முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் விடுதலையையும், அவரை உச்சி முகர்ந்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாடியதையும் பார்த்து, கூட்டணி கட்சியான காங்., கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அதிலும், குறிப்பாக கீழ்மட்டத்தில் உள்ள காங்., தலைவர்களால், பேரறிவாளன் விடுதலையையும், முதல்வரின் செயலையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெட்கம், சூடு, சொரணை, மானம், சுய கவுரவம், கொள்கைப்பிடிப்பு போன்ற விஷயங்கள், காங்கிரஸ் கட்சியினருக்கு மேடையில் பேச வேண்டுமானால் நன்றாக இருக்கும்; அதை, நிஜ வாழ்க்கையில் கடைப்பிடிப்பது, அவர்களுக்கு நடைமுறைக்கு ஒவ்வாததாகவே இருக்கிறது.
முழங்கால் தேய்ந்து, முதுகு வளைந்து, பலம் குறைந்து, கூட்டணி என்கிற ஊன்றுகோல் புண்ணியத்தில் நடமாடும் காங்கிரசார், தி.மு.க., தலைவரின் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தால், மொத்தமாக காணாமல் போய் விடுவர் என்பது தான் உண்மை. நிலைமை இப்படி இருக்க, காங்கிரஸ் மூத்த தலைவர்களை நொந்து என்ன புண்ணியம்? தி.மு.க.,வினர் என்ன செய்தாலும்,
'ஆஹா... ஓஹோ... பேஷ்... பேஷ்...' என்று, பாராட்டினால் தான் மிச்ச காலத்தையும் ஓட்ட முடியும். என்றோ செத்துவிட்ட தலைவனுக்காக, இன்றைய காரியவாதி தலைவர்கள் தங்கள் பதவி சுகத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்பது தான் நிதர்சனம். இந்த பண வெறி, பதவி வெறி பிடித்து அலையும் பச்சோந்திகளிடம் போய், கொள்கை, கத்தரிக்காய் என்று மக்கள் தேடினால், அது, வடிகட்டின முட்டாள்தனமே!
சங்க காலத்தில், பெருஞ்சித்திரனார் என்ற தமிழ் புலவர் இருந்தார்; ரொம்ப கெத்தாக இருப்பார். வீட்டில் வறுமை தாண்டவமாடினாலும், கெத்தை விட்டுக் கொடுக்க மாட்டார். ஒரு சமயம் வீட்டில் சமைக்க ஒன்றும் இல்லாததால், அவரின் மனைவி, கொல்லை புறத்தில் விளைந்திருந்த குப்பை கீரையை மட்டும் சமைத்து வைத்திருந்தார். சாப்பிட அமர்ந்த பெருஞ்சித்திரனார், தட்டில் வெறும் கீரையை மட்டும் பார்த்ததும் கோபம் அடைந்தார். அவருக்கு அகோரப் பசி. தட்டை துாக்கி எறிந்து விட, கீரை வீட்டுச்சுவர் எங்கும் அப்பிக் கொண்டது. சிறிது நேரம் சென்றதும், அமைதியாய் இருந்த மனைவியை பார்த்து, 'சுவரில் உள்ளதை வழித்துப் போடடி சொரணை கெட்டவளே' என்றாராம். இது எப்படி இருக்கு? அப்படித்தான் இருக்கு... நம்ம காங்கிரஸ்காரர்களின் போலி மிடுக்கும், பொய் தன்மானமும்.
No comments:
Post a Comment