக வருகை பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டவர்கள் அலுவலகத்தில் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 இதுபோன்ற பல்வேறு பணிகளை ஆய்வு செய்து தினசரி மாலையில், அறிக்கையாக அளிக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...