நம் நாட்டு அரசியல்வாதிகளில் சிலருக்கு ஓட்டு வாங்கத் தெரியும்; 'பைல்'கள் பார்க்கத் தெரியாது மற்றும் நிர்வாகத் திறமையும் இருக்காது. சிலருக்கு ஓட்டு வாங்கத் தெரியாது; ஆனால், நிர்வாகத்தில் பைல்கள் பார்க்கத் தெரியும். இரண்டு விஷயங்களிலும் கெட்டிக்காரர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவே.
கடந்த, 1967ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு இதுவே காரணம். காங்கிரஸ்காரர்கள் தாங்கள் செய்த சாதனைகளை மக்களிடம் தெளிவாகவும், அவர்களுக்கு புரியும்படியும் சொல்லவில்லை. ஆனால், திராவிட கட்சியினர், ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பெரிய விழா எடுத்து, மேடை போட்டு பேசி, ஊர் அறிய விளம்பரம் செய்வர். ஒரு ஜூஸ் கடை திறந்தால் கூட, அதையே பெரிய சாதனைகளாக சொல்வர். ஒரு அரசியல்வாதி தன் நிர்வாகத்தை பற்றி மக்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும்.
ஆம், அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு மிக அருமையாக இருந்தது. சமீபத்தில், சென்னையில் நடந்த விழாவில் அவர் பங்கேற்று பேசியது, தெளிவாகவும், கண்ணியமாகவும், கம்பீரமான குரலிலும், கேட்பவர்கள் மனதை தொடும் அளவிலும் இருந்தது. அரசியலில் நிதி அமைச்சர்கள் பேசினால், கேட்பதற்கு போரடிக்கும். அவர்கள் சொல்வது, மிகச் சிக்கலான வரவு - செலவு கணக்கு, யாரும் பொறுமையாக கேட்க விரும்புவதில்லை. நம் நாட்டு அரசியல் மேடையில், ஒருவருக்கொருவர் திட்டியபடியும், ஜாதியை இழித்தும், கிண்டல் கேலி செய்தும் பேசியே பழக்கப்பட்டவர்கள்.
இவர்களில் இருந்து மாறுபட்டவர் நிர்மலா சீதாராமன். அவரின் அருமையான பேச்சு, ஆணித்தரமான வாதம், நல்ல குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு பாராட்டும்படி இருந்தது. எதிர்காலத்தில் பா.ஜ.,வில் இன்னும் சிறப்பான இடத்தில் அவர் இருப்பார். மோடி தேர்ந்து எடுத்தவர்கள் யாரும் சோடை போவது கிடையாது. சிறப்பான நிதி அமைச்சரை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு!
No comments:
Post a Comment