முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை ஆளும் கட்சியான தி.மு.க.,வும், மற்ற சில அரசியல் கட்சிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றன. அதேநேரத்தில், பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, இந்த வழக்கின் மற்ற ஆறு குற்றவாளிகளான, நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகியோரை, விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்நிலையில், சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தபடி, ஆறு பேர் விடுதலை தொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ராஜிவின், 31வது ஆண்டு நினைவு தினமான நேற்று முன்தினம் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை மட்டும் போதாது, முதல்வர் ஸ்டாலின் அவர்களே!
விதவிதமான கொலை குற்றங்கள், மோசடி, திருட்டு, கடத்தல், கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, செயின் அறுப்பு, பிக்பாக்கெட், பொடா, தடா, போக்சோ, மணல் கடத்தல் உள்ளிட்ட இன்னபிற குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதாகி, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து சிறைகளிலும், விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் அடைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை விடுவிப்பதற்காக, கவர்னரிடம் ஒப்புதல் கேட்டு காலதாமதம் செய்யாதீங்க... நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நேரத்தை விரயமாக்காதீங்க... உங்கள் தந்தை கருணாநிதியின் பிறந்த நாள் அடுத்த மாதம், 3ம் தேதி. அதை முன்னிட்டு, அனைவரையும் விடுதலை செய்யுமாறு, இருகரம் கூப்பி, தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
அதேவேகத்தில், தமிழகம் முழுதும் உள்ள நீதிமன்றங்களையும் கலைத்து விட்டு, நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், கழக உறுப்பினர் அட்டை அளித்து, கழக கண்மணிகளாக மாற்றிக் கொள்ளுங்கள். அதை, இந்த மண்ணுலகம் மட்டுமின்றி, விண்ணுலகமும் பாராட்டும். இதற்கெல்லாம், அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்று நீங்கள் அச்சப்படவே வேண்டாம். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு. அந்த மக்களின் மன விருப்பத்திற்கு ஏற்றபடி தான் நாட்டு நிர்வாகம் நிகழும். இது தான் தமிழக மக்களின் வேண்டுகோள், கோரிக்கை, விருப்பம், விஞ்ஞாபம் மற்றும் அபிலாஷை.
No comments:
Post a Comment